கல்முனையில் திகில் நிறைந்த இரவு 2002 ஜுன் 20 வியாழக்கிழமை

0
261

amparai_17_05_06_01_54464_435அஹமட் எஸ்.முஹைதீன்

கல்முனை மாநகர பஷார் பிரதேசம் அன்று மாலை 6 மணியளவில் வழமைக்கு மாற்றமான மரண பயத்துடன் கூடிய பீதி ஏற்படிருந்தது. அன்றைய தினம் குறித்த நேரமளவில் பல டிப்பர் வாகனங்களில் விடுதலைப்புலிகள் கல்முனை பஷார் பிரதேசத்திற்கு திடீரென வந்து ஆங்காங்கே ஆயுதங்களுடன் கலைந்து நின்றனர்.

இரவு நேரம் செல்லச்செல்ல மேலும் பலர் தமிழ்ப்பிரதேசங்களிலிருந்து படையெடுத்து வந்து கல்முனை நகரை முற்றுகையிட்டனர். அப்போது பஷார் பிரதேசத்திலிருந்த வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று அவர்களை விடுதலைப்புலிகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.

செய்வதறியாது திகைந்திருந்த வர்த்தகர்கள் கல்முனை பொலிஸாரின் உதவியை நாடி அவர்களுக்கு அறிவித்தனர். அக்காலத்தில் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலிலிருந்தபடியால் பொலிஸார் தங்களால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாதென்றும் மேலதிகாரிகளுக்கு அறிவிப்பதாகவும் சொல்லியிருந்தார்கள்.

பொலிஸாரின் உதவி கோரப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், நேரம் செல்லச் செல்ல கல்முனை வர்த்தகர்களிடம் பதற்றமும் மரண பயமும் அதிகரித்துக் கொண்டே போனது. இந்நிலையில், விடுதலைப்புலிகளின் கனிஷ்ட உறுப்பினர்கள் சிலர் கடைகளுக்குள் பலவந்தமாகச் சென்று சில அடாவடித்தனங்களை மேற்கொண்டனர்.

இச்செய்தியானது காட்டுத்தீ போல் பரவியது. கடைகளைக் கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடப் போகின்றார்கள் என்பதை உணர்ந்த பெருமளவிலான கடைக்காரர்கள் கடைகளைப் பூட்டி விட்டு தங்களுடைய வசிப்பிடமான கல்முனை குடியிருப்புப்பிரதேசத்தை நோக்கிச்சென்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் பிரபல கடைச்சொந்தக்கார முதலாலிமார்கள் தங்களுக்கு பெரும் ஆபத்து வரப்போகின்றதென்பதை ஊகித்து அக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடைய அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து கல்முனை நகரில் புலிகளின் அடாவடித்தனம் அரங்கேறிக் கொண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையினைத் தெரிவித்து உடனடியாக தங்களுக்கும் தங்களது வியாபார நிலையங்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தார்கள்.

குறிப்பாக, கல்முனையில் அன்றிருந்த அதி முக்கிய வர்த்தகரான கொழும்பு கோல்ட் ஹவுஸ் ஹாஜியார் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பெடுத்து, புலிகள் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர். இங்கு பெரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. பொலிஸாரும் கைவிருத்து விட்டனர். எங்களையும் இந்த பஷாரையும் இறைவனின் உதவியோடு பாதுகாக்க முன்வாருங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினருடம் தொலைபேசியூடாகப் பேசியிருந்தார்.

இவை எல்லாவற்றையும் செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக கல்முனை பொலிஸாரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, புரிந்துணர்வு சமாதான ஒப்பந்தம் பேணப்படும் நிலையில் பொலிஸார் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாமென்று மேலதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய மேல் மட்டத்துடன் பேசி நடவடிக்கையெடுக்குமாறும் கூறியிருந்தார்கள்.

அதே நேரம் கல்முனையில் விடுதலைப்புலிகள் பூட்டியிருந்த கடைகளை உடைத்து கொள்ளையடிக்க முயற்சிக்கின்றார்கள் என்ற செய்தி பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்தது. இதையடுத்து நிலைமை மோசமடைவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், அன்றிருந்த பாதுகாப்புச்செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ அவர்களை உடனடியாகத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கல்முனை நகர் பல நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த விடுதலைப்புலிகளினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், புலிகள் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்வதாகவும் தெரிவித்து பக்கத்திலுள்ள காரைதீவு முகாமிலிருந்து விஷேட அதிரடிப்படையினரை நகருக்கு அனுப்பி வர்த்தக நிலையங்களையும் மக்களையும் பாதுகாக்குமாறு வேண்டியிருந்தார்.

அதற்கவர் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள காலமென்பதால் தான் பிரதமருடன் கதைத்து விட்டு சொல்வதாகவும் சற்று நேரத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அன்றைய துறைமுக மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களைத் தொடர்பு கொண்டு இங்குள்ள கள நிலவரத்தை தெரிவித்து உடனடியாக பிரதமருடன் இது தொடர்பில் கதைத்து கல்முனை நகரை புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதனை தீவிரமாக செவிமடுத்த தலைவர் இவ்விடயங்களை உடனடியாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார்.

இவ்வாறு நேரம் செல்லச்செல்ல இருள் சூழ்ந்து கொண்டு வரும் நிலையில், தங்களுடைய கல்முனை நகரில் புலிகள் இவ்வாறான அடாவடித்தனங்களை மேற்கொள்வது தொடர்பில் கல்முனையிலுள்ள இளைஞர்கள், பொது மக்கள் வெகுண்டெழுந்து ஆத்திரத்துடனும், ஆவேசத்துடனும் குழுமி இதற்கெதிராக பொங்கியெழுகின்ற ஒரு சூழ்நிலையில், அரச பாதுகாப்புப்படைகளின் உதவி தாமதமாகிக் கொண்டிருப்பது கல்முனை மக்கள் மத்தியில் பதற்றத்தையும் பீதியையும் அதிகரித்தது. இந்நிலையில், விடுதலைப்புலிகளினால் கல்முனை நகர் தீக்கிரையாகப் போகிறது என்ற செய்தி நான்கு திசையும் வேகமாகப் பரவலாயிற்று.

இவ்வாறு இருக்கத்தக்கதாக பாராளுமன்ற உறுப்பினருடைய அலுவலக தொலைபேசிக்கு (கையடக்கத் தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில்) மற்றுமொரு தகவல் வந்தது. மருதமுனையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட நிந்தவூரைச்சேர்ந்த 35 பேரைக்கொண்ட சகோதர, சகோதரிகள் மினி பஸ் ஒன்றில் தங்களது ஊருக்குத் திரும்பும் வழியில் பாண்டிருப்பில் வைத்து விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய உயிருக்கு எவ்வித உத்தரவாதமுமில்லை என்ற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல் பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்தது.

இச்செய்தியானது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. பொறுமை இழக்கின்ற ஒரு சூழ்நிலை மறுபக்கத்தில் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரமும் மக்களும் பயணிகளும்.

இந்நிலையில். அன்றிருந்த அரசின் பதில் தமதமாகி பொறுப்பற்ற முறையில் இருக்கையில், ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் தள்ளப்பட்டார். நகரிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் எல்லோரும் தொலைபேசியூடாக ஆபத்து அதிகரித்துக் கொண்டு செல்வதாகவும் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்யுங்கள் என்ற அவர்களுடைய அபயக்குரல் பாராளுமன்ற உறுப்பினரின் நெஞ்சை உருகச்செய்த ஒரு விடயமாக மாறியது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மீண்டும் தலைவர் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த போது, பிரதமர் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விடுதலைப்புலிகளுக்கெதிராக இராணுவத்தையோ அல்லது அதிரடிப்படையையோ அனுப்பி நடவடிக்கையெடுக்க முடியாது. நடவடிக்கையெடுத்தால் அது சர்வதேச சட்டங்களை மீறுகின்ற செயலாக அமையுமென்று கூறியதாகவும் இது சம்பந்தமாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென்ற விடயத்தை பிரதமர் தெரிவிப்பதாகவும் தலைவர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

பிரதமரின் இக்கூற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கண்டனத்தை தலைவரிடம் தெரிவித்ததோடு, எங்களுடைய மக்களையும் நகரையும் காப்பாற்றுவதற்கு நாங்கள் ஜிஹாத் செய்து மடிய வேண்டியேற்படும் என்று தலைவரிடம் கூறினார்.

அவ்வேளை தலைவர் பாராளுமன்ற உறுப்பினரைப் பொறுமையாக இருக்குமாறு கூறியதோடு, தானும் பிரதமருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகளை தான் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியைப் பெற்று நகரையும் மக்களையும் பாதுகாப்போம் என்றும் தலைவர் கூறினார்.

இதன் பின்பு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அன்றைய பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டிப் பெர்னான்டோ அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பெடுத்து, கல்முனை நகரில் ஆங்காங்கே கடைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மினி பஸ்ஸில் வந்த மக்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் மிகவும் ஆபத்தான கட்டத்திலிருப்பதாகவும் தெரிவித்து, உங்களுடைய பதில் என்னவென்று கேட்ட போது தான் பிரதமர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் போன்ற பலருடன் கதைத்ததாகவும் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த சட்ட விதிகளின்படி விடுதலைப்புலிகளுக்கெதிராக இராணுவ நடவடிக்கையெடுக்க முடியாதென்றும், இது சம்பந்தமாக விடுதலைப்புலிகளுடன் சமாதானமாகப்பேசி நிலைமையை முகாமை செய்து கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர்

அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து புலிகளின் இந்த நடவடிக்கையிலிருந்து வாபஸ் பெறுவதற்கு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்ததோடு. இராணுவத்தையோ அதிரடிப்படையினரையோ ஸ்தலத்துக்கு அனுப்ப முடியாதென்றும் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறும் கூறியிருந்தார்.

தன்னுடைய மக்களும் நகரமும் அழியப் போகின்றது என்ற பெருங்கவலை பாராளுமன்ற உறுப்பினரை ஆட்கொண்டது. தான் நம்பியிருந்த அரசாங்கமும் படையும் கைவிரித்த ஒரு நிலைமை, பாராளுமன்ற உறுப்பினருக்கோ மிகச்சிறிய 29 வயது. புலிகளின் இராணுவ முற்றுகையை முறியடிக்க வேண்டும். ஆனால், கையில் படையில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்து நாங்கள் எங்களுடைய நகரத்தையும் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களையும் கடத்திச்செல்லப்பட்டவர்களையும் ஜிஹாத் செய்து மீட்கப் போகின்றோம். இதற்கான அனுமதியை தாருங்கள் என்ற ஆவேசக்குரல் ஒரு பக்கமும் தங்களுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்ற வர்த்தகர்களின் அபயக்குரல் தொலைபேசியூடாக மறுபக்கமும் ஒலித்துக் கொண்டிருக்கையில். மிக இக்கட்டான ஒரு துர்ப்பாக்கியமான நிலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் அந்த நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தது.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயம் சம்பந்தமாக உலமாக்கள், பெரியோர்களிடம் கலந்தாலோசித்தார். படைகள் கைவிரித்து விட்டதாகவும் தனது மக்களைப் பாதுகாப்பதற்கு தான் ஸ்தலத்துக்கு போகப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

அப்போது அங்கிருந்த எல்லோரும் பாராளுமன்ற உறுப்பினரின் கால்களைப் பிடித்து நீங்கள் தயவு செய்து போகாதீர்கள். உங்களுடைய உயிருக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்று பாராளுமன்ற உறப்பினரை பொறுமை காக்கும்படி சொன்னார்கள்.

இருந்த போதிலும், இப்போராட்டத்தில் தன் உயிர் போனாலும் பரவாயில்லை. தனது மக்களையும் நகரத்தையும் காப்பாற்றியே ஆக வேண்டுமென்பதில் பாராளுமன்ற உறுப்பினர் விடாப்பிடியாக இருந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமாபாத் கிரமமும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் கல்முனை நகரத்தில் இன்னும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் அனைத்து சந்திகளிலும் நிற்பதாகவும் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பதாகவும் பாராளுமன்ற உறப்பினரின் அலுவலக தொலைபேசிக்கு தகவல் வந்தது.

இதற்கு மேலும் பொறுமைகாக்க முடியாதென்ற அடிப்படையில் மலே முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த அன்றிருந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் தொடர்பு கொண்டு பேசினார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி என்பதற்கப்பால் ஒரு சகோதரர் என்ற அடிப்படையில் ஆபத்தில் சிக்கியுள்ள இந்த மக்களையும் நகரத்தையும் காப்பாற்றுவதற்கு கை கொடுக்குமாறு அவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். அதற்கவர் நான் என்ன செய்ய வேண்டுமென வினவினார். பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலிருந்த பொலிஸ் நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரை பொலிஸாரால் அழைத்துச் செல்ல முடியுமா? என பாராளுமன்ற உறுப்பினர் கேட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி ராஜு கூறினார் ‘சேர் நகரம் முழுவதும் விடுதலைப்புலிகள் இருப்பதாக அறிகின்றோம். எனவே, எங்களுடன் நீங்கள் வருகின்ற போது புலிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளலாம். உங்களுடைய உயிருக்கும் உத்தரவாதமில்லை. பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தர முடியாது. உங்களுடைய வாகனங்கள் வந்தால் புலிகள் நிச்சயமாக சுடுவார்கள். எனவே, நீங்கள் வருவதை தவிரத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

ஆனால் தான் வரவேண்டுமென்பதில் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியாக இருந்தார். அதற்கு ராஜு கூறினார் ‘அவ்வாறு வரும் போது உங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தால் என்னை அரசும் பொது மக்களும் தண்டிக்கும்’ எனக்கூறினார்.

அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கூறினார் ‘இந்தக் கட்டத்தில் இம் மக்களையும் நகரையும் காப்பாற்றுவதற்கு செய்கின்ற இம்முயற்சியில் உங்களுடைய பதவிக்கு ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்தால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தாவது உங்களை நான் பாதுகாப்பேன்’ எனக்கூறினார்.

இந்த உத்தரவாதத்தை உலமாக்கள் தன்னை சுற்றி இருக்கின்ற நிலையில், அவர்கள் சாட்சியாக சொல்லுவதாக தெரிவித்தார். எனவே, தன்னை அழைத்துச் செல்வதற்கு நீங்கள் தைரியமாக தனது அலுவலகத்திற்கு வாருமாறு கேட்டுக்கொண்டார்.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு ஒரு மலே முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர் என்பதால் அவருடைய சமூகப்பற்றும் அவருடைய துணிச்சலும் அந்த நிமிடத்தில் அந்த நகரத்தின் தலை எழுத்தை மாற்றுகின்ற ஒரு விடயமாக மாறியது. பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் ராஜு இரண்டு பொலிஸ் வாகனங்களில் பத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினருடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு அலுவலகங்களை வைத்திருந்தார். பிரதான அலுவலகம் பள்ளிவாசல் வீதியிலும் மற்றைய அலுவலகம் கல்முனை பிரதான வீதிக்கருகிகுள்ள ஜி.எஸ் லேனிலும் அமைந்திருந்தது. ஜி.எஸ் லேனிகுள்ள அலுவலகத்திற்கே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு தலைமையிலான பொலிஸார் வந்திருந்தார்கள்.

அக்காலத்தில் அவ்வலுவலகத்தின் செயலாளராக தற்போது லண்டனில் வசிக்கும் எம்.இஸட்.எம். ஐனுடீன் செயற்பட்டார். இதன் போது ராஜு வரும் போது கண்ட காட்சிகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் விபரித்தார். கல்முனை நகரிலிருந்து தரவைக்கோயில் வீதி வரையும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் நிற்பதாகவும் தங்களுடைய பொலிஸ் வாகனத்தை நிறுத்தியதாகவும் தாங்கள் பொலிஸார் என்றவுடன் போவதற்கு அனுமதியளித்தாகவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு அவரது வாகனங்கள் போகும் போது எந்த விபரீதமும் நடக்கலாம். சண்டை ஏற்படலாம். எனவே, கல்முனை நகருக்கு போகின்ற உங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ராஜு கேட்டார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத்தெரிவித்ததோடு, தான் அல்லாஹ்வின் பாதையில் தனது உயிர் போனாலும் பறவாயில்லை தான் போக வேண்டுமென்று வற்புறுத்தலாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினரிடம் அங்கிருந்த உலமாக்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் மிகக் கவலை கொண்டு நீங்கள் போக வேண்டாம் என்று கூறிய போதிலும், அதையும் மீறி துணிச்சலாக தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் 20 பேரளவிலும் ஏனைய அவருடைய நெருங்கிய சகாக்கள் மற்றும் இளைஞர்களுடன் அவருடைய இரண்டு வாகனங்கள மற்றும்; பொலிசாரின் இரண்டு வாகனங்கள் மொத்தமாக நான்கு வாகனங்களில் கல்முனை பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றனர்.

பாராதுகாப்புக்கருதி அவர் பொலிஸ் வாகனத்தில் தனது பாதுகாப்பிற்கான கைத்துப்பாக்கியுடன் சென்றிருந்தார். பொலிஸ் வாகனத்துடன் தொடரணியாக வாகனங்கள் சென்றமையினால் கல்முனை பொலிஸ் நிலையத்தை பாதுகாப்பாக அவர்கள் சென்றடைந்தனர்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ஆகியோருடன் கல்முனையின் தற்போது நிலவியுள்ள பயங்கர நிலமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடினார்.

கல்முனை நகரையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த நடவடிக்கைக்கு பொலிஸார் பூரண ஆதரவை தர வேண்டுமென்றும் இந்நடவடிக்கைக்காக மேலதிகாரிகளின் தடைகளை மீறி நீங்கள் செயற்படுகின்ற போது பொலிஸ் திணைக்களம் ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்தால் அவற்றை தான் முறியடித்துத் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வாக்குறிதியளித்து இம்மக்களையும் நகரத்தையும் பாதுகாக்க தைரியமாக முன்வாருமாறு கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் உத்தரவாதத்தை பொலிஸ் அத்தியட்சகர் நிமால் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு அகியோர்  நம்புவதாகத் தெரிவித்தனர். அக்காலத்தில் 400 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமைக்கு இருந்தார்கள். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜு அவர்கள் எல்லோரையும் அழைத்து கல்முனை நகரில் நடைபெறுகின்ற விடயங்களை பொலிஸாருக்கு உருக்கமாகத் தெளிவுபடுத்தி தங்களுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டுமென்று குறிப்பிட்டார்.

அதன் பின்பு பொலிஸார் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் நடவடிக்கையினை முறியடிப்பதற்கு செயற்படுத்தப்பட்டனர்.  பிரதான குழுவான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்ட ஆயுதம் தரித்த பொலிஸ் குழுவினர் கடைகளை உடைத்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளை முன்னோக்கி நகர்ந்து சென்று சில இடங்களில்  புலிகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள்.

பொலிஸாரின் திடீர்த்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத விடுதலைப்புலிகள் செய்வதறியாது பின்வாங்கிச் செல்லத் தொடங்கினார்கள். அச்சந்தர்ப்பத்தில் நகரின் பாதுகாப்பை பேணுவதற்கு பொலிஸ் குழுவொன்றை நியமித்து விட்டு ராஜுவும் பாராளுமன்ற உறுப்பினரும் இஸ்லாமாபாத் கிராமத்தில் புலிகள் மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவதற்கு நடுநிசி இரவு 2 மணியளவில் அப்பிரதேசத்திற்குச் சென்றனர்.

இஸ்லாமபாத் பகுதிக்குச் சென்ற அக்குழுவினர் அங்கு சூழ்ந்திருந்த விடுதலைப் புலிகளை தாக்கி விரட்டியடித்த பின்னர் அக்கிராமத்தின் பாதுகாப்பை பேணுவதற்கு இன்னொரு பொலிஸ் குழுவை அமர்த்தி விட்டு அப்பிரதான குழுவினர் கல்முனை பொதுச் சந்தை பிரதேச முற்றுகையையும் முறியடித்தனர்.

அதன் பின்னர் இலங்கை போக்குவரத்துச் சபை சந்தியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்த முற்றுகையையும் முறியடிக்கப்பட்டது.

கல்முனை நகரிலிருந்து தரவைக் கோயில் வரைக்கும் பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டு புலிகளை தாக்கி விரட்டியடித்து கல்முனை பஷார் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்கள் வந்தது. அதே போன்று கல்முனை வெஸ்லி கல்லூரியிலிருந்து சி.ரி.பி. சந்தி, ரெஸ்ட ஹவுஸ் வீதி, ஹிஜ்ரா வீதி என்பவற்றுக்கும் பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டு விடுதலைப்புலிகளை துரத்தியடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு நடுநிசி 3 மணி வரையும் கல்முனை நகரை முற்றுகையிட்டிருந்த விடுதலைப்புலிகளை தாக்குதல் நடத்தி அவர்களை பின்வாங்கச் செய்து கல்முனை நகரின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் அன்று கல்முனை பொலிஸார் வெற்றி கொண்டிருந்தார்கள்.

இதற்கான ஆணையினை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு ஆகியோர் வழங்கி பொலிசாரை வழிநடாத்தி இருந்தார்கள்.

அதன் பின்னர் கடத்தப்பட்டவர்களை மீட்கின்ற மிகப்பெரிய பிரதானமான பணியினை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிமால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு ஆகியோர் கலந்தாலோசித்தனர். அப்போது நேரம் நடுநிசி 3.00 மணியாகும். கடத்தப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற தகவலை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ராஜு அவர்கள் புலனாய்வு அதிகாரிகள் ஊடாக பெற்றிருந்தார்.  பாண்டிருப்பின் உட்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் அவர்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. கடத்தப்பட்டவர்களை தனது தலைமையில் சென்று மீட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் ராஜு தைரியமாகச் சொன்னார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினரை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கமைவாக ராஜு தன்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு  குறித்த 35 நிந்தவூர் சகோதர சகோதரிகளையும் மீட்பதற்காக பாண்டிருப்பிலுள்ள விடுதலைப்புலிகளின் முகாமை நோக்கி பயணித்தார்.

அப்பிரதேசமெங்கும் கார் இருள் சூழ்ந்திருந்தது. அங்கு விடுதலைப் புலிகளுடைய ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சமும் கவலையும் இருந்தது.

ஆனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜு அவர்களுடைய துணிச்சலும் தைரியமும் உரிய இலக்கை நோக்கி பயணித்து விடுதலைப்புலிகளின் முகாமை பொலிஸார் சுற்றி வளைத்தார்கள்.

இதன்போது ராஜு முன்னரங்கில் உள்ள சில விடுதலைப் புலிகளை தாக்க ஆரம்பித்தார். இச்சுற்றிவளைப்பை எதிர்பாராத விடுதலைப் புலிகள் பின்வாங்கி முகாமை விட்டு ஒருவழியாக தப்பி ஓடினார்கள்.

இதன் பின்பு அங்கிருந்த கடத்தப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட எல்லோரையும் மீட்டு அவர்கள் பயணித்த மினி பஸ்ஸில் அழைத்துக் கொண்டு கல்முனை டொப் டெக்ஸ் சந்தியில் வந்து இரங்கினார் ராஜு.

அதன்போது அவ்விடத்தில் பாராளுமன்ற உறுப்பினரைக் கண்ட அந்த மக்கள் கண்ணீர் மல்க அழுது பாராளுமன்ற உறுப்பினரின் இந்த உதவியை வாழ்நாளில் ஒருபோதும் எங்கலால் மறக்க முடியாது என்று கூறிய அக்காட்சி அவ்விடத்தில் இருந்த எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது.

மீட்கப்பட்ட அவர்கள் எல்லோரையும் இரவு 3.45 மணி அளவில் கல்முனை நகர பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களை சுபஃ வரையும் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் செய்ததோடு அவர்களை ஆசுவசப்படுத்தி ஆறுதல் கூறினார்.

இவ்வாறு கல்முனை நகர நிலமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.

இந்தச் செய்தி காட்டுத் தீ போன்று கல்முனை மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் பரவியதனால் அங்கு ஆவேசப்பட்டிருந்த இளைஞர்கள், பொது மக்கள் ஓரளவு தனிந்து ஆங்காங்கே சந்திகளில் குழுமி இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினரின் துணிச்சலும் சாதுரியமும் கொண்ட செயலினால் கல்முனையில் ஏற்படவிருந்த பாரிய தமிழ் முஸ்லிம் மோதல் தவிக்கப்பட்டதோடு உடமைகளும் உயிர்களும் பாதுகாக்கப்பட்டது.

கல்முனை நகரில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளுடைய முற்றுகையை முறியடிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் காலை 6.00 மணி வரையும் களத்திலிருந்து பொலிஸாரை வழிநடத்தி கல்முனை நகரை ஆபத்திலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கல்முனை நகரத்தை தொடர்ச்சியாக பாதுகாப்பதற்கான ஆலோசகைகளை பொலிஸாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதன் போது மேலதிக பொலிஸாரை வேறு இடங்களில் இருந்து வரவழைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறப்பினர் சுபஃ தொழுகையை நகரப்பள்ளியில் தொழுதுவிட்டு கடத்தப்பட்ட நிந்தவூர் மக்களை பொலிஸ் பாதுகாப்போடு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பொலிஸ் பொறுப்பதிகாரி ராஜு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ஆகியோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்முனை நகர் சூரையாடப்படவிருந்த ஆபத்தான நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் கடத்தி கொலை செய்யப்படவிருந்தவர்களை காப்பாற்றுவதற்கும் துணைபுரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றியுடையவராக பாராளுமன்ற உறுப்பினர் காலை 6.30 மணியளவில் தனது அலுவலகத்திற்கு பயணமானார்.

இதை அறிந்த அன்றை கால இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை சூழ்ந்து அவரின் துணிச்சலான நடவடிக்கையினை பாராட்டினார்கள். அத்தோடு இனி மேலும் அரச படைகளை குறிப்பாக இராணுவத்தை நம்பமுடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்திலும் எமது ஊர்களிலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ நடக்கலாம். அந்த வகையில் நாங்கள் எங்களுடைய ஊர்களை பாதுகாப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனவே பிரதமருடம் கதைத்து ஊர்காவற்படை என்ற அடிப்படையிலாவது எங்களுக்கு ஆயுதங்களைப் பெற்றுத் தாருங்கள் என்று ஆவேசமாக கூறினார்கள். அவ்வேளை இது சம்பந்தமாக தலைவர் மற்றும் பிரதமருடனும் நிச்சயமாக கதைத்து எங்களுடைய பாதுகாப்புக்கு ஆயுதங்களை வழங்கும்படி வேண்டுகோள்விடுப்பதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்திலிருந்த சென்றார்.

இந்த இரவு கல்முனையின் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு திகில் நிறைந்த மிகப்பெரிய ஆபத்தான இரவாகும். இன்றும் இதனை அந்தப் பிரதேசத்தின் வர்த்தகர்கள், பொதுமக்கள்,இளைஞர்கள் மறக்கமாட்டார்கள் என்பது வெள்ளிடை மலையாகும்.

இதுபோன்று கிழக்கு மாகாணத்தின் மூதூர் உள்ளிட்ட பல ஊர்கள் ஆபத்து நிறைந்த இரவுகளைச் சந்தித்தது. அவற்றின் தொகுப்பும் வெகுவிரைவில் பதிவிடுவோம்.

ஏ.எம்.சலீம்
101 சாஹிபு வீதி
கல்முனை – 06.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here