கட்சியை நம்பி ஆட்டோவை இழந்து நிற்கும் போராளி: மூன்று பச்சிளம் குழந்தைகளோடு கண்ணீர் வடிக்கும் தாய்: அநீதிக்கு தீர்வென்ன?

0
271

indexபொத்துவில் மகன்

மூன்று பச்சிளம் குழந்தைகளோடு கண்ணீர் வடிக்கிறார் பொத்துவில்லைச் சேர்ந்த தாய் ஒருத்தி. அரசியல்வாதிக்குப் பின்னால் இனி யாரும் செல்லாதீர். உங்கள் கணவன்மார்களை அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அனுப்பாதீர்கள். இன்று எனக்கு நடந்த நிலை தான் நாளை உங்களுக்கு நடக்கலாம் எனத்திட்டி கதறியழுகிறார்.

கண்ணால் காணக்கிடைத்த பதிவிது.

என் கணவர் கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்தார். எனக்கு மூன்று பிள்ளைகள் உட்பட நானும் எனது கணவனும் மாமியாரும் சேர்ந்த 6 பேரைக்கொண்ட எங்கள் குடும்ப வாழ்க்கையை எனது கணவர் ஆட்டோ ஓட்டியே கொண்டு சென்றார்.

இவர் ஒரு சமூக சேவகருமாவார். அதனடிப்படையில், கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பொத்துவிலுக்கு ஒரு எம்பி கிடைக்குமென்ற நம்பிக்கையில் அக்கட்சிக்கு வேலை செய்தார்.

இத்தோடு, தான் உழைத்து வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொண்ட ஆட்டோவையும் அவர் கட்சிக்காக போஸ்டர் ஓட்டும் பணிக்காகக் கொடுத்திருந்தார். அந்த ஆட்டோவை தவணைக்கட்டண முறையில் வாங்கிய கதை கண்ணீர்க்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்சிக்கு உண்மையான ஒரு போராளியாக எனது கணவன் செயற்பட்டார். சில அரசியல் தந்திரங்களினாலும் அவர் பொலிஸில் கூட கைதாகி இரண்டு முறை அடைக்கப்பட்டார். இவ்வாறு அந்த ஆட்டோவில் கட்சியின் மற்றுமொரு போராளியினால் போஸ்டர் கொண்டு செல்லப்பட்ட போது, பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். ஆட்டோ சுமார் இரண்டு மாதங்கள் நீதிமன்றிலே கிடந்தது. பின்னர் விடுவிக்கப்பட்டது.

நீதிமன்றில் இருந்த காலமும் கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த காலமும் அதற்கு முன்னர் ஒரு மாதம் பிஃனான்ஸ் கட்டுப்படவில்லை. மொத்தமாக நான்கு மாதக்கட்டணம் செலுத்தப்படாமையினால், ஆட்டோ நீதிமன்றிலிருந்த விடுவிக்கப்பட்ட தினமே பிஃனான்ஸ் கம்பெனியினால் தூக்கிச்செல்லப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை என் குடும்பச்சுமை அதிகமே. ஆறு பேரும் படாத கஸ்டமில்லை. இருக்க வீடும் இல்லை.

என் கணவர் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருமாவார். அவர் வெளிநாடு செல்லவும் முடியாதுள்ளது. அது போல் பாரமான வேலைகளையோ வெயிலில் நின்று வேலை செய்யக்கூடிய நிலையிலும் அவர் இல்லை. அவ்வாறான நிலையிலயே தனது குடியிருந்த வளவை வைத்து ஆட்டோவைப்பெற்று அதனூடாக தொழில் செய்து வாழ்ந்து வந்தோம். இன்று குடியிருக்க வீடும் இல்லை. ஆட்டோவும் இல்லை எனற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தக்கட்சிக்கு என் கணவர் வேலை செய்து தனது ஆட்டோவை இழந்தாரோ, அதன் பின்னணியிலேயே  குடியிருந்த வீடு வளவை இழந்த கதையை குறித்த கட்சியிடம் தெரிவித்தோம். எனது கணவர் கடன்பட்டு காசி பெற்று தலைவரைச் சந்திக்க எத்தனையோ முறை சென்றிருந்தார். எத்தனையோ தடவைகள் கடிதங்கள் கொடுத்திருந்தார். எங்களது நிலையை சிறிதேனும் கணக்கெடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல, துபாய் நாட்டு உதவியினால் கிடைக்கப்பெறும் வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டது. இது வீடில்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட வந்த வீடாகும். அதை தகுதியான ஏழைகளுக்கு வழக்குங்கள். தற்போது நானும் ஒரு ஏழை தான்.

கட்சிக்காக இழந்த ஆட்டோவுமில்லை. அந்த வீட்டிலாவது ஒன்றை எங்களுக்கும் தந்தால், அல்லாஹ் நன்மையைத் தருவான். எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வீட்டில் எனக்கும் ஒரு வீட்டைப் பெற்றுத்தாருங்கள் என அதற்குப் பொறுப்பான ஒருவரிடம் என் கணவர் கேட்டிருந்தார்.

அதற்கு அவரின் பதில், இந்த வீடு உங்களுக்கு சரி வராது. அதை விட நல்ல வீடு வரவிருக்கிறது. இருங்கள். இதற்கு நீங்கள் அலையாதீர்கள் என்று சொன்னார். இது எந்த வகையில் நியாயம்?  சொல்லுங்கள் மக்களே!

நானோ, என் கணவரோ அந்த வீட்டையும் கேட்கக்கூடாது. அவர்களே எங்கள் நிலையறிந்த தர வேண்டியவர்கள். எனது கணவர் அவ்வாறு அவர்களோடு செயற்பட்டிருக்கின்றார்.

அது மட்டுமல்ல, குறித்த வீடு பிரதேச செயலகத்தினால் பாதியும் குறித்த பொத்துவில் பொறுப்பாளரினால் பாதியும் வழங்கப்படவுள்ளது. அதையும் என் கணவர் இப்படியாமே என்று கேட்டிருந்தார். அதற்கும் பல காரணங்களைச் சொல்லி அப்படியில்லையென திருப்பியனுப்பி விட்டார்கள். அவர்களின் திட்டம் தான் என்ன?

இவ்வாறு பேசுபவர்கள் தகுதியான ஏழைகளுக்கு அந்த வீட்டை வழங்குவார்களா? அது ஒரு பக்கம் இருக்க, தலைவரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்துக்கு அவரால் வழங்கப்பட்ட பதில்கள் என்ன? கட்சிக்காக பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு கட்சி வழங்கும் நலத்திட்டம்கள் தான் என்ன?

இனியும் இவர்கள் எங்கள் மீது கருணை காட்டமாட்டர்கள் என்பது பொத்துவிலுக்கு அவர் வருகை தந்த போது உணர்ந்து கொண்டோம். அவர்கள் இதுவரை வழங்கிய பதில்களில் கண்டு கொண்டோம்.

இதற்குத்தானா நாங்கள் வாக்களித்தோம்? என அவரைப்பார்த்து என் கணவர் கேட்டதும், உன் வாக்கு எனக்கு எதற்கு உங்க ஊர் வாக்கு எனக்கு எதற்கு? என்று கேட்டார்கள். இப்போ சொல்கின்றேன் கூலிகளே உங்கள் ஓட்டு எதற்கு என்று தானே கேட்டீர்கள்? வரமாட்டீர்களா? நடு வீதியில் நின்று வாயால நுரை கக்க கக்க வாக்குப்பிச்சை கேட்டு அழமாட்டீர்களா? கடந்த உங்கள் சொப்பின் பேக்கு கதையையும் படகுக்கதையையும் சொல்லி அழுது என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று என் ஊர் பொத்துவில் வந்து கேட்கமாட்டீர்களா?

நான் உயிரோடு இருந்தால், என் வாசலோ அல்லது என் குடும்பத்தினர் வாசலிலோ உங்கள் கூலிகளும் நீங்களும் வரமாட்டீர்களா? அந்த நேரம் நான் என்ன செய்வது? என்ன செய்யனும் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

எனது தொழுகையில் கண்ணீர் வடித்து அநீதிக்கு அழிவைக்கொடுக்க பிரார்த்தனை செய்வேன். அநீதிக்காரன் சாகக்கூடாது அனுபவிக்கனும் என்று பிரார்த்திப்பேன். என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதா?.

அரசியல்வாதிகளே. உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படாதா? உங்கள் அதிகாரம் பறிக்கப்படாதா? ஐந்து வருடத்துக்கொரு முறை தேர்தல் வந்து தானே ஆகனும். அந்த நேரம் அதிகாரமின்றி நிற்கமாட்டீர்களா? அந்த நேரம் என்னிடம் நீங்கள் வாக்குப்பிச்சை கேட்கமாட்டீர்களா? மன்றாடமாட்டீர்களா?

இன்று உங்கள் அரசியல் அதிகாரத்தினால் எங்களை ஓரங்கட்டுகின்றீர்கள். அந்த அதிகாரத்தை எங்கள் சமூகம் தான் கொடுத்தார்கள். நாங்கள் தான் தந்தோம் என்பதை மறந்து விட்டீர்களா? கண் கெட்ட உங்கள் மனச்சாட்சியில் எங்களுக்கு தீர்வில்லையா?

என் கணவர் உங்கள் வெற்றிக்காக எத்தனை முறை சாப்பிடாமல் என் குழந்தை அழுகின்ற நேரம் அந்தக்குழந்தையை தூக்காமல், கொஞ்சாமல் நித்திரையில்லாமல் குந்தியிருந்து முகநூலிலும் இணையத்திலும் பிரசாரம் செய்தாரே. அவருக்கா நீங்கள் இப்படிச்செய்தீர்கள்? அப்படிச்செய்த என் கணவருக்கு நீங்கள் கூலி தான் கொடுத்தீர்களா?

இல்லை. ஒரு மாத மின் கட்டணத்தையாவது செலுத்தி உதவியிருக்கின்றீர்களா? இல்லை. ஒரு மாதத்தின் வைபை பில்லையாவது கட்டி உதவியிருக்கின்றீர்களா? கொம்பியுட்டருக்கு முன் குந்தி இருந்து கொண்டு ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?  அப்படியென்ன செய்கின்றீர்கள் என்று என் கணவரை நான் திட்டியிருக்கிறேன். அந்த நேரம் உங்களைச் சொல்லி ஒரு தொழிலாவது தருவாரடி என்று, எனக்கு ஏசி சண்டை பிடித்துச் சென்றிருக்கின்றாரே அவருக்கா நீங்கள் இப்படிச் செய்தீர்கள்?

போஸ்டர் ஒட்டனும். ஆக்கள் கிட்ட போய் கட்சிக்கு வோட் போடச் சொல்லனும்னு போவார். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகே வருவார். அந்த நேரம் என் குழந்தைகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கும். அதைக் கொஞ்சம் சிந்தித்துத்தான் இப்படிச் செய்தீர்களா? இவ்வாறு போராளிகளைப் பயன்படுத்தி தான் அரசியல் செல்வாக்கை எடுத்துச்செல்வதில் என்ன நியாயம்?

என் இரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இவர்களின் எதிர்கால நிலை என்ன? இவர்களின் கல்விக்கு நான் என்ன செய்வேன்? நாங்கள் எவ்வாறு வாழ்வது என்ற எனது கேள்விக்குறி இன்று சாவை மட்டும் நினைக்கின்றது. ஏன் இந்த பொய்யான உலகில் வாழ வேண்டுமென்று கடைசி முடிவுகளை குடும்பத்தோட இணைந்து செத்து மடியச்  சொல்கின்றது என்று கண்ணீர் விட்டு அழும் இந்த ஏழைத்தாயின் கண்ணீரை என் கண்களால் காணவும் கேட்கவும் முடிந்தது.

ஆகவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் கட்சிக்காக பாடுபட்டு, பாதிக்கப்பட்டு நடு வீதிக்கு குடும்பத்துடன் வந்துள்ள குறித்த போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டுமென்பதுடன், அவரது வாழ்க்கையைக் கொண்டு நாடாத்தத் தேவையான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் அவசியமாகும்.

இவ்வாறான அடிமட்ட போராளிகளின் தியாகத்திலும் அர்ப்பணிப்பிலும் தான் கட்சியின் வளர்ச்சியும் வெற்றியும் தங்கியுள்ளதென்பதை குறித்த கட்சியில் தலைமைத்துவம் உணர வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள போராளிகளுக்கும் விடிவு கிடைக்க வேண்டும் எனும் நோக்கிலுமே இதனை இங்கே பதிவிடுகின்றோம்.

இவ்வாறு எத்தனை போராளிகள் சந்தர்ப்ப அரசியல்வாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? இந்த ஏழைக்கண்ணீரைத் துடைப்போம் ஒன்றுபடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here