சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக்கோரிக்கையைப் போலவே மல்வத்தைக்கான பிரதேச சபைக்கோரிக்கையும் நீதியானது!- விருட்சமுனி

indexரி.தர்மேந்திரன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பழம்பெரும் தமிழ்க்கிராமங்களில் ஒன்று மல்வத்தை. மல்வத்தை கிராமத்தை மையமாக கொண்டு பிரதேச சபையொன்றை அமைத்துத்தர வேண்டுமென்று இக்கிராமத்தையும், அண்டிய கிராமங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கோரி வந்திருக்கின்றனர்.

ஆயினும், அரசாங்கங்களும் சரி, தமிழ் பேசும் தலைமைகளும் சரி இவர்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தி நடந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், அண்மைய வருடங்களில் இக்கோரிக்கைக்கான கோஷங்கள் நீறு பூத்த நெருப்பாக அடங்கி கிடந்தன.

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கை ஆட்சியாளர்களால் நிறைவேற்றி கொடுக்கப்படுகின்ற தறுவாயை அடைந்த போது, மல்வத்தைக்கான பிரதேச சபைக்கோரிக்கையும் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

மல்வத்தையை மையமாகக் கொண்டு கிராம சபையொன்று 1987 ஆம் ஆண்டு வரை இயங்கியுள்ளது. ஆனால், அக்கிராம சபைக்குட்பட்டிருந்த பல தமிழ்க்கிராமங்கள் பின்னர் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் பெறப்படாமல், சம்மாந்துறை பிரதேச சபையுடனும், நாவிதன்வெளி பிரதேச சபையுடனும் இணைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்தே அக்கிராம சபை செயலிழந்து போனது. ஆனால், அரச நிர்வாகத்தை மக்களின் காலடிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற அரச கொள்கையின் அடிப்படையில் மல்வத்தை, வீரமுனை, மல்லிகைத்தீவு, புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, புதுவளத்தாப்பிட்டி. வள்ளுவர்புரம், தம்பிநாயகபுரம், வீரச்சோலை ஆகியன அடங்கலான தமிழ்க்கிராமங்களைச் சேர்த்து பிரதேச சபை உருவாக்கி தரப்பட வேண்டுமென்று கோரப்பட்டு வருகின்றது.

மல்வத்தையும் இதைச்சார்ந்த தமிழ் கிராமங்களும் 32 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இருபதாயிரத்துக்கும் அதிகமாக சனத்தொகையையும் கொண்டுள்ளன. இலங்கையில் இதைவிட சிறிய பரப்பளவையும், குறைந்த சனத்தொகையையும் கொண்ட பல இடங்களுக்கு தனியான பிரதேச சபைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரை இறக்காமம் பிரதேச சபை இதற்கு மிக நல்ல உதாரணமாக கண் முன் உலாவுகின்றது. ஆனால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக் கோரிக்கையை போலல்லாமல், மல்வத்தைக்கான பிரதேச சபைக்கோரிக்கை கண்டு கொள்ளப்படாமலும், கவனிப்பாரற்றும் இருந்து வருவதற்கு தமிழ்த் தலைமைகளின் அலட்சியமும், அசமந்தப்போக்குமே பிரதான காரணங்களாகும்.

ஏனென்றால், தமிழ்த்தலைமைகள் குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்புத் தலைவர்கள் இக்கோரிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கண்டு கொள்ளவுமில்லை. கவனத்திலெடுக்கவுமில்லை. இவர்கள் கண்டு கொண்டு, கவனத்திலெடுத்திருந்தால் தானே குறைந்த பட்சம் இதை முக்கியத்துவப்படுத்த வேண்டும். முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செய்திருப்பார்கள்?

ஆனால் விதிவிலக்காக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா மாத்திரம் மக்களோடு ஒன்றித்து நின்று மல்வத்தைப் பிரதேச சபைக்கான கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றார். இக்கோரிக்கையை நிறைவேற்றி தர அரசாங்கத்துக்கு அழுத்தங்கொடுக்கக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக இருந்த மாவை சேனாதிராசாவுக்கு 2010 ஆம் ஆண்டு கடிதமெழுதி இருக்கின்றார்.

அதே போல, 2012 ஆம் ஆண்டு அம்பாறை கச்சேரிக்குச்சென்று எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்பாக இப்பிரதேச சபைக் கோரிக்கையின் நியாயத்தையும் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார். அடிக்கடி பொது மேடைகளில் பேசி வருவதுடன், பத்திரிகைகளுக்கு அறிக்கைகளும் விட்டு வருகின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் தலைமைகளும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பெருந்தேசியக் கட்சிகளுடன் ஒட்டி நிற்கின்ற முஸ்லிம் தலைவர்களும் சரி கட்சி அரசியலைக் கடந்து சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை அடைய பகீரதப் பிரயத்தனங்களை முடுக்கி விட்டிருந்தனர் என்பதும், இதனால் தான் சாய்ந்தமருது பிரதேச சபைக்கான பிரகடனம் இரு மாதங்களுக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படத் தயாரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்பிரதேச சபையின் உருவாக்கத்தில் பங்கும் பங்களிப்பும் வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளையும் கௌரவிக்க சாய்ந்தமருது மக்கள் ஆயத்தங்கள் மேற்கொண்டிருந்தனர். தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் நடத்துனர் ஹசன் அலியை சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரு தொகை பிரமுகர்கள் இது தொடர்பாக சந்தித்துப் பேசிய போது, ஹசன் அலி இதை ஒரு அரசியல் விழாவாக நடத்த வேண்டாமென்று கோரியதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடங்கலாக இப்பிரதேச சபையின் உருவாக்கத்துக்கு பாடுபட்ட முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து கௌரவியுங்கள் என்று கண்டிப்பாகக் கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.

ஆனால், கடைசி நேரத்தில் சாய்ந்தமருது பிரதேச சபையின் உருவாக்கம் கிடப்பில் போடப்பட்டது. எவரும் எதிர்பார்த்திருக்காத திருப்பமாகும்.

சாய்ந்தமருது தற்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமமாகும். இந்நிலையில், கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளனம் சாய்ந்தமருது பிரதேச சபைக்கான வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்படத் தயாராகியுள்ளது என்கிற தகவலை அறிந்தவுடன் அவசரமாக கொழும்புக்குச் சென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோரைச் சந்தித்து கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை அமைத்துக் கொடுக்கப்படுவது அநீதியென்று கடுமையான ஆட்சேபனையொன்றை முன்வைத்தது.

அதாவது 1897 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை கல்முனையில் 04 உள்ளூராட்சி சபைகள் இயங்கின என்றும், கல்முனை பட்டிண சபை கல்முனையிலும், கரைவாகு தெற்கு கிராம சபை சாய்ந்தமருதிலும், கரைவாகு வடக்கு கிராம சபை  மருதமுனை, பாண்டிருப்பு போன்றவற்றைச் சேர்த்ததாகவும் கரைவாகு மேற்கு கிராம சபை சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்றவற்றைச் சேர்த்ததாகவும் இயங்கின என்றும், இந்த 04 உள்ளூராட்சி சபைகளையும் சேர்ந்த மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியவற்றைப் பெறாமல் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டு பின் அது நகர சபையாகவும், அதன் பின் மாநகர சபையாகவும் மாற்றம் பெற்றதென்றும் எடுத்துரைத்தது.

எனவே, கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை கொடுக்கப்படுவது மற்றைய மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாக இருக்குமென்று வாதாடியதுடன், பண்டைய 04 கிராம சபைகளுக்கும் மாற்றீடாக, 04 பிரதேச சபைகளை வழங்குவதே அனைத்து மக்களுக்குமான நீதியாக இருக்குமென்று தீர்வு யோசனையை முன்வைத்தும் இருந்தனர்.

இவர்களுடைய நிலைப்பாட்டிலிருந்த நியாயங்களை மூன்று அமைச்சர்களும் ஏற்று கொண்டனர். கல்முனை மாநகர சபையைப் பிரித்து 04 பிரதேச சபைகளைக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பார்கள் என்று உறுதிமொழி வழங்கினர்.

இந்நிலையிலேயே சாய்ந்தமருது பிரதேச சபையை பிரகடனப்படுத்துகின்ற வர்த்தமானி வெளிவரவே இல்லை. கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளன முக்கியஸ்தர்களில் ஒருவர் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவரான ஷாபி ஹாத்திம். இவருடைய தந்தை கே. கே. மரைக்கார் கல்முனை பட்டிண சபைத்தலைவராகப் பதவி வகித்தவர்.

ஹாத்திம் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில், சாய்ந்தமருது மக்களின் பிரிந்து செல்கின்ற உரிமையை கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளனம் மறுக்கவே இல்லை. ஆனால், சாய்ந்தமருது மக்களுக்கு மாத்திரம் பிரதேச சபை கொடுக்கப்படுவதை அனுமதிக்கவே முடியாதென்றார்.

இவருடைய கருத்துப்படி றிசாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் 04 பிரதேச சபைகளையும் அமைத்துத்தர தயாராகவுள்ளனர். ஆனால், ரவூப் ஹக்கீம் நழுவல் போக்கைக் கைக்கொள்கின்றார். இவ்விடயத்தில் ரவூப் ஹக்கீமுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம். பியும், கல்முனையைச் சேர்ந்தவருமான விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸ் ஒத்து ஊதுகின்றார் என்றும் ஹாத்திம் கூறினார்.

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் பிரிந்து செல்ல வேண்டுமென்றும் சம்மாந்துறை பிரதேச சபையிலிருந்து மல்வத்தையையும், அண்டிய இடங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் பிரிந்து செல்ல வேண்டுமென்றும் விருப்பங் கொண்டிருப்பதற்கிடையில் அடிப்படையில் ஒரு வித்தியாசமுள்ளது.

கல்முனை, சாய்ந்தமருது ஆகிய இடங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரதேசவாதம் தலை விரித்தாடுகின்றது. கடந்த கல்முனை மாநகர சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட சிராஸ் மீரா ஷாகிப்பே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகர சபை முதல்வராக நியமனம் பெற்றார்.

ஆனால் இடையில் இவரிடமிருந்து இப்பதவியை எடுத்து கல்முனையைச் சேர்ந்த நிசாம் காரியப்பருக்கு வழங்கினார் ரவூப் ஹக்கீம். இதுவே இரு இடங்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினைவாதம் உச்சம் பெற்று பிரிந்து செல்கின்ற தீர்மானத்தை சாய்ந்தமருது மக்கள் நாடுவதற்கு காரணமாய் அமைந்தது.

ஆனால், மல்வத்தையையும் அண்டிய தமிழ் கிராமங்களையும் பொறுத்தவரை பிரச்சினை வேறு விதமானது. முஸ்லிம் தலைமைகளால் திட்டமிடப்பட்ட வகையில் சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தமிழ்க்கிராமங்கள் மிக நீண்ட காலமாக அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்த இடங்களைச்சேர்ந்த தமிழ் மக்கள் விளங்கி வைத்திருக்கின்றனர்.

கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும், வறியவர்களும், கல்வியறிவு குறைந்தவர்களுமான இவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுக்க முஸ்லிம் தலைமைகள் தயாரில்லையென்று கண்டு கொண்ட நிலையிலேயே மாற்றான் தாய் தலைமைக்கு கீழிருக்க தயாரில்லை என்கிற முடிவில் உறுதியாகவுள்ளனர்.

எனவே தான் தமிழ் பிரதேச சபை வேண்டுமென்பதில் பற்றுறுதியாகவுள்ளனர். சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்கப்படுவதில் தமிழர்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், ஒரு வேளை மல்வத்தை பிரதேச சபை கோரிக்கை உரிய தரப்பினர்களின் கவனத்தை ஈர்த்து சாத்தியமாகின்ற நிலையைப் பெறுகின்ற போது, முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் புரிந்து நடப்பார்களா? என்பது வலிமையான சந்தேகம் தான்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டாக வேண்டுமென்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோர் பெரிதும் விரும்புகின்றார்கள். ஆனால், சம்மாந்துறை பிரதேச சபையிலிருந்து தமிழ்க்கிராமங்கள் பிரிக்கப்படுவதை இவர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பது தான் நிதர்சனமாகவுள்ளது.

இதை நிரூபிப்பதற்கு மிக நல்ல உதாரணமாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவதற்கு முஸ்லிம் தரப்புகளே கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தடைக்கற்களாக இருந்து வருவதை சுட்டிக்காட்ட முடியும்.

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தலையீடு காரணமாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமலேயேயுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தோடு சேர்ந்ததாகவே காரைதீவு, ஈச்சிலம்பற்று, ஒட்டுசுட்டான் ஆகிய உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டன.

இதனிடையில், கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் சட்டவிரோதமாகவே இயங்குகின்றது. எனவே, இதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று கல்முனையைச்சேர்ந்த முஸ்லிம் கடுமை போக்காளர்கள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒன்று கூடி தீர்மானமெடுத்து, இத்தீர்மானத்தை பத்திரிகைகளுக்கு அறிக்கையாக விட்டுள்ளனர்.

ஆனால், 1970 களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பிட்டும், தேங்காய்ப்பூவும் போல மிக நெருக்கமாக வாழ்ந்த காலம் மீண்டும் மலர்தல் வேண்டும் என்று அண்மைய காலங்களில் இரு தரப்பினராலும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில், இவை போன்ற விடயங்கள் உண்மையில் ஆரோக்கியமானவையல்ல.

அதே நேரம், மல்வத்தை தமிழ் பிரதேச சபைக்கோரிக்கை ஆட்சியாளர்களின் மேலான கவனத்தை ஈர்க்கின்ற காலம் கனிகின்ற போது, முஸ்லிம் தரப்புகள் எதிர்ப்புக் காட்டாமலிருப்பது எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவு செழித்தோங்க வழி வகுக்குமென்பதில் மாற்றுக்கருத்துக்கிடமிருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>