இஸ்லாமியப் பார்வையில் மாகாண சபைத்தேர்தல்முறை மாற்றம்: ஹக்கீம், றிஷாத்தின் நிலை?

Spread the love

hakeem2துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.

சில நேரங்களில் தவறான விடயங்களைச் செய்வதுண்டு. அதனை தவறென ஏற்றுக்கொள்வதென்பது மிக முக்கியமானது. மாகாண சபைத்தேர்தல் திருத்தச் சட்டத்தைப்பொறுத்தமட்டில் அனைவரும் அறிந்து கொண்டே பிழையைச் செய்துள்ளனர் என்பதில் எந்தவித சிறு ஐயமுமில்லை.

4.17 “எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத்தேடுகிறார்களோ அவர்களுக்குத் தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். “

மேலுள்ள குர்ஆன் வசனமானது ஒருவர் அறிந்து கொண்டு தீமையொன்றைச் செய்தால் அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்ற வகையில் அமைந்துள்ளது. அமைச்சர் ஹக்கீம் இது பிழையல்ல எனக்கருதி வாக்களித்து, இது பிழையானதாக எப்போது கருதுகிறாரோ அப்போது  பாவமீட்சி செய்து கொள்வதன் மூலம் அல்லாஹ்விடத்தில் மீண்டு கொள்ள வாய்ப்புள்ளது. இது பற்றி அவர் தெளிவற்றவராக இருந்திருந்தால் அவர் வாக்களிக்காமல் இருந்திருக்க வேண்டுமென்ற விடயமுள்ளது.

ஒரு சமூகத் தலைவன் எடுத்தோம். பிடித்தோம் எனச் செயற்படவும் முடியாது. இஸ்லாமிய மஷூர வழிகாட்டல் இங்கு செயற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அனைத்துச் செயற்பாடுகளையும் உள்ளத்திலுள்ள எண்ணத்தைக் கொண்டே அல்லாஹ் கணக்கிடுவான்.

அறிந்து கொண்டு வாக்களித்தவர்களின் நிலை பற்றி அல்லாஹ்வே தீர்மானிப்பான். அமைச்சர் றிஷாத் தனது ஆதரவின்றி பெரும்பான்மை உறுதி செய்த பின்பே தான் ஆதரவளித்ததாகக் கூறியுள்ளார். இவரின் கூற்றின் அடிப்படையில் சிந்தனையை உட்படுத்தி நோக்குகையில், இது ஒரு சிறந்த அணுகுமுறை.

இருந்த போதிலும், இஸ்லாத்தின் அடிப்படையில் அது மிகத்தவறானது. ஒரு பாவம் நிகழும் போதும் எமக்கு முடியுமானளவு எதிர்க்க வேண்டும். அதன் இறுதி நிலை மனதால் வெறுத்தலாகும். இஸ்லாமிய அடிப்படையில் இந்த சிந்தனை ரீதியான அணுகுமுறை தவறானதாகத் தோன்றுகிறது. இங்கும் ஒரு நியாயப்பாடுள்ளதால் அனைத்துச் செயற்பாடுகளையும் உள்ளத்திலுள்ள எண்ணத்தைக் கொண்டே அல்லாஹ் கணக்கிடுவான் என்பதை நினைவூட்டிக்கொள்வது பொருத்தமானது.

இவர்கள் செய்துள்ள தவறானது, மனிதனுடன் சம்பந்தப்படும் ( ஹுகூகுல் இபாத்) தவறு என்பதால், அதனை இலங்கை மக்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்ற வகையிலும் நோக்கக் கடமைப்பட்டுள்ளோம். இது இலங்கை மக்களை சந்ததி சந்ததியாகப் பாதிக்குமென்பதால் இச்சட்டம் மீள மாற்றம்படும் வரையுள்ள (இதற்கு பல நூற்றாண்டுகள் கூட எடுக்கலாம்) எதிர்காலச் சந்ததிகள் கூட இவர்களை மன்னிக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது (இது பிழையாக இருப்பின்). இது சாத்தியமற்ற விடயம்.

எனவே, இப்பாவத்திலிருந்து மீண்டு கொள்ள எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய பேரம் பேசுதல் சக்திகளைக் கொண்டு இச்சட்டத்தை மீள வரைவதைத்தவிர வேறு வழியில்லை எனலாம். இந்த வகையிலான முயற்சிகளை மேற்கொள்ள இன்றுள்ள எந்த அரசியல்வாதியும் முயன்றதாகத் தெரியவில்லை.

வெறும் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களே முஸ்லிம் அரசியலை ஆண்டு கொண்டிருக்கின்றது. இது முஸ்லிம்களுடைய தனிப்பட்ட தேவையாக மாற்றப்படாமல், மிகக்கவனமாக மாற்ற முயற்சிக்க வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

மொரக்கொட ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்ட கரையோர மாவட்ட ஆலோசனை இன்று முஸ்லிம்களின் தேவையாக இனவாதிகளிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளமை போன்று ஆகிவிடக் கூடாது.

இதற்கு ஆதரவளித்த பலரும் அமைச்சர் மனோ கணேசன் ( பாதகங்களைக் குறைத்துள்ளோம் என்றே இவர் கூறியுள்ளார். இதன் மறு வடிவம் பாதகங்கள் உள்ளது என்பதாகும். ) மற்றும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் பிரதித்தலைவர் ஹரீஸ்  உட்பட அனைவரும்  பிழையென ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கலந்துரையாடியே அன்று இதிலிருந்த பாதகங்களை ஓரளவு குறைக்க முயன்றதாகக் கூறுகின்றனர். மு.காவின் பிரதித்தலைவர் ஹரீஸ் அன்று ஹக்கீமோடு பூரணமாக நின்றவர்களில் ஒருவராகும். இவ்வாறான நிலையில், அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் இதில் பெரிதும் முஸ்லிம்களுக்கு பாதகமில்லையெனக் கூறுவதானது மக்களை ஏமாற்ற முனைகின்றாரா? என்ற வினாவையே எழுப்புகின்றது.

அறிந்து கொண்டு பாவம் செய்வோருக்கு அல்லாஹ் மன்னிப்பில்லை என்ற போதிலும், அவனிடம் கெஞ்சிவதைத் தவிர வேறு வழியில்லை. மனம் வருந்துவோர் இலங்கை மக்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோருவதன் மூலம் தங்கள் பாவங்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். சமுதயாகத் தலைவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மிக அவதானமாக இருத்தல் வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*