கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளது-கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம

0
270

S1720058எஸ்.எம்.எம்.முர்ஷித்

கிழக்கு மாகாணத்தில் நான்கரை இலட்சம் பசு மாடுகள் காணப்படுகின்றது. ஆனால், பால் உற்பத்தி குறைந்து காணப்படுகின்றதென கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வாகரை குஞ்சன்குளம் பகுதியில் கால்நடைகள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற போது, கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பால் உற்பத்தி குறைந்து காணப்படுகின்றது. அதனை மெருகூட்டும் வகையில் செயற்பட வேண்டும். அந்த வகையில், தரத்தினை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பால் பண்ணையாளர்கள் வருமானங்களை ஈட்டும் வகையில் பசுக்களைத் திறம்பட வளர்க்க வேண்டும். தாங்கள் பசுக்களின் உற்பத்தியினை மேம்படுத்தி பால் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும்.

கோழி வளர்ப்பானது நாற்பத்தைந்து நாட்களில் வருமானங்களைப் பெறக்கூடிய தொழிலாகும். ஏனைய மாகாணங்களில் முட்டைக்கோழி மற்றும் இறைச்சிக்கோழி வளர்க்கின்றனர். கோழிகளை வளர்த்து முட்டை விற்று வருமானங்களைப் பெறுவதற்கு நாங்கள் கோழிகளை வழங்குகின்றோம்.

முட்டைக்கோழி மற்றும் இறைச்சிக்கோழிகளை வளர்ப்பதற்கு மாதிரிக்கூடுகள் வழங்கப்படவுள்ளது. அதற்காக கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுடன் தொடர்பு கொள்ளுங்கள். அத்தோடு, நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வியாபார ரீதியில் தங்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்வோம்.

பாடசாலையிலிருந்து விலகியவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்படும். அத்தோடு, கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்தில் இவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கி வைக்கப்படும்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல குளங்கள் புனரமைப்புச் செய்யப்படுகின்றது. அந்த வகையில், மதுரங்கேணிக்குளம் பகுதியில் பாதிக்கப்பட்டுக் காணப்படும் குளமும் புனரமைப்புச் செய்யப்படும். இதன் மூலம், இரண்டு போகம் வேளாண்மை செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here