அரசியலமைப்பு குறித்து உலமா சபையின் கரிசனை ஆரோக்கியமான செயற்பாடாகும்!-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
206

3a202c1b-e2ef-4cd4-977e-66e6b85a105d(ஆர்.ஹஸன்)
புதிய அரசியலமைப்பில் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை குழுவொன்றை நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதே வேளை, வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் தனியலகுக்கோரிக்கை சம்பந்தமாக இக்குழு அதிக கவனம் செலுத்தவுள்ளதாக அறிய முடிகின்றது. எனவே, அரசியல்வாதிகள் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் மக்களின் கருத்துக்கமையவே தீர்வுக்கான மும்மொழிவுகளை அக்குழு முன்வைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அரசியல் ரீதியாக நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், ஒரு சமூகத்துக்கு வழங்கப்படும் தீர்வு மற்றைய சமூகத்துக்கு பாதிப்பாக அமையுமாயின், அதற்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளது. ஆனால், முஸ்லிம் தலைமைகள் இந்த விடயத்தில் பொடுபோக்காகவேயுள்ளனர். “வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை”, “வடகிழக்கு இணைப்பு பற்றிப்பேசினால் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்படும்” போன்ற தோரணையில் முஸ்லிம் தலைமைகள் பேசினால் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

இவ்வாறான நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்திஜீவிகள் மற்றும் உலமாக்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளமை மிகவும் ஆரோக்கியமான செயற்பாடாகும். மக்கள் என்ன விரும்புகின்றார்களோ அதனை தீர்வுக்கான மும்மொழிவுகளாக மேற்படி குழு அறிவிக்க வேண்டும்.

சமூக, அரசியல் பிரச்சினைகளின் போது முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைந்து வழிகாட்டுகின்ற ஜம்இய்யதுல் உலமா வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் குறித்து சரியான முறையில் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here