சமூகப்பிரச்சனையும் உள ஆரோக்கியமும் – எம்.எம்.ஏ.ஸமட்

0
386

indexசக்தேவையும் தேவைக்கான தேடலும் அதிகரித்துள்ள இந்த இயந்திர உலகில் ஒவ்வொரு தனி மனிதனதும் குடும்பத்தினதும் சமூகத்தினதும் வாழ் நாட்கள் நெருக்கடிகளோடும் அழுத்தங்களோடும் பிரச்சினைகளோடும் தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

பிரச்சினைகளோடு வாழக்கற்றுக்கொண்டவர்கள் அல்லது பழக்கிக்கொண்டவர்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கையில், பிரச்சினைகயோடு வாழ முடியாதவர்கள், பிரச்சினைகளை எதிர்நோக்கச் சக்தியிழந்தவர்கள் அப்பிரச்சினைகளுக்குள் முழுமையாக அமிழ்ந்து போகிறார்கள்.

இதனால், அவர்கள் மன நிம்மதி இழந்து அவர்களின் குடும்பத்தின் நிம்மதியையும் இழக்கச்செய்து துயரங்களால் சூழப்பட்டு உள நோய்களின் சொந்தக்காரர்களாக மாறுவதை அவதானிக்க முடிகிறது.

இருப்பினும், உடல் நலக்குறைபாடு அல்லது உடல் நலப்பாதிப்பு ஒருவரில் ஏற்படுத்துகின்ற உடனடித்தாக்கம் போன்று உள நலப்பாதிப்பு தனி நபரிலோ, குடும்பத்திலோ அல்லது சமூக மட்டத்திலோ பெரிதுபடுத்தப்படாமலிருப்பது இப்பாதிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் உளக்கோளாரினால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை புள்ளி விபரங்களினூடாக அவதானிக்க முடிகிறது. இந்நிலைமைகள் கருத்திக்கொள்ளப்பட்டு, உளநோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்குமுகமாகவும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாகவும் உலக உளநல தினம் அறிமுகப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 1992ஆம் அறிமுகப்படுத்தப்பட்டு அன்று முதல் ஒவ்வொரு வருடத்தினதும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இத்தினத்தில் மக்கள் மத்தியில் உள நலம் தொடர்பாக விழிப்புணர்வூட்டுதல், உள நோய்கள் தொடர்பாக வெளிப்படையான கருத்துப்பரிமாறல்களை மேற்கொள்ளுதல், உள நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசகைள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாண்டுக்கான உலக உள நலத்தினமானது ‘தொழிலகத்தில் உளநலம்’ எனும் கருப்பொருளுடன் இன்று உலக உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சனத்தொகையில் வளர்ந்தவர்களில் சகல துறைசார் தொழிலாளர்களான பில்லியன் கணக்கானோர் உள்ளனர். அத்தொழிலாளர்களின் பல மணி நேரங்கள் தொழில் புரியும் இடங்களில் கழிக்கப்படுகின்றன.

தொழில் வழங்குனர்களினதும் தொழிலாளர்களினதும் நேரங்கள் தொழிலகங்களில் பயன்படுத்தப்படுவதானல் அவர்களின் உள நலம் தொடர்பில் கவனஞ்செலுத்தப்படுவது அவசியமெனவும். இதனால், 25 வருடமாக அனுஷடிக்கப்படும் உல உளநல தினத்தின் இவ்வாண்டுக்கான கருப்பொருள் தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் முன்னிலைப்படுத்தி அனுஷ்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலகங்களின் உற்பத்தி மற்றும் முன்னேற்றங்களுக்கு தொழிலாளர்களின் உல ஆரோக்கியம் இன்றியமையாதது. ஏதிர்மறை தொழிலகச்சூழல்களினால் ஏற்படும் பல்வேறு அழுத்தங்கள் தொழிலாளர்களிடையே உளக்கோளாறுகளை உருவாக்குவதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. இவை உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன. தொழிலாளர்களிடையே பொதுவாகக் காணப்படும் மனச்சோர்வு மற்றும் அச்சம் என்பன  வேலைத்திறனிலும், வேலைகளிலும் பாதிப்பபை ஏற்படுத்தவததாகக் குறிப்பிடப்படுகிறது.

உள நோயும் சமகால உலகும்
உலகளவில் 300 மில்லியனை விடவும் கூடிய எண்ணிக்கையிலானோர் மனச்சோர்வினாலும், 260 மில்லியனை விட அதிகளவிலானோர் பதகளிப்பு உளக்கோளாரினாலும் பாதிக்கப்படுவதாகவும் இவர்களில் பலர் இரு உளக்கோரினால் அவதியுறுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.

உலக சனத்தொகையில் 12 வீதமோனோர் ஏதொவதொரு உளநோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஏறக்குறைய 450 மில்லியன் மக்கள் அதாவது உலக சனத்தொகையில் நான்கில் ஒருவர் ஏதாவதே உளநோய்க்கு ஆளாகியுள்ளனர். நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மனித, பொருளாதார வளத்தை உளநோய்கள் வெகுவாகப் பாதித்திருக்கிறது.

ஐரோப்பியப் பிராந்தியத்தில் 15 பேரில் ஒருவர்  மனச்சோர்வு நோய்க்கு ஆளாகுவதுடன், பதகளிப்பு மற்றும் மனச்சோர்வு ஏற்படுத்தும் பாதிப்புக்களுக்கு 15 பேரில் 4 பேர் ஆளாவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.

ஐஸ்லாந்து, சுவிட்சலாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் 18 முதல் 65 வயதுக்குட்டவர்களில் 27 வீதமான சனத்தொகையினர் ஏதாவது உள நோய்க்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் பெண்களின் வீதத்தை விட ஆண்களின் விதமே அதிகம் காணப்படுவதை ஐரோப்பிய யூனியனின் சமூகக்கல்விக்கான ஆய்வுத்தகவல்களில் காணக்கூடியதாகவுள்ளது.

மனித வாழ்வைப் பாதிக்கும் நோய்கள் வரிசையில் உளநோய்கள் 3வது ஸ்தானத்தில் இருப்பதாக சாவதேச ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றன. இது தவிர, உயர் வருமானமிக்க நாடுகளில் நிகழும் 90 வீதமான தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிக்கு உளநலப்பாதிப்பு காரணமாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  22 வீதமான தற்காலைக்கு மதுப்பாவனையும் காரணியாகவுள்ளதகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்தோடு, இணையத்தளத்தினுடனான சமூக வலைத்தளப் பாவனையினாலும் பல்வேறு உளநலப்பாதிப்புக்களைப் பாவனையாளர்கள் எதிர்நோக்குகின்றனர். எதிர்மறை எண்ணங்கள், கோபம், நம்பிக்கையற்றதன்மை போன்ற உளசிக்கல்கள் உருவாகின்றன. சமூக வலைத்தள தொடர்ச்சியான பாவனை சமூகம் தொடர்பான பதகளிப்பை உருவாக்குவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவற்றோடு, மூளையை சோர்வடையச்செய்து அறிவுபூர்வமான சிந்தனைக்கும் செயற்பாடுகளுக்கும் தடையேற்படுத்துவதாகவும் அழுத்தங்களை உருவாக்குவதாகவும் மனவெழுச்சியில் பாதிப்பைத் தோற்றுவிப்பதாகவும் ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளப் பாவனைக்காக நாளொன்றுக்கு  3 மணித்தியாலம் செலவிடும் 10 வயதுக்கும் 15 வயதுக்குமிடைப்பட்ட சிறார்களில் 11 வீதத்தினர் உளப்பாதிப்புக்களினால் அவதியுறுவதாகவும் அவ்வாய்வுகள் சுட்டிக்ககாட்டுகின்றன.

சமகால உலகின் இத்தகைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு உலநலம் தொடர்பான விழிப்புணர் நிகழ்ச்சிகள் உலக நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது.

உள நோய்களிலிருந்து மக்களைப்பாதுகாத்து அவர்களுக்கு முதலுதவி வழங்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இலங்கையின் பல பாகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய மனநல நிறுவனமும் பல்வேறு நிகழ்ச்சிகளை இவ்வாரம் நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது. நடைபவணி, சொற்பொழிவு, கண்காட்சி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வினா-விடைப்போட்டி என்பன அவற்றில் முக்கியமானவை.

மனநோய் தொடர்பான அச்சத்தை நீக்கி, இந்நிறுவனத்தினூடாக உளநோய்க்கான சிகிச்சைகளை எவ்விதத் தடைகளுமின்றி மக்கள் பெறுவதற்கு வழியை ஏற்படுத்துவது இந்நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கமென நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது

இலங்கையின் சமூகப்பிரச்சினைகளும் உளநோயும்;
அண்மைய ஆய்வுகளின்படி  இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு உளநோய்க்குள்ளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கையின் சனத்தொகையில் 20 முதல் 25 வீதமானோர் ஏதாவது ஒரு உளநோய்க்கு ஆளாகியுள்ளார் என ஆய்வு குறிப்பிடுவதானது, இவ்விடயத்தில் சுகாதாரத்துறையினரை அதிகளவு சிந்திக்கச் செய்துள்ளது.

நமது சமுதாயங்களின் மத்தியில் மது, போதைப்பொருள் பாவனை, தற்கொலை, கருக்கலைப்பு, சிறுவர், பெண்கள் மீதான பாலியல் உட்பட ஏனைய  துஷ்பிரயோகங்கள், வீட்டு வன்முறை, விவாகரத்து, வறுமை, மாணவர்களின் இடைவிலகல், முறையற்ற தொலைபேசி மற்றும் இணையத்தளப் பாவனைகள், வன்முறைகள் என சங்கிலித்தொடராக  சமூகப் பிரச்சினைகள் பல்வேறு கோணங்களில் பரந்து காணப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகப்பிரச்சினையும் தலைதூக்குவதற்கு பல காரணிகள் பின்னிணியில் உள்ளன. பல காரணிகள் சமூகப் பிரச்சினைகளை ஊக்குவிக்கும் ஊக்கிகளாகவும் செயற்படுகின்றன.

ஒரு தனி மனிதன் எதிர்நோக்கின்ற அல்லது தனி மனிதனினால் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகளின் தோற்றுவாயாக உளமாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மைக்காலமாக நமது நாட்டில் அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள், தற்கொலைகள், கொலைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புபற்றவர்களின் மருத்துவ சோதனைகள் அவர்கள் ஏதோவொரு உளவியல் பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. உளநலம் பாதிக்கப்பட்டோரினாலேயே அதிகவிலான சமூகப்பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

சாதாரண பதகளிப்பு, சமூக, சூழல் அச்சம், பீதித்தாக்கம், அச்சம், ஓசிடி எனப்படும் நிர்ப்பந்த ஒத்த சிந்தனைக்கோளாறு, தொடர்ச்சியான  நெருக்கீடு அல்லது மன அழுத்தம், நெருக்கீட்டுக்குப் பின்னரான மனவடு, ஆளுமைக்கோளாறுகள், பாலியல் பிறழ்வு, பாலியல் விலகள் போன்ற உளக்கோளாறுகளுடன் சமூகத்தின் மத்தியில பலர் வாழ்கிறார்கள்.

இவர்கள் அடையாளம் காணப்படுவதும், இவர்களுக்கான தகுந்த சிகிச்சை வழங்கப்படுவதும் காலத்தின் தேவையும் மனிதாபிமான பணியுமாகவுமுள்ளது. சிறிய உளப்பிரச்சினைகளுக்கு உளவளத்துணை மூலம் சிகிச்சை பெற்றுக்கொண்டாலும், பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் உளவளத்துணையினால் சிகிச்சையளிக்க முடியாத தங்கியிருந்து மருந்து மற்றும் இதர சிகிச்சை முறையினால் சிகிச்சைளிக்கக்கூடிய மனச்சோர்வு, பித்து, உளமாயநோய்கள், நாட்பட்ட உளமாய நோய்கள் போன்ற நோய்களுக்கான சிகிச்சை பெற்றுக்கொடுப்பது இந்நோய்குட்பட்டவர்களின் குடும்பத்தினதும் சமூகத்தினதும் பொறுப்பாகவுள்ளது.

மனநோயாளர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படாது, அவர்களுக்கான சிகிச்சையை உரிய சிகிச்சை நிலையங்கள் மூலம் பெற்றுக்கொடுப்பது மனநோயாளர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் உளநலமுடையவர்களின் மனிதாபிமான தார்மீகப் பொறுப்பாகும்.

உள ஆரோக்கியமும் மன நல நிறுவகத்தின் வகிபாகமும்
இலங்கையில் உளநோய் அதற்கான சிகிச்சை பற்றிய வரலாற்றைப்பின்னோக்கிப் பார்க்கின்ற போது, உளநோயாளர்களின் பராமரிப்பு 18ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலங்களில் நோயாளர்கள் வீடுகளில் அடைக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இலங்கையில் முதன் முதலாக போர்த்துக்கேயர் காலத்திலேயே உள மருத்துவம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் 1839ஆம் ஆண்டு உளநோயாளர்களுக்கான சட்டம் ஏற்படுத்தப்பட்டது.  1847ஆம் ஆண்டு பொரளையிலும் 1882இல் கருவாக்காட்டிலும், 1917 – 1927 இல் அங்கொடை மற்றும் முல்லேரியாவிலும் உள நோயாளர்களுக்கான வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டன.

இலங்கையில் உள ரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்கக்கூடிய இரு முக்கிய வைத்தியசாலைகளாக விளங்குவது இந்த முல்லேரியா மற்றும் அங்கொடை வைத்தியசாலைகளாகும். தென் கிழக்காசியாவின் மிகப்பழைமை வாய்ந்த மனநல வைத்தியசாலையான அங்கொடை வைத்தியசாலையானது, 2008ஆம் ஆண்டு தேசிய மனநல நிறுவனமாக தரமுயர்த்தப்பட்டது. முல்லேரியா வைத்தியசாலையானது, உளநல ஆதார இல்லமென மாற்றப்பட்டு, அதன் நிர்வாகம் தேசிய மனநல நிறுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது,

இந்நிறுவனத்தினூடாக பல்வேறு சேவைகள் இடம்பெறுவதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும். ஏனெனில், சமூக மட்டத்தில் அங்கொடை மற்றும் முல்லேரியா என்ற இரு பிரதேசங்களின் பெயர்கள்  தவறான அல்லது எதிர்மறை எண்ணங்களோடு அவதானிக்கப்படுகிறது. அவ்வெண்ணங்கள் சமூக மட்டத்திலிருந்து அகற்றப்படுவது அவசியமாகும்.

மனநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய நிலையமாக விளங்கும் இந்நிறுவகத்தின் உள்ளகக்கட்டமைப்புக்களும், பரிபாலனமும், செயற்பாடுகளும் சிறப்பாக அமைந்திருப்பதோடு மன அமைதிக்கான சூழலாக நேரில் காணும் போதும் அவதானிக்க முடிகிறது. இதன் சூழல் அமைப்பானது உளவியலுக்கும், உளநலத்துக்கும் முதலுதவியளிக்கக்கூடியதாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

இந்நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையினை அவதானிக்கின்ற போது, பல்வேறு உளநோய்க்குட்பட்ட 8000 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, வெளிநோயாளர் பிரிவில் 11,723 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆரம்ப நலம்காப்பு சேவை, உள்ளக நோயாளர் சேவை, விஷேட சேவை, வெளிநோயாளர் சேவை மற்றும் ஏனைய சேவைகள் என்ற சேவைப்பிரிவுகளினூடாக பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள ஆரோக்கியமுள்ள இலங்கைச் சமூகத்தை  உருவாக்கும் பொறுப்பைச்சுமந்த இந்நிறுவனம், ஒரு பணிப்பாளரையும், ஒரு பிரதிப்பணிப்பாளரையும், 10 வைத்திய நிபுணர்களையும், 37 வைத்திய அதிகாரிகளையும், 372 ஆண், பெண் தாதிகளையும் வெவ்வேறு செயற்பாடுகளுக்கான ஆளணியினரையும்  கொண்டு இயங்குவதுடன், இதன் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் முல்லேரியா உலநல ஆதார இல்லம் 4 வைத்திய அதிகாரிகளையும் 73 தாதிகளையும், ஏனைய ஆளயிணியரையும் கொண்டு சிறப்புடன் இயங்குவதனை ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுவதுடன், நேரில் அவதானிக்கின்ற போதும் அச்சேவைளின் சிறப்புத்தன்மைகளைக் காண முடிகிறது.

இவ்வைத்தியசாலை தொடர்பிலும் இப்பிரதேசத்தின் பெயர் தொடர்பிலும் மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்மறை எண்ணங்களை அகற்ற வேண்டிய பொறுப்பை ஊடகங்கள் நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இந்நிறுவனத்தின் உளவியல் சமூகப்பணியாளர் சந்தன குறிப்பிட்டதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் உளநலம் மற்றும் உளநோய்கள் அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது. உளநோய்களுக்கான சிகிச்சை முறைகளில் மிதமான உளநோய்க்கான சிகிச்சைகள் உளவளத்துணைச் செயற்பாட்டினூடாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த உளவளத்துணை தொடர்பான அறிவை மக்கள் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.

உள நலத்தில் உளவளத்துணை.
உளவளத்துணையானது “ஒருவர் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது முகங்கொடுக்கும் எதிர்பார்த்த, எதிர்பாராத சம்பவங்களினால் ஏற்படுகின்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உளவியல் முறைகளைப் பயன்படுத்தி அவரிடம் காணப்படும் உள்ளார்ந்த சக்தி, திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்து, ஆளுமையை விருத்தி செய்து, அவரது பிரச்சினைகளுக்கு அவரே தீர்வு காண்பதற்கு உதவுகின்றதொரு அறிவியல் ரீதியான தொழில்வாண்மையான பணியாகும்.

தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய துறைகளைப் போன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.  உளவியல் உளவளத்துணை, கல்வி உளவளத்துணை, தனி நபர் உளவளத்துணை, குடும்ப உளவளத்துணை, குழு உளவளத்துணை, தொழில் உளவளத்துணை, விஷேட உளவளத்துணை எனப்பல்வேறு துறைகளில் இன்று உளவளத்துணை பயன்படுத்தப்படுகிறது.

சமூ அமைப்பில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்களினால் உளவளத்துணையின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இச்சேவை இன்று இன்றியமையாததாக மாறியதற்குப் பல்வேறு விடயங்கள் காரணமாகவுள்ளன. இவற்றுள் பிரதானமானது சமூää கலாசார மாற்றங்க;ளாகும். இவை நாளுக்கு நாள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் மக்களும் தமது பாரம்பரிய சமூக, கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர்.

இவ்வாறான  நிலைமைகளினால் ஏற்படுகின்ற உளப்பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று வாழ்வை இன்பகரமாக்குவதற்கு இன்று உளவளத்துணை அவசியமாகியுள்ளமையை எவரும் மறுப்பதற்கில்லை.

உளவளத்துணையானது உடல், உளநோய்களுக்குக் காரணமான மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். சமூக, கலாசார மாற்றங்களுக்கேற்ப தம்மை இயைபாக்கம் செய்து கொள்ள முடியாதவர்களுக்கு வழிகாட்டி நவீன மாற்றங்களுக்கேற்ப அவர்களை இயைபடையச் செய்ய உதவுகிறது. குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளிலிருந்து குடும்பங்களைக் காப்பாற்றி உடல், உள, சமூக, ஆத்மீக வளமிக்க குடும்பங்களைக் கட்டியெழுப்புவதில் துணை நிற்கிறது. ஆளிடைத்தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது.

உள்ளம் நலம் பெறும்போது தான் உடலும் நலம் பெறும். அதனால், உளவியலுக்கும் உளநலத்துக்கான முதலுதவி இன்றைய தேவையாகவுள்ளது. அத்தேவையை நிறைவு செய்வதும் செய்விக்கப்படுவதும் அத்துறைசார்ந்தோரினதும் பொறுப்பாகவுள்ளதோடு பாரிய உளநோயினால் பாதிக்கப்பட்டு குடும்பங்களினாலும் சமூகத்தினாலும் ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது  ஒதுங்கி வாழ்பவர்கள் மனிதர்கள் என்ற ரீதியில் அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும் அவர்கள் மனிதாபிமானத்துடன் நோக்கப்படுவதும் அவசியமாகும்.

வீரகேசரி – 10.10.2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here