சிந்தனையைக் கூராக்கும் நேரம்- சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
105

22236416_1666352820050301_1473604764_nசாத்தான்களின் சதுரங்க ஆட்டத்தால் முஸ்லீம் சமூகம் பலியாக்கப்பட்டாலும், திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் ஏமாற்றப்பட முடியாது. நமது மாவட்ட அரசியலும், நாட்டின் தேசிய அரசியலும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டது. நாம் தற்போது விழிப்பூட்டப்பட்டுள்ளோம். நமக்கான தெளிவும் சிந்தனை மாற்றமும் நமது தலைமைகளின் துரோகங்களாலும், பிற்போக்குச் செயற்பாடுகளாலும் படிப்பினையாக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளிலும் சொந்தக்காரராக நாம் உள்ளோம்.
1- மர்ஹூம் அலி, அபூபக்கர் என்று இலங்கையில் தேர்தல் தொடங்கியது முதல் பிரதிநிதிகளை கண்ட மண் கிண்ணியா
2- SLFPல் ஆளுமைமிக்கவராகவும் பிரதியமைச்சராகவும் கிழக்கில் தனித்துவம் படைத்த மர்ஹூம் மஜீது நமது மண்.
3- UNPல் 30 வருடத்திற்கு மேலாக கிழக்கில் வெற்றி பெற்றதோடு, அமைச்சராக தனித்து சரித்திரம் படைத்த மர்ஹூம் மஹ்ரூப் நமது மண்.
4- மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக SLFPல் தேர்தலில் கிழக்கில் வெற்றி பெற்ற முஸ்லீம் என்ற பெருமைக்குரிய நஜீப் நமது மண்.
5- வடகிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கௌரவ இம்ரான் நமது மண்.
6- SLMC கட்சிக்கு முதல் தேர்தலான 1988 வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் அதிகூடிய வாக்கான 24006 வாக்குகளை வழங்கி சரித்திரம் படைத்த மூதூர்த்தொகுதியில் நமது மண் அதிக பங்காளி.
7- றிசாத், அமீரலி, ஹுஸைன் பைலா போன்றவர்களுடன் SLMC இலிருந்து பிரிந்த போது, ACMC கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த நஜீப் நமது மண்.
8- SLMC கட்சிக்காக உயிர் நீத்த ஒரேஒரு வேட்பாளர் மர்ஹூம் பைத்துள்ளாஹ் நமது மண்.
9- ACMC ஒரு மாகாண சபை கூட இல்லாத போது, 30 ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை வழங்கிய பாராளுமன்றப் பிரதிநிதியாக கௌரவ மஹ்ரூபை வழங்கியது நமது மண்.
10- 1989 தேர்தலில் 11000 வாக்குகளுடன் இருந்த SLMC ஐ 26000 உயர்த்தியதோடு, முதலாவது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறச்செய்த கௌரவ தௌபீக் நமது மண்.
11- கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு நகர பிதாவை ACMC கட்சிக்கு கௌரவ ஹில்மியை வழங்கிய பெருமைக்குரிய  நமது மண்.
12- அரசியல் அதிகாரமோ, அபிவிருத்தியோ செய்யாது, புதிதாக உருவான அதாவுள்ளாஹ்வின் மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிகப்படி வாக்குகளால் வெற்றி பெச்செய்த கௌரவ பாயிஸ் நமது மண்.
13- இது தவிர, மர்ஹூம் மஜீதின் முஸ்லீம்களுக்கான தனித்துவம் தொடர்பான தூரநோக்கும் செயற்பாடும் மர்ஹூம் அஷ்ரபை தனிக்கட்சி ஆரம்பிக்கத் தூண்டியது.

இவ்வாறு தேசிய மற்றும் சிறுபான்மைக்கட்சிகளின் வளர்ச்சியிலும், உருவாக்கத்திலும் பங்காளர்களாகவும் பாதுகாவலராகவும் உள்ளது நமது மண். நமது அரசியல் பல கோணங்களில் இடமாறினாலும், நமது மண்ணும் மக்களும் அரசியல் கலாசாரத்திற்கு வரலாற்றுச் சொந்தக்காரர்கள்.

நமக்குள் முரண்பாடுகளும், கருத்து மோதல்களும் தொடர்வதற்கு நமக்கிடயை சங்கிலித்தொடராக இணைந்துள்ள கட்சி அரசியலே காரணமாகும். நாம் தலைவர்களை உருவாக்கியவர்கள். கட்சிகளை அறிமுகம் செய்து சமூகமயமாக்கியவர்கள். நமக்கும் அரசியலுக்குமிடையிலான தொடர்பு மரணிக்கும் வரை சரித்திரமே.

தேர்தல் கேட்பது மட்டும் அரசியலல்ல. அரசியல் விழிப்புணர்வு, பங்களிப்பு, பங்குபற்றல், ஆலோசனை மற்றும் செயற்பாடுகள் எனப்பல வடிவங்களில் உருப்பெற்றது. ஆகவே, நமக்கு இயலுமானவரை நமது பங்களிப்பைச் செய்வோம்.

ஆகவே, செயற்பாட்டு அரசியலுக்கு முன்னரான சமூக மாற்றத்துடனான அரசியல் முக்கியம். வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்த அரசியல்கள் மக்கள் செயற்பாடுகள் கொண்டவை. ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

சரித்திரம் படைத்த நாம். சரித்திரத்தில் பங்காளர்களல்ல. நம்மைத் தூரமாக்கிக் கொண்டோம். துரியோதனனும், துஸ்டனும் நமக்கிடையில் புகுந்து கொண்டான்.

நாம் குனிந்து நிற்கிறோம். இன்னும் வீழவில்லை. வீழவும் மாட்டோம். வீரத்திற்கும் வரலாற்றிற்கும் சொந்தக்காரர்கள் நாம். திருப்பி அடிப்போம். சிந்தனையை சுயமாகவும், சுதந்திரமாகவும் சுவாசிக்க விடு இளைஞனே. மாற்றமும் நாமே. மாறுவதும் நாமே.

ஆகவே, நாம் உருவாக்கிய தலைவர்களை நாம் வழிநடாத்த வேண்டாமா?
நாம் வளர்த்து விட்டது போதும். நமக்காக கட்சி பிரசவிக்க வேண்டாமா?
நம்மை நாமே ஆழக்கூடாதா?
நமக்கு என்ன குறைபாடுள்ளது?
அரசியலில் நாம் தன்னிறைவு கண்டது போதாதா?
நாம் வளர்த்து விட்ட கிடா நமக்கு மூக்கணை போடலாமா?
நாம் அரசியலில் குனிந்து வாழ்ந்ததும், கொடை வல்லல்களாக இருந்ததும் போதாதா?
நமது எதிர்காலச் சந்ததியினருக்கு பதில் கூறாமல் சாதித்ததன் பயன் என்ன?

ஒன்றுபடுவோம். நாமும் நமது தலைவர்களும்.
நமது மண்! நமது மக்கள்! நமக்கான கட்சி!

“திருமலை சகோதரத்துவ அமைப்பு”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here