நிலக்கீழ் நீர் மாசடைவது தொடர்பாக கலந்துரையாடல்.

0
83

IMG_0423யாழ்ப்பாணக்குடா நாட்டில் நிலக்கீழ் நீர் மாசடைவது தொடர்பாக ஊவா வெல்லெஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வடமாகாணத்தைச் சேர்ந்த இருவர் மேற்கொண்ட ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகுமென்றும் அதில் உரிய தீர்வுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நீர் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான பட்டப்படிப்பை நடாத்திவரும் ஊவா வெல்லெஸ்ஸ பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கான உரிய தொழில் வாய்ப்புகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றபோது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் அமைச்சர் முன்னிலையில் இதனைத் தெரிவித்ததோடு, அது தொடர்பான மேலதிக ஆய்வுகளில் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இந்தப் பட்டப்படிப்பில் நீர் இரசாயனம் தண்ணீர் மற்றும் அசுத்த நீர் சுத்திகரிப்பு பொறிமுறைகள், நீரியல் வளம், நிலக்கீழ் நீரின் தன்மை, நீர் மாசடைதல், நிலக்கீழ் நீரை பகுப்பாய்வுக்குட்படுத்தல், குழாய் நீர் விநியோகம், நீர் விநியோக பொறியியல், நீர் வள முகாமைத்துவம், போத்தலில் அடைக்கப்படும் நீர் தொடர்பான தொழிநுட்பம், நீரின் தரநிர்ணய மதிப்பீடு முதலான முக்கிய விடயங்கள் அடங்குவதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் இருந்தவாறே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான பட்டப்படிப்புகளை மேற்கொள்வோர் இருப்பதன் காரணமாக உரிய துறையில் தொழில் வழங்குவதில் போட்டித் தன்மை நிலவுவதைக் கருத்தில் கொண்டும் அதேவேளையில் இந்த பட்டப்படிப்பின் உள்ளடக்கம் தொடர்பான விடயங்களை கவனத்தில் எடுத்தும் இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறுவோருக்கு தகுதியான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலான சாத்தியக் கூறுகள் பற்றி சீர்தூக்கிப் பார்க்குமாறு அமைச்சர் ஹக்கீம் அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வனப்பான இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் ஊவா வெல்லெஸ்ஸ பல்கலைக்கழகம் இந்த பயிற்சி நெறிக்கு பொருத்தமானதாகக் காணப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த உயரமட்டக் கலந்துரையாடலில் ஊவா வெல்வெஸ்ஸ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான தொழிநுட்ப பிரிவின் தலைவர் கலாநிதி ஜகத் பிடவல தலைமையிலான விரிவுரையாளர்கள், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் பேராசிரியர் ரோஹான் வீரசூரிய, கலாநிதி எஸ்.கே.வேரகொட, இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெம்சாத் இக்பால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here