ஹரிஸ் தனது கருத்துக்களைப் பகிரங்கமாக கட்சியின் உயர்பீடக்கூட்டத்தில் தெரிவிக்க முடியுமா?-உதுமான்கண்டு நாபீர் கேள்வி (வீடியோ)

0
175

0ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென பிரதியமைச்சர் ஹரிஸ் கல்முனையில் கூறுவதும் மறு பக்கத்திலே கட்சியின் தலைமை அப்துர் ரவூப் ஹக்கீம் ஹரிஸ் கூறிய கருத்தானது, அவருடைய தனிப்பட்ட கருத்தேயன்றி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய கருத்தல்லயென அறிக்கை விடுவதானது, முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல் திருவிளையாடலாகவே பார்க்கின்றேன்.

அவ்வாறு ஹரிஸ் சமூகவுணர்வுடனும், உளத்தூய்மையுடனும் அரசியல் செய்வாராயின், ஏன் அவருடைய கருத்துக்களை கட்சியின் உயர்பீடக்கூட்டத்திலோ அல்லது பாரளுமன்றத்திலோ தெரிவிக்கவில்லை என பகிரங்கமாக கேள்வியெழுப்புகின்றேன் என சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபகத் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு  நாபீரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் குறிப்பிடுகையில்,

முதலாவது சகோதரர் ஹரிஸ் அரசியலினை கற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அவர் அங்கு எதனைப்பேச வேண்டுமென்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவரை நாங்கள் அரசியல்வாதியென்று கூறி விட முடியாது.

அரசியல்வாதி என்பவன் முதலாவது தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசின் தலைமை அப்துர் ரவூப் ஹக்கீம் என்ன விடயத்தினைக் கூறியிருக்கின்றார் என்பது ஒரு புறமிருக்க, வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக கட்சியின் தலைமை அறிக்கை விடுகின்ற பொழுது, அதற்கு எதிர்மாறாக ஹரிஸும் அறிக்கை விடுகின்றவராக இருக்கின்றார்.

இவ்வாறான செயற்பாடுகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசத்திலுள்ள மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான செயற்பாடாகவே காணப்படுகின்றது. இப்படியான விடயம் பூச்சாண்டி காட்டும் அரசியலாகவே எங்களால் நோக்கப்படுகின்றது.

அப்படியென்றால், அவர் வடக்கு கிழக்கினை இணைக்க விடமாட்டோம் என்ற கருத்தினை கட்சியின் உயர்பீடக்கூட்டத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ கூறியிருக்கின்றாரா? என்பதனை அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும்.

பேச வேண்டிய விடயங்களைப் பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்கள். பிரதேசத்திற்கு வந்தால் பிரதேச மக்களை உசுப்பேத்துவதற்காவும், அடுத்த தேர்தலில் தங்களுடைய வாக்கு வங்கியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் வீர வசனங்களைப் பேசுவதே இவர்களுடைய அரசியல் தொழிலாக இருக்கின்றதெனத் தெரிவித்தார்.

அத்தோடு, ஏன் இன்னும் நீங்கள் எந்தக்கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்ய போகின்றீர்கள் என அறிவிக்கவில்லை? நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து அரசியல் செய்யக்கூடிய சமிக்கைகள் விடப்படுவது உண்மையா? வடகிழக்கு இணைப்பு, முஸ்லிம்களுக்கான தனியான அலகு, ஐம்பதுக்கு ஐம்பது முறைமை முஸ்லும்களுக்குச் சதாகமானதா? அல்லது பாதகமானதா? போன்ற கேள்விகளுக்கு  பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் வழங்கிய பதில்களின் காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ:- உதுமான்கண்டு நாபீரின் விளக்கம் : – www.youtube.com/watch?v=wikug7mKO7E
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here