தனி மனிதனின் "சமூகம் மாற்றம்" என்ற போலி வேஷம்

0
1383

Untitled-1‘சமுதாயம்’ என்பது ஒரு வார்த்தை மட்டும் தான். நிஜத்தில் அப்படி எதுவுமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் உருவாக்கிக்கொண்ட இணைப்பின் மூலமே “சமூகம்” என்ற கட்டமைப்பு உருவாகிறது. தனி மனித மாற்றமில்லாமல், இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் உருவாவதற்கு வாய்ப்பேயில்லை. சமூகம் மாற வேண்டுமென்ற சிந்தனை தனி மனிதனுக்குள் உண்டாகும் போது, அதன் வழிநடத்தல் அவனாலே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இன்று சமூக மாற்றமென்பது சிறுபான்மையினரான எங்களுக்கு ஆட்சி மாற்றம் அல்லது தங்களது கட்சியின் வெற்றியை மையப்படுத்திய குறுகிய கண்ணோட்டத்தில் அணுகப்படுகிறது. இன்றைய முஸ்லீம் சமூகம் தனது கலாசாரம், இருப்பு, பொருளாதாரம் மற்றும் இருப்பு தொடர்பில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. நவீன தொழிநுட்ப வளர்ச்சியும், அந்நிய சக்திகளின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தனது சமூக மாற்றத்தை உள்வாங்கவில்லையென்பதை யதார்த்தமாகும்.

அரசியலில் சமூக மாற்றமென்பது அதிகாரமிக்கவர்களாக மாறுவதாகும். அதே போன்று சகல துறைகளிலும் தங்களது தனித்துவத்தையும் தன்னிறைவையும் அடைய வேண்டும். இதற்கான தயார்படுத்தலிலிருந்து நமது முஸ்லீம் சமூகம் விலகிச்செல்வதற்கு அரசியலை மட்டும் மையப்படுத்திய நகர்வே காரணமாகும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றமும் சமூக உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கி வருகிறது.

மார்க்க ரீதியான புதிய கோட்பாடுகள் நமக்கிடையே பிரிவினையையே தோற்றுவித்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் கூட குறை காணும் வகையில் தான் நமது வளர்ச்சியுள்ளது. அதாவது, நமது சமூகம் நவீன வளர்ச்சிகளை தனி மனித தேவைகளுக்காக மட்டும் துணைக்கு எடுத்து சமூகத்தில் பிளவுகளையே உருவாக்கி வருகிறது.

தேவையானளவிற்கு விழிப்புணர்வுடன் செயற்படக்கூடிய நபர்களை ஓரளவிற்கேனும் நாம் உருவாக்கினால், நிச்சயம் இவ்வுலகில் மாற்றம் கொண்டு வரலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, தலைமைப் பொறுப்பிலிருப்பவர்களிடம் இது போன்றவொரு மாற்றத்தை நாம் உருவாக்க முடிந்தால், அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

ஆதலால், முஸ்லீம் சமூகம் தன் மீதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தனது அறிவாற்றலையும் செயற்றிறனையும் மாற்றிக் கொள்ள வேண்டும். வெறும் விமர்சனங்களாலோ, எதிர்ப்புக்கோஷங்களாலோ உருவாகின்ற மாற்றங்களால் சமூக மாற்றமடைவதை விட, சீரழிவதே அதிகமாகும்.

தனது சுயதேவைகளுக்காக மட்டும் மாற்றத்தையும் அடுத்த கட்ட நகர்வையும் நமது சமூகம் சிந்திக்கிறது. இத்தேவையை அடைவதற்காக தன்னால் இயலுமானதை சமூகத்தின் துணையுடன் தனி மனிதன் அடைய முயற்சிக்கிறான். இதற்காக சமூக மாற்றமென்ற புனிதமான சிந்தனையை மாசுபடுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

நம்மில் சமூகம் மாற்றமென்ற விடயம் தனி மனித அதிகாரத்தையும் தேவைகளையும் அடைந்து கொள்ள உபயோகிக்கும் ஊக்க மருந்தாகவேயுள்ளது.

இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளுக்குள் இறுக்கமான நம்பிக்கையுள்ள முஸ்லீம் சமூகத்தில் விட்டுக்கொடுப்பு, தியாகங்கள், ஒற்றுமை மற்றும் புரிதல் என்பது வரலாற்றில் தோற்கடிக்கப்படாதவை. இதன் காரணமாக, முஸ்லீம்களின் அரசியல் மற்றும் இதர துறைகள் உலகளாவிய ரீதியில் உண்டான மாற்றங்களுக்கு காரணமாக மட்டுமல்ல, கட்டுமானமாகவும் இருந்தது. ஆனால், இந்த வரலாற்று வழித்தோன்றல்களான எமது சமூகத்தில் தனி மனிதனின் தவறான வழிகேடுகளுக்கு சாதகமாக சமூக மாற்றமென்பது துணை போவது துர்ப்பாக்கிய நிலையாகும்.

இன்று உலகில் தினம் உருவாகி வரும் மாற்றங்களுக்கு தொழிநுட்பமும் அதற்கு துணையாக ஊடகங்களும் முக்கிய பங்காற்றி வருகிறது. நமது இலங்கை முஸ்லீம்களின் செயற்றிறனையும் மாற்றத்தையும் உலகளாவிய மாற்றங்களுடன் வழிநடாத்தக்கூடிய வெகுசன ஊடகங்களில் பங்களிப்புக் குறைவாகவேயுள்ளது. ஏனைய சமூகங்கள் சர்வதேச ரீதியிலான மாற்றங்களுடன் எதிர்நீச்சல் போடுகின்ற போது, முஸ்லீம் சமூகம் குறைந்தபட்சம் தனக்குள் புரிதல்கள் இல்லாத நிலையிலுள்ளது.

இன்று நமக்குள் சமூக மாற்றம் மற்றும் விழிப்புணர்வுகள் என்பன முரண்பட்ட கோணங்களில் பிழையான வழிகாட்டல்களால் திணிக்கப்படுகிறது. இதற்கு நமக்குள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மட்டுமல்ல மார்க்க ரீதியிலும் உருவாகியுள்ள பிளவுகளே காரணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தை மாற்றுவதற்கு முடியுமாக இருந்தது. காரணம், அந்த சமூகத்தின் தனி நபர்கள் வைத்திருந்த கொள்கை ரீதியான நம்பிக்கையும், தலைமைத்துவ வழிகாட்டல்களுமே காரணமாகும். நமது தலைமைத்துவங்கள் சமூகத்தின் பங்காளியாக அல்லது பொறுப்புள்ளவர்களாக இல்லாமல், தனி மனித விளம்பரமாகவேயுள்ளது. இதனால் தலைமைத்துவ வழிகாட்டலில்லாத சமூகமாக நடுத்தெருவில் நிற்கிறோம்.

ஆகவே, இளைஞர்களும், சமூகத்தின் புத்திஜீவிகளும் சமூகத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் தங்களது பங்களிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். சகலவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமலும், அரசியல் சாயம் பூசாமலும் முஸ்லீம் சமூகத்தை யதார்த்தமுள்ளதாக உயிரூட்ட வேண்டும். ஏனெனில், நமது முஸ்லீம் சமூகம் தனது சகல விடயங்களையும் அரசியல் பார்வையுடன் அணுகுவதே நமது சமூக மாற்றத்தில் தோல்விகளுக்கான முக்கிய காரணமாகும்.

நம்மை சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்களாகவும், தூரநோக்குள்ளவர்களாக பண்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குள் தலைமைத்துவப் பண்புகளையும், வழிநடாத்தும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது கலாசார வரம்பிற்குள் நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டு, இந்த சமூகத்தில் மாற்றங்களுக்கு பங்காளர்களாக வேண்டும். ஆகவே, முஸ்லீம் சமூகம் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் பல்துறை சார்ந்த மாற்றங்களை முதலில் தனக்குள் ஏற்படுத்துவதன் மூலமே சமூக மாற்றத்தில் உள்வாங்க முடியும்.

மாறாக, ஆட்சி மாறுவதாலோ அல்லது தலைவர்கள் மாறுவதாலோ தன்னை மாற்றிக்கொண்டதாக தன்னைத்தானே ஏமாற்றி வாழ்வது கோழைத்தனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here