“அங்கவீனம் ஓர் இயலாமையல்ல” என்பதை அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு உணர்த்திய திஹாரிய அங்கவீனர் நிலைய மாணவர்கள்

0
276

22459432_1873675332648653_6219596735352974542_oசுஐப் எம்.காசிம்   
திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனிடம் அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளையும், தேவைகளையும் சைகை மொழியின் மூலமும், எழுத்து மூலமும் வெளிப்படுத்தினர்.

1984 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுடன் ஒரு வாடகை வீட்டில், தனி மனிதன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையத்தின் முன்னோடியும், இஸ்தாபகத் தலைவருமான ஜிப்ரி ஹனீபா, அண்மையில் காலமான போதும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து துணிச்சலுடனும் சேவை நோக்குடனும் இந்த அங்கவீனர் நிலையத்தை சிரமங்களுக்கு மத்தியில் நடாத்தி வருவதை அவதானிக்க முடிந்தது.

இக்கல்லூரியில் கற்பவர்களில் தற்போது 76 பேர் வாய் பேச முடியாதவர்களும், 15 பேர் விழிப்புலன் இழந்தவர்களாகவும், 06 பேர் ஊனமுற்றோராகவும், மனவளர்ச்சி குறைந்த 108 பேரும் கல்வியைத்தொடர்கின்றனர். முற்றுமுழுதாக விஷேட தேவைகளைக்கொண்ட இந்த மாணவர்களுக்கு சைகை மொழிகளிலேயே பாடசாலைக்கல்வி கற்பிக்கப்படுவதாக அங்கவீனர் நிலையத்தின் தலைவர் நிசாம் தெரிவித்தார்.

34 ஆசிரியர்கள் கற்பிக்கும் இந்நிலையத்தில் 20 ஆசிரியர்கள் அரசாங்க சம்பளம் பெறுபவர்களாகவும், எஞ்சிய 14 பேர் முகாமைத்துவத்தின் உதவியுடன் சம்பளம் பெறுபவர்களாகவும் இருக்கின்றனர்.

வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினதும், பரோபகாரிகளினதும் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த அங்கவீனர் நிலையத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின விஷேட தேவையுடைய மாணவர்கள் தங்கிக் கல்வி பெறுவது விஷேட அம்சமாகும்.

இந்நிறுவனத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள இடங்களைச் சுற்றிப்பார்வையிட்டதுடன், நிலைய நிர்வாகிகள், ஆசிரியர்களுடனும் உரையாடி அங்குள்ள தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார். இந்நிலையத்துக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளையும் நல்குவதாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் “அங்கவீனம் ஓர் இயலாமையல்ல” என்பதை நிதர்சனமாக உணர்ந்து கொண்டார்.

மர்ஹூம் ஜிப்ரி ஹனீபாவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்துக்குச்சென்ற அமைச்சர் இஸ்தாபகத் தலைவர் ஜிப்ரி ஹனீபா இந்த நிலையத்தை பெருவிருட்சமாகக் கட்டியெழுப்புவதற்கு பட்ட கஷ்டங்களை புகைப்படங்கள் மூலமும், சேவைகள் மூலமும் அறிந்து கொண்டார்.

வாய் பேச முடியாத மாணவர் ஒருவரிடம் “நீங்கள் எந்த இடமென்று?” அமைச்சர் வினவிய போது, அருகே நின்ற பாடசாலை உப அதிபர் அம்பாறை எனப்பதில் கூறினார். “அம்பாறையில் எங்கே” என அமைச்சர் திருப்பிக்கேட்ட போது, அந்த மாணவன் தனது விரலொன்றால் அடுத்த கையில் சென்ரல் கேம்ப் என எழுதி, தனது பிறந்த இடத்தை வெளிப்படுத்தியமை அனைவரினதும் மனதை நெகிழ வைத்தது.

இந்த அங்கவீனர் நிலையத்தில் முகாமைத்துவக் கவுன்சிலில் கல்விமான்கள், நீதியரசர்கள், உலமாக்கள், பரோபகாரிகள், சட்டத்தரணிகள் உட்பட பல புத்திஜீவிகள் அங்கம் வகித்து நிலையத்தைச் சிறப்பாக நிர்வகிக்க உதவி வருவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

மர்ஹூம் ஜிப்ரி ஹனீபாவின் சகோதரரான பத்திரிகையாளர் மர்ஹூம் யாஸீன் அவர்களின் மகனான எம்.வை. சப்னி அவர்களும், எழுத்தாளர்களுக்கு உத்வேகமும், உந்துதலும் அளித்து வரும் பரோபகாரி புரவலர் ஹாஷிம் உமரும் இந்த ஆலோசனைக்குழுவில் அங்கம் வகித்து, இந்நிலையத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றுவதாக தலைவர் முஹம்மத் நிசாம் அமைச்சரிடம் தெரிவித்தார்.22459312_1873673505982169_5017160082764526376_o 22459432_1873675332648653_6219596735352974542_o 22520143_1873670032649183_322239510460722108_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here