இது தான் ஆண் விபசாரம் (மா)? – கவிதை

0
524

உங்கள் நண்பன் தமீம்
உணர்வுகள் என்னை சீண்ட
ஆசைகள் வாட்டியெடுக்க
இளமை ஊசலாட
வயதோ தூண்டிலிட்டு இழுக்க
கலைந்து செல்கிறது
நித்தம் நித்தம் திருமணக்கனவு
சீதன சீமாங்களால்
பல அரங்கேற்றம் அரங்கேறியது
மாப்பிள்ளையெனும் மேடைதனிலே
சீதனமோ கதாநாயகனாய்
சிதைந்து போகிறது
எந்தன் கற்பனைகள் யாவும்
காற்றினிலே கண்ணீராக
என்னுள்ளே
கருகிப்போன
பெண்மை உணர்வுக்கு
உயிரூட்டவோ
கலைந்து போன
கனவுகளையும்
கறைந்து போகும் இளமையை சுவாசிக்கவோ
யாருமே
யோசிக்கவில்லை.
சீதனம் கேட்டே
என்னைச் சிதைத்துச் சென்றார்கள்
முதுகெலும்பற்ற
ஆண் கூட்டம் ….!
கடிகார முள்கூட களைத்து போய் நின்றுவிடும்
சில நேரங்களில்….
ஆனால்,
ஓய்வுக்கே ஒய்வு கொடுத்து ஓய்வரிய ஒப்பில்லா
துன்பத்தின் தவப்புதல்வியாய்
கண்ணீரின் விழா நாயகியாய்
ஓய்வில்லாமல் கண்ணீர் வடிக்கிறேன்
வரதட்சனையின் வாட்டத்தினால் வாடி வதங்கி
மாலையிடும் மணவாளன் வருவானோ
அன்பு முத்தம் தருவானோ ஏங்கித்தவிக்கிறது இளமை
மணவாளனுக்கு தேவை மாடி வீடு
மடிந்து விடுகிறது என் கனவுகள் யாவும் கற்பனையாகவே
கணவன் வருவானே
என்னை கற்பமாக்குவானோ
நெற்பமாய்த் தொட்டு ரசிப்பானோ
என் செல்ல குழந்தையை??!”
கணவனுக்கு வேண்டும்
பல்சர் பைக்
என்னை அறியாமலே பறந்து செல்கிறது என் வயது
விலை பேச ஆயிரம் மாப்பிள்ளை வியாபாரிகள்
நானோ கொஞ்சம் விலை அதிகம்
சாய்ந்து விடுகிறேன் கண்ணீரோடு
விபசாரமா?? வியாபாரமா?? திருமணமா?? இதான் ஆண் விபச்சாரம்
திருமண வைபவ மேல தாளச்சத்தம்
பக்கத்து வீட்டினிலே
எந்தன் கைப்பிடி இதயம் வெடித்து சிதறுகிறது
மடிந்து விடுவேனோ கழியா கன்னியாக என்ற ஏக்கத்தில்
ஏக்கமோ ஏங்க, தூக்கமோ கொன்று விடுகிறது
தனிமையினிலே
கழியாத கன்னி
தணியாத இளமை
சிதையாத மௌனம்
யாவுமே
எந்தன் வறுமைத்தீயிலே
தீய்ந்து செல்கிறது
வரதட்சனையின் வீர விளையாட்டால்
நான் கல்லில் செருக்கி சிற்பமில்லை
உணர்வுகள் இறந்த ஜடமுமில்லை
உணர்ச்சியுள்ள சாதாரண பெண்
என் உணர்வுக்கும் உயிருண்டு
உயிர் இருந்தும் உயிரற்ற ஜடாமாய் வாழும் கொடூரம்
எனக்கு மட்டுமே தெரியும் தனிமை என்னை வாட்டும் போது
என் உணர்வுக்கு பதில் சொல்ல முடியாத மௌனியாகிறேன்
கலங்கிறேன்
துடிக்கிறேன்
தனிமையெனும் முற்களின் மேலே
நித்தம் நித்தம் சொட்டுகிறது இரத்தக்கண்ணீர்
வெட்கம் கெட்டு முதுகெலும்பில்லா ஆண் மகனே
நான் சிதைந்து சிந்திக்கிறேன்
கண்ணீர் உனக்குப் புரியவில்லையா?
இன்னும் சொல்லவா
சொன்னால் துன்பமல்லவா
இதான் ஆண் விபசாரமா?
இது தான் ஆண் மகனின் வீரமோ?
இருந்தும் யாசிக்கிறேன்
எந்தன் வயது தாண்டிய எல்லைய
வேலியிடத்துணியும்
எந்தன் பெண்மைக்காக
ஓர் ஆண் மகன் கிடைக்குமா? என யோசிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here