பசிக்கொடுமைக்கு மாங்காய் திருடி மக்கள் வாழும் நாடு வடகொரியாவுக்கு பொருளாதாரத்தடைவிதிப்பது விசித்திரமாகவுள்ளது

0
297

indexஆரிப் எஸ்.நளீம்

பசிக்கொடுமை தாளாது மாங்காய் திருடி உண்ணும் நிலையில் பலர் வாழும் இந்நாடு வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடைவிதித்தமையானது சிங்களத்தில் சொல்வதானால் விசித்திரமாகவுள்ளது.

பொலன்னறுவை நிசப்தமாக இருக்கிறது. மாலை நேரத்தில் சிறு தூரல் மழை. இரவானால் மேனி குளிர இதமான காற்று.
ஆங்காங்கே காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான கெடுபிடிகளைத்தவிர. பொலன்னறுவை மிகுந்த அமைதி கொண்டிருப்பதை உணர முடிகிறது.

நேற்று முன்தினம் கூட யானை தாக்குதலினால் இராணுவ வீரரொருவர் உயிரிழந்திருந்தார். ஆக, உங்களோடு எமது நகர, கிராம நிகழ்வுகளை, செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு எதுவும் இங்கே சம்பவிக்கவில்லையென்பதே நான் மௌனித்திருந்தற்கான காரணம்.

வயிற்றுப் பிள்ளைத்தச்சி ஆசை கொண்டு தன் கணவனிடம் நாவற்பழம் பறித்துக் கேட்கிறாள். கணவனோ தெருவோர  மரத்தில் ஏறி நாவற்பழம் பறிக்கிறான். இது குற்றமா? வீணே விழுகிற பழம் தானே. ஆன போதும், மரத்திலேறி பழம் பறித்ததைக் குற்றமெனக் கருதிய கனம் கோட்டார் அவர்கள், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கிறார்.

இது முஸ்லிம் கொலனி 38 காணியருகே தாஹிரின் தேனீர்க்கடையில் அமர்ந்திருந்தோருக்கும் தெரிந்திருக்கிறது. குறித்த சம்பவம் பற்றி அங்கிருந்தோர் பேசிக்கொண்டிருந்ததை அவ்வழியால் போன என் மோடார் சைக்களின் கார்பலேடரில் ஏற்பட்ட  மூச்சுத்திணறல் காரணமாக சற்று நேரம்  தாமதமானதால் காதில் கேட்டது. அங்கே ஒருவர் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் வகையில் பேசினார்.

நல்லது. பசி பொறுக்க முடியாது. மாங்காய்களைப் பொறுக்கி உண்டு விட்டாள் என்பதற்காக ஒரு வயதானவள் பொலீஸ் காவலில் ஒரு நாள் முழுக்க  வைக்கப்பட்டிருந்ததானது பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை.

நாட்டின் அரசியல், பொருளாதார, கள நிலவரங்கள் எவ்வாறிருக்கிறதென வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியென்பது அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பாதைகளை, பாலங்களை, கோபுரங்களை அமைப்பதில் இல்லை.

அந்நாட்டில் வாழும் மக்களின் முகங்களில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்கள் பிரதிபலிக்க வேண்டும். பசிக்கொடுமை தாங்க முடியாது மாங்காய் திருடி உண்ணும் பலர் வாழும் இந்நாடு வடகொரியாவுக்கு பொருளாதார தடைவிதித்தமையானது நகைப்பிற்குரியது.

இலங்கை அரசியல் எனப்படுவது ஒருவருக்கொருக்கொருவர் குழி பறித்தல் தவிர, வேறில்லை. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி பேரின கட்சியாளர்களின் தனியாட்சிக்கனவு பகல் கனவானது. இது பெரும் ஒற்றைத்தலையிடியாகவே இருந்து வந்தது.

சிறுபான்மைக் கட்சிகளைத் துண்டு துண்டுகளாக உடைத்தனர். தலைமைதுவ ஆசைகளைத் தூண்டினர். பணத்தை, பதவிகளை வழங்கினர். ஊடகங்களைத்திருப்பி வசை மொழிய வைத்தனர்.

அவர்களுடன் ஒத்துப்போகாத தலைவர்களைக் கொலை செய்தனர். அதில் வெற்றியும் கண்டனர். இப்போது புதிய அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்து, எமது தலைமைகளின் கைகளாலேயே தமக்கு வாக்களித்த மக்களின் மொத்த கண்களையும் பிடுங்கி விட்டிருக்கின்றனர்.

பொலன்னறுவையைப் பொறுத்த மட்டில் சிறுபான்மை மக்கள் தமக்கென ஒரு மக்கள் பிரதிநிதியினைப் பெறுவதென்பது பெரும்பாடு. அது மலடி பிள்ளை பெற்றெடுப்பதற்கொப்பானது. இது இவ்வாறிருக்க எதிர்கால அரசியல் நிலவரம் எவ்வாறிருக்குமென்பதை நீங்களே ஊகித்தறிதல் நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here