உரிமையுடன் அபிவிருத்தியும் செய்வது தான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்!- சுதந்திரக்கட்சியின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி 

IMG_20171018_182051ரி.தர்மேந்திரன்

முஸ்லிம் மக்கள் வாழத்தெரிந்தவர்கள், அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை. அவர்களின் உரிமைகளைப்பற்றிக் கதைத்துக் கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு அமைப்பாளராக இக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த வாரம் நியமனம் பெற்றது தொடர்பாக காரைதீவிலுள்ள இவரின் இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசிய போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே நம்புகின்றார்.

இந்த நம்பிக்கையில் தான் அடுத்த வருடம் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புடன் மிக மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவார்கள் என்று வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகளை வேறு இடை முகவர்கள் மூலமாகவன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மூலமாக நேரடியாகவே பெற்றுக்கொடுப்பது உசிதமானதும், சாலப்பொருத்தமானதும் என்பது எனது நிலைப்பாடாகும்.

ஆகவே தான் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அமைப்பாளராக இணைந்துள்ளேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லவர். எளிமையானவர். நேர்மையானவர். இதனால் தான் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ஏராளமான தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த வண்ணமுள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கொடி கட்டிப்பறக்கின்றது. ஆகவே, இவர் தலைமையிலான சுதந்திரக்கட்சியில் அமைப்பாளராக நான் செயற்படுவது குறித்து பெருமையும், பெருமிதமுமடைகின்றேன்.

நான் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயற்பட்டவன் தான். தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு காரைதீவு பிரதேச சபைக்கு உப தவிசாளராக தெரிவாகி இருந்தேன்.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவனவாகவுள்ளன. 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்து அடுத்த தேர்தல் தமிழீழத்தில் தான் நடக்கும் என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றினார்கள்.

கடைசியில் தமிழீழமும் கிடைக்கவில்லை, தமிழர்களுக்கு எந்தத்தீர்வும் கிட்டவில்லை. இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவித்தே ஆக வேண்டும்.

முஸ்லிம் மக்கள் வாழத்தெரிந்தவர்கள். அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை. அவர்களின் உரிமைகளைப்பற்றி கதைத்து கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள்.

அவர்களுடைய வாழ்வாதாரம் செழித்து காணப்படுகின்றது. ஆனால், தமிழ் தேசிய அரசியல் மூலமாக இது வரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்கப் பெறவில்லை என்பதோடு, எந்தவொரு அபிவிருத்தியும் கிட்டவில்லை என்பதும் பெருங்கவலைக்குரிய விடயங்களாகும்.

இந்நிலைமையில் தான் முஸ்லிம்களினதும், முஸ்லிம் பிரதேசங்களினதும் மேம்பாடு தங்கமாகவும், தமிழர்களினதும், தமிழ் பிரதேசங்களினதும் மேம்பாடு தகரமாகவும் இருப்பதைத்தெட்டத் தெளிவாக கிழக்கு மாகாணத்தில் கண்டு கொள்ள முடிகின்றது.

தமிழ் மக்களின் அரசியலில் நின்று நிலவி வருகின்ற இந்த இடைவெளி நிச்சயம் நிரப்பப்படுவதன் மூலமாகவே எதிர்காலத்திலாவது தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் களை கட்ட முடியும்.

கருணா அம்மான் பிரதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் எத்தனையோ நன்மைகளை அரசாங்கம் மூலமாக தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். அவற்றை அவர் வெளிப்படுத்தவுமில்லை. அவை வெளியில் வரவுமில்லை.

ஒரே நாளில் 71 பேருக்கு சுகாதார உதவியாளர் நியமனத்தை இவர் பெற்றுக்கொடுத்த அபார திறமையை நான் இவரின் இணைப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் கண்டு அசந்து போனேன். தமிழ் தேசிய கூட்டமைப்பால் இவ்வாறான ஒரு சாதனையை மேற்கொள்ள முடியுமா?

தமிழ் மக்கள் இனி மேலாவது ஆவேசப்பேச்சுகளுக்கும், உணர்ச்சிக் கொப்பளிப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் எதிர்கால நன்மைகளை கருத்திற்கொண்டு அவற்றைப்பெற்றுத்தரக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வருகின்ற தேர்தல்களில் அமோகமாக வாக்களிக்க வேண்டுமென்று விநயமாகக்கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>