வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?

0
232

unnamedதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.

வடக்கு, கிழக்கு இணைப்புப்பற்றிய கதையாடல்கள் வரும் போதெல்லாம் அது பற்றித்தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய மு.கா ஒழித்து விளையாடுகிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமா? என்ற வினாவை எழுப்புகின்றனர். எனவே, இது சாத்தியமானதா? என்பது தொடர்பில் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

சில காலங்கள் முன்பிருந்த தொழில்நுட்ப வளர்ச்சியையும் தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும் எடுத்து நோக்குங்கள். இதுவெல்லாம் சாத்தியமென்று நினைத்தோமா? நேரிய முயற்சிகள் சிறந்த விளைவைத்தரும்.

வடக்கு, கிழக்கு இணைப்பு இதற்கு முதல் நடக்காத ஒன்றுமல்ல. முன்னாள் இலங்கை ஜனாதிபதிகளில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலப்பகுதியான 1987ம் ஆண்டு அது தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இணைப்பிற்கும் நிரந்தர இணைப்புக்கும் ஒரே வகையான முறைகள் தான் பயன்படுத்தப்பட்டன. அன்று கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதற்குப் பதிலாக இணைக்கப்பட்ட இரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தால், இன்று வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்.

அன்று இனவாதச் செயற்பாடுகள் இல்லாமலுமில்லை. இனவாதச் செயற்பாடுகள் ஆதிகாலம் தொட்டே நிலவி வருகிறது. குறித்த வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நடப்பதற்கு சுமார் நான்கு வருடங்கள் முன்பு, அதாவது 1983ம் ஆண்டு பாரிய இனக்கலவரமொன்றே இடம்பெற்றிருந்தது. இப்படியான நிலையில், இதனைச்செய்ய முடியுமாக இருந்தால், இன்று அதனைச் செய்வதொன்றும் பெரிய விடயமல்ல. இதனை இணைத்ததன் பின்பும் பாரிய இனவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம்களுக்கு பாதகமென நன்கு தெரிந்தும், தங்களது பதவி பட்டங்களைப் பாதுகாத்துக்கொள்ள எத்தனையோ விடயங்களை மு.கா உட்பட முஸ்லிம் கட்சிகள் ஆதரித்துள்ளன. அது போன்று தங்களுக்கு பாதகம் தான் என்றாலும், வீசுவதை வீசினால் பேரின பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்விணைப்பின் சாத்தியத்தியத்துக்கு இவர்களே பெரும் சான்றாகும். இவ்விணைப்பில் பேரின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களில்லை. இன்று வடக்கு, கிழக்கில் பேரின மக்கள் சிறுபான்மையினராகவே வாழ்ந்து வருகின்றனர்.

அன்றிருந்த தொகுதிவாரித்தேர்தல் முறை மிக இலகுவான தேசிய கட்சிகளுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தது. இன்றைய தேசிய அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை போதுமாகும். ஏன் இணைப்பு சாத்தியமில்லை? இன்று சட்டமுதுமானியான அமைச்சர் ஹக்கீம் இவ்விணைப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கூறுகிறார். இரு மாகாணங்களை இணைக்க இரு மாகாணங்களிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென சட்டத்திலோ அல்லது அரசியலமைப்பிலோ எங்குள்ளதென்பதை அமைச்சர் ஹக்கீம் வெளிப்படுத்துவாரா?

இவ்வாறானதொரு செயலைச் செய்தால் இவ்வரசாங்கம் நிலைத்திருக்காதென்ற வாதமுள்ளது. அன்று வடக்கு, கிழக்கை இணைத்தமையால் ஜே.ஆர் அரசு மிக இக்கட்டான நிலைக்குச் சென்றிருந்ததென்பது வரலாறு கூறும் உண்மை. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் இற்குத் தெரியாமலுமில்லை. இலங்கையில் நடக்கும் பல விடயங்கள் சர்வதேசங்களின் சித்து விளையாட்டுக்கள்.

அதிலும், தற்போது அமெரிக்காவின் செல்வாக்கு இலங்கையில் அதிகம். கடந்த ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் செல்வாக்கிருந்ததை அமெரிக்க முக்கியஸ்தர் ஒருவர் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்கா வட கொரியாவை ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி அதன் சவாலை எதிர்கொள்ளச் சிந்திப்பதாக வட கொரிய அதிபரே கூறியிருந்தார்.

அதாவது, இங்கு நான் கூற வருகின்ற விடயம், ஆட்சி மாற்றமெல்லாம் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு ஒரு பெரிய விடயமல்ல. இதனை எவ்வாறு எதிர்கொள்வதென்ற திட்டம் ஏலவே வகுத்திருப்பார்கள். இலங்கை போன்ற உணர்ச்சி அரசியலை நம்பி வாக்களிக்கும் மக்களைத்திசை திருப்புவது பெரிய விடயமுமல்ல. அன்று, ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி சவாலை எதிர்கொண்டாலும், இன்று அக்கட்சி தான் ஆண்டு கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here