அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!-எஸ்.லோகநாதன்

0
235

18700197_1761953084135512_4703351224909585148_nரி.தர்மேந்திரன்
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 25 வருட கால வரலாற்றில் இத்தொழிற்சங்கத்தின் மத்திய குழுவுக்குள் முதற்தடவையாக வட மாகாண உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பொதுச்செயலாளராக முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையைச்சேர்ந்த எஸ். சற்குணராசா நியமிக்கப்பட்டுள்ளதுடன், இணைத்தலைவர்களில் ஒருவராக கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தை சேர்ந்த ஏ. புண்ணியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஜோன்சன் கென்னடி அதியுயர்பீட சபை உறுப்பினர்களில் ஒருவராகவும், முல்லைத்தீவில் துணுக்காய் பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற கே.அன்ரனி சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராகவும், வவுனியாவைச்சேர்ந்த தேவகிருஷ்ணன் ஊடக ஆலோசகர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக இச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

எமது சங்கத்தின் வருடாந்த[ப் பொதுக்கூட்டத்தில் எஸ். லோகநாதன் தலைவராகத்தொடர்ந்து செயற்படுவதற்கு உறுப்பினர்களால் ஏற்கனவே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், இத்தொழிற்சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும், இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களும் சேர்ந்து தலைமைத்துவ நெருக்கடிகளை கடந்த சில மாதங்களாக ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், எமது சங்கத்தால் கடந்த போயா விடுமுறை தினத்தில் விசேட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, தலைவராக எஸ். லோகநாதனே தொடர்ந்து செயற்பட வேண்டுமென்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதாவது, எஸ்.லோகநாதன் தான் எமது சங்கத்தின் தலைவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், எமது சங்கத்தின் செயற்பாடுகளை இடையூறுகளின்றி மேற்கொள்வதற்கு வசதியாக புதிய நிர்வாகிகள் சபையும் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன், எமது சங்கத்தின் யாப்பைத் திருத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

எமது சங்கம் கல்முனையைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற போதிலும், எமது சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் வட மாகாணத்தைச் சேர்ந்த தோழர்களாவர். மேலும், எமது சங்கத்தின் செயற்பாடுகளில் வட மாகாணத்தைச்சேர்ந்த தோழர்களே கூடுதல் அக்கறையும், அதிக ஈடுபாடும் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

எமது சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாணத்தைச் சேர்ந்த தோழர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பது இவர்களின் மிக நீண்ட காலக்கோரிக்கையாகும். இவர்களின் இக்கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான தருணம் தற்போது தான் கனிந்த நிலையில், அன்றைய விசேட பொதுக்கூட்டத்தில் வைத்து மத்திய குழுவுக்கு அரைவாசிப்பேர் வரையானோர் வட மாகாணத்திலிருந்து தெரியப்பட்டனர்.

எமது சங்கம் வடக்கு – கிழக்கு இணைப்பில் அன்று முதல் இன்று வரை பற்றுறுதியாக இருந்து உறுதியாகச் செயற்பட்டு வருகின்ற நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு இணைந்த எமது மத்திய குழு அரசியல் விழிப்பூட்டுகின்ற ஒரு முன்னுதாரணமாகும். அத்துடன், தலைவர் எஸ். லோகநாதன் பிரதேசவாதியோ, சர்வாதிகாரியோ, கொடுங்கோலரோ அல்லர் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எமது சங்கத்தின் நிர்வாக ஆலோசகராக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவும், சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அறியத்தருகின்றோம்.

இத்தெரிவுகளுக்குப் பின்னர் எமது மத்திய குழு அடுத்த மாதம் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்முனை சன சமாச மண்டபத்தில் முதன்முதலாகக் கூடுகின்றது. அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பலவும் எடுக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here