வெளி மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும்-முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்

0
273

FB_IMG_1503853962391(1)எஸ்.எம்.எம்.முர்ஷித்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் வேறு மாகாணத்திற்கு கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை நியமித்துள்ளதை உடன் இரத்துச்செய்ய வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் தனது 2017ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் எறத்தாழ நான்காயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போது, ஆயிரத்து எழுநூறு பேருக்கு நியமனம் வழங்குவதற்கான அங்கீகாரத்தையும் பணத்தையும் கொண்டு வந்து அதன் முழு நடவடிக்கையும் மேற்கொண்டு இவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தினோம்.

அதில் 259 பேருக்கு நியமனம் வழங்கி விட்டு, மீதி 1441 பேருக்கு நியமனம் வழங்கவிருக்கின்ற நேரத்தில், இன்னும் 3187 பேருக்கு வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற போது, மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு எவ்வாறு அனுப்ப முடியும்?

எங்களது மாகாணத்தினுடைய கல்வியை மத்திய அரசு ஒரு போதும் பிற்போடுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனியாக இருக்கின்ற வேளையில், இவ்வாறு மாகாணத்திற்கு அநியாயங்கள் நடைபெறுமென்ற யதார்த்தத்தை நாங்கள் சொல்லாமல் இருக்க முடியாது.

2015, 2016ம் ஆண்டு இவ்வாறான செயல்களை மத்திய அரசாங்கம் மேற்கொண்ட போது, தட்டிக்கேட்டு மீளவும் ஆசிரியர்களை மாகாணத்திற்கு கொண்டு வந்த வரலாறாக மாகாண ஆட்சியை நாங்கள் கொண்டு வந்தோம். பாடசாலைகளுக்குச் சென்று என்ன பாடங்களுக்கு எத்தனை வெற்றிடங்கள் உள்ளதென்று ஆராய்ந்து புத்தக வடிவில் வைத்திருக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்த்துக் கேட்டிருந்தால் இன்று எமது ஆசிரியர்கள் வேறு மாகாணத்திற்கு அனுப்பி வைத்திருக்க முடியாது. எங்களது பிள்ளைகள் தொழிலை எடுப்பதற்கு எடுக்கின்ற வேதனை எனக்குத்தெரியும். எனது அலுவலகத்திற்கு வந்து பெண் பிள்ளைகள் கதறி அழுத வரலாறுகள் எனக்குத்தெரியும்.

2015, 2016ம் ஆண்டு மத்திய கல்வியமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து மீள ஆசிரியர்களை எங்களது மாகாணத்திற்கு கொண்டு வந்தோம். தற்போது ஆசிரியர்களை மீளக்கொண்டு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல ஆளுநருக்கும் கடமைப்பாடிருக்கின்றது.

கிழக்கு மாகாண அதிகாரங்கள் அனைத்தையும் ஆளுநர் கையில் வைத்திருக்கின்றார். கிழக்கு மாகாண அதிகாரங்கள் அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவரது கையில் ஒட்டு மொத்தமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆளுநருக்கு முழுப்பொறுப்பும், கடமையும் இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் இருக்கின்ற போது, மாகாணத்திலிருக்கின்ற ஒருவரையும் வெளி மாகாணத்திற்கு அனுப்பக்கூடாதென்று சொல்ல வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது.

வெளி மாகாணத்திற்கு நியமனம் பெற்றுச்சென்ற ஆசிரியர்கள் உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் வெற்றிடம் இருக்கின்ற போது, வேறு மாகாணத்திற்கு அனுப்பாமல் கிழக்கு மாகாணத்திற்கு மீள நியமியுங்கள்.

மாகாண சபைத்தேர்தல் ஜனநாயக விழுமியங்களுக்கப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்காவது தேர்தல் நடைபெறுமா? என்று எதிர்பார்த்தோம். அதுவும் பிற்போடப்படும் என்று நினைக்கின்றோம்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வருவதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு வீடு வீடாகச்சென்று அதன் வெற்றிக்கு நடவடிக்கையெடுக்கப்படும்.

ஓட்டமாவடி பிரதேச சபையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளோம். அது மாத்திரமின்றி, வாழைச்சேனையிலும் நான்கு வட்டாரத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்பதைத் தெரிவிக்கின்றேன். உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடத்திலுள்ளது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காக உள்ளூராட்சி மன்றத்தைக் கைப்பற்ற வேண்டும்.

மட்டக்களப்பு சவுக்கடியில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற இரட்டைக்கொலை அத்தோடு கடந்த வருடம் ஹஜ்ஜூப்பெருநாள் தினம் ஏறாவூரில் இரட்டைக்கொலைகள் இடம்பெற்றது. இதனைச் செய்தவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டு உடனடியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுத்து பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டுமென்றார்.

கிழக்கு வீடமைப்பு அதிகாரச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.அன்வர், எஸ்.அஹமட், மட்டக்களப்பு மத்தி வலய ஆசிரிய ஆலோசகர் ஜாபீர் கரீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் 2017ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில்  மீராவோடை அல் அக்ரம் விளையாட்டுக்கழகத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டுபகரணங்கள், மாஞ்சோலை ஹிறா விளையாட்டுக்கழகத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டுபகரணங்கள், காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழகத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டுபகரணங்கள், மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு ஒன்றரை இலட்சம் பெறுமதியான ஒலி பெருக்கி, மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஒன்றரை இலட்சம் பெறுமதியான கணனி உபகரணங்கள், பொத்தானை மீனவர் சங்கத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான வலைகள், ஓட்டமாவடி மக்கள் வாழ் மன்றத்திற்கு எண்பதாயிரம் பெறுமதியான தளபாடங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (10) 01 (11) 01 (12) 01 (13) 01 (14) 01 (15) 01 (16) FB_IMG_1503853962391(1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here