மல்வத்தைக்கு தனியான பிரதேச சபை வேண்டும்-செல்லையா இராசையா

0
168

18767426_627959554073878_917753153920788419_nரி.தர்மேந்திரன்
மல்வத்தையை மையமாக கொண்டு தனியான பிரதேச சபையொன்றை அமைத்துத்தர வேண்டுமென காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான செல்லையா இராசையா அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் இஸ்தாபித்தல் தொடர்பான குழுவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

இக்கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டியதன் நியாயத்தையும், அவசியத்தையும் ஆதாரங்கள் சகிதம் இவர் மேற்படி குழுவுக்கு விளங்கப்படுத்தியும் உள்ளார்.

இவர் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோருக்கு உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

அம்பாறையில் கல்லோயா குடியேற்றம் வருவதற்கு முன்னர் மல்வத்தை ஒரு சிறிய நகரப்பிரதேசமாக இருந்து வந்தது. பிரதேச சபை சட்டமூலம் ஆக்கப்படுவதற்கு முன்னர் ஒரு கிராமாட்சி மன்றமாகச் செயற்பட்டு வந்தது. பின்னரே சம்மாந்துறை பிரதேச சபையுடன் ஒன்றிணைக்கப்பட்டது.

ஆனால், இது ஒரு பின் தங்கிய பிரதேசமாக அபிவிருத்தியடையாமல் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்தியில் மாத்திரமன்றி, கல்வியிலும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்றது. இங்கு வாழ்கின்ற மக்கள் யுத்தத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களாவர்.

இம்மக்களும், இவர்கள் சார்ந்த பொது அமைப்புகளும் தனியான பிரதேச சபையை அமைத்துத்தர வேண்டுமென்று அரசியல் தலைமைகளுக்கும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்ற போதிலும், அது நிறைவேற்றிக் கொடுக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

மல்வத்தை பிரதேசம் 31 சதுர மைல் பரப்பையும், 21000 மக்களையும் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் இப்பிரதேசத்தை விடக் குறைந்த நிலப்பரப்பையும், சனத்தொகையையும் கொண்ட பல பிரதேசங்களுக்கு பிரதேச சபைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பிரதேச சபை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. எனவே, அதில் இருந்து 21000 தமிழ் மக்கள் அவர்களுடைய கல்வி, கலாசார விழுமியங்களையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பவும், அரசாங்கத்தின் சேவைகளைப்பெற்று அவர்களுடைய அன்றாட, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கூடிய வகையில், அவர்களுக்கு தனியான பிரதேச சபை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகவுள்ளது.

எனவே, இந்நியாயமான கோரிக்கையை ஏற்று மல்வத்தையில் தனி பிரதேச சபை அமைக்கப்பட வேண்டுமென்று தாங்கள் சிபாரிசு செய்ய வேண்டுமென பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். மேலும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவைச் சந்தித்து சாட்சியம் வழங்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here