முன்னாள் முதலமைச்சர் மீதான விமர்சனம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது-எம்.லாஹிர்

0
136

பிவ்ப்ப்ப்ஊடகப்பிரிவு
முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.லாஹிர் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தில் பிரதியமைச்சொன்றை வைத்திருக்கும் அமீர் அலி கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரிகளில் கற்று வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களைச் சொந்த மாகாணத்திற்குப் பெற்றுக்கொடுக்க முடியாமல் முன்னாள் கிழக்கு முதல்வரின் செயற்றிறன் குறித்துப்பேசுவது வேடிக்கையாகவுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.லாஹிர் குறிப்பிட்டார்.

கிழக்கின் கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக்கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லாஹிர்,

கடந்த 2015, 2016ம் வருடங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களை சொந்த மாகாணத்திற்கு கொண்டு வருவதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றார்.

தற்போது குறித்த ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கல்வி கற்பிக்கின்றனர். எமது மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகையில், எமது ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நியமனங்களை மத்திய அரசாங்கமே வழங்கியுள்ளது. அவ்வாறாயின், மத்தியரசாங்கத்தினால் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை மத்தியரசில் அமைச்சராகவுள்ளவர்களாலே தீர்க்க முடியாவிட்டால், அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் இனி சிந்திக்க  வேண்டியுள்ளது.

மத்தியரசில் அங்கம் வகித்தும்  ஒரு சமூகப்பிரச்சினையை  உரிய தலைமைகளுடன் பேசித்தீர்க்கும் ஆளுமை   உங்களிடம்  இல்லையென்பதை  மக்கள் தற்போது  நன்குணர்ந்துள்ளனர்.

கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்துக்கு இனி முதலமைச்சராய் வரக்கூடாதென அமீர் அலி தெரிவித்தாரென்றால் , இதுவரை  காலமும்  அரசியலிலிருந்த உங்களால் செய்ய முடியாத கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணத்தில் நியமிக்கும் சாதனையை அவரே  நிலை நாட்டினார்.

மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கையில், சொந்த மாகாணத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கண் கலங்கி நிற்கையில், பாராமுகமாக இருக்கும் உங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் தரத்தையும் முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் பெறுமதியையும் மாகணம் தற்போது உணர்ந்திருக்கின்றது.

ஆகவே, மாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளைத்தீர்க்கும் திறனற்ற நீங்கள், அதுவொரு சுலபமான காரியமெனச் செய்து காட்டிய முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரிடம் ஆளுமையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

மக்கள் பணி செய்யும் அரசியல்வாதிகளைத்தூற்றி, தமது இயலாமையை மறைக்க முடியுமென எண்ணினால், அதனை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் இனியும் தயாரில்லையென்பதை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்.

உண்மையில், நீங்கள் ஆளுமை, ஆற்றலுள்ள அரசியல்வாதியாக இருந்தால், வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை ச் சொந்த  மாகாணத்தில் நியமித்துக்காட்டுங்கள்  என சவால் விடுப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் லாஹிர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here