மட்டு.மாவட்டம் போதையால் அழிந்து விடும் அச்சமுள்ளது-பிரதியமைச்சர் அமீர் அலி

0
331

IMG_7207எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வரப்போகின்றதென்ற அச்சம் எனக்குள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “நாம் போதையற்ற இளைஞர்கள்” என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு கிரான் மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த 23.10.2017ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற போது, உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் போதையால் அழிந்து விடுமோ என்ற அச்சம் எங்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஏனெனில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக, கல்குடாத்தொகுதியில் எதனோல் தொழிற்சாலை அமைய இருப்பது மட்டக்களப்பு மாவட்டத்தை போதைக்கு உகந்த இடமாகத்தெரிவு செய்திருப்பது கவலையான விடயமாகவுள்ளது.

எங்களால் இதனைத்தடுக்க முடியுமென்ற விடயத்தை மாத்திரம் தான் செய்யலாம். சட்டத்திற்குள் உள்ள ஓட்டைகளை வைத்துக் கொண்டு இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையிலே ஐந்து ஏக்கர் காணி ஒரு தனியார் மதுபான நிலையத்திற்கு கல்குடாவில் ஏன் வழங்க வேண்டுமென்று யோசிப்பீர்களாக இருந்தால், எங்களுக்கு கண்ணத்தில் அறைவதற்காக வந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடியும்.

எங்களுடைய கல்வியை கவிழ்ப்பதற்காக, எதிர்காலத்தை இல்லாமல் செய்வதற்காக வந்திருக்கின்றார்கள். உங்களை எங்களைப்போன்ற தலைவர்களை மாவட்டத்தில் இல்லாமல் செய்ய வேண்டும். நோய் வாய்ப்பட்டவர்களாக, சிறுவயதில் நோய்க்குள்ளாகின்றவர்களாக மாற்ற வேண்டுமென்பதில் கங்கணம் கட்டித் திரிகின்றார்கள்.

போதையிலிருந்து பாதுகாக்கின்ற பொழுது தான் மட்டக்களப்பு மாவட்டத்தை சிறந்த மாவட்டமாகக் காண முடியும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எடுக்கின்ற முனைப்புக்கள் தான் இந்த மாவட்டத்தை எதிர்காலத்தில் பாதுகாக்க முடியும்.

இலங்கையில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் எந்த மதுபானசாலையும் இல்லை. முஸ்லிம் பகுதிகளில் மதுபானச்சாலைகள் திறக்கப்படுமாக இருந்தால், அப்பகுதி மக்கள் திரண்டெழுவார்கள். அதனை மீறி அமைக்கப்படுமாக இருந்தால், ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட போத்தல்கள் மாத்திரம் விற்பனை செய்யப்படும்.

முஸ்லிம் பகுதியில் குடிப்பதற்கு யாருமில்லையென்று சொல்லவில்லை. அங்கும் பெரும் குடிமக்கள் இருக்கின்றார்கள். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் சகோதரர்களை ஒப்பிடுகின்ற போது, மிக அரிதாகக் காணப்படுகின்றது.

அதற்குப்பிறகு நாங்கள் கவலை, சந்தேகப்படுகின்றோம். எங்களது கிராமம் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடியைப் போலில்லை. அரசியல் தலைவர்கள் சொல்கின்றார்கள். துசேவத்தைப் பேசுகின்றார்கள், காரண காரியங்களைச் சொல்கின்றார்கள்.

அடிப்படையிலே நாங்கள் போதைக்காக, தேவையில்லாத விடயத்துக்காக அதிக பணத்தைச் செலவிடுகின்றோம். மீதம் பிடிக்க முடியாமல் பிள்ளைகள் நல்ல கல்வி கற்க பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல வேண்டுமென்றால், பணம் புரட்ட முடியாது. உங்கள் வீட்டின் தலைவர்கள் உழைப்பின் ஐம்பது வீதம் போதைக்காகச் செலவு செய்கின்றார்கள்.

மாணவர்களாகிய உங்களுக்கு கணனி மற்றும் நகைகள் வேண்டித்தருமாறு நீங்கள் கேட்டால், உங்களது பெற்றோர்களால் வாங்கித்தர முடியாது. உங்களது உடம்பையும் கெடுக்காமல், எங்களையும் வறுமைக்குள் விட்டு விட்டுச்செல்லாதீர்கள் என்ற செய்தியை பெற்றோரிடத்தில் அன்பாகப்பகிர்ந்து கொள்கின்ற மாணவர்களாக இருப்பீர்களென்றால், உங்கள் வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களிடத்தில் நான் மன்னிப்புக்கோர வேண்டுமென்று ஒரு ஊடக அறிக்கையினை பார்த்தேன். என்ன விடயமென்றால், மட்டக்களப்பு மாவட்டத்தில் போய் வருகின்ற எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் அதிகம் மதுபோதையைப் பாவிக்கின்றார்கள் என்று எங்களை அசிங்கப்படுத்தி வருகின்றார் என்று ரெலோ இயக்கத்தின் நிர்வாகச்செயலாளர் நித்தி மாஸ்டர் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு நான் சொல்வது என்னவென்றால், போதையிலிருந்து நீங்கள் ஊடக அறிக்கை எழுதாதீர்கள். போதையிலிருந்து எழுதினால் அவ்வாறு தான் எழுதுவீர்கள். இது என்னுடைய தனிப்பட்ட விடயத்திற்காகச் சொல்லுகின்ற விடயமல்ல.

அதில் துவேசமான வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். அவருக்குத்தெரியாது முஸ்லிம் பிரதேசத்தில் எத்தனை பேர் மதுபோதை பாவிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்று, நான் மறுத்ததே கிடையாது. இந்த விடயம் தமிழ் சமூகத்துக்கு மாத்திரமல்ல. முஸ்லிம் மக்களிடத்திலுள்ள பெருங்குடியினருக்கும் சேர்த்துத்தான் நான் சொல்கின்றேன்.

ரெலோ இயக்கத்தின் நிர்வாகச்செயலாளர் இன்னுமொரு அறிக்கையினை போதையிலிருந்து எழுதக்கூடாதென்று கேட்டுக் கொள்கின்றேன். இது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பற்றிய எதிர்காலப்பிரச்சனை தொடர்பாக மதுபோதைக்கு சங்கமமாகவிருக்கின்ற பிரச்சனை சாதாரணமாக இருக்கலாம் என்றார்.

கிரான் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.விந்தியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வேலட் விஷன் முகாமையாளர் திருமதி.ஹிந்து றோகஸ், மட்டக்களப்பு விமோசனா நிறுவன உத்தியோகத்தர் எப்.சகாதேவன், இலங்கை சிறைச்சாலை ஐக்கிய கிழக்கு பிராந்திய மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரவீந்திரன், கிரான் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் வி.ரமேஸ், கிரான் பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு உத்தியோகத்தர் பி.வரதராஜன் மற்றும் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.IMG_7155 IMG_7160 IMG_7162 IMG_7164 IMG_7167 IMG_7173 IMG_7183 IMG_7207

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here