ஆசிரியர் நியமனங்களின் போது, பற்றாக்குறையுள்ள பிரதேசங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்- முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
210

IMG_20171025_095321கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சை நிறைவு பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் போது, ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு, நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திக்கும் வகையில் குறித்த பட்டதாரிகள் நியமனங்களை  முன்னெடுப்பதற்கான திட்டங்களை  தாம் முன்னர் வகுத்திருந்தாகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

தற்போது கிழக்கின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையின் முடிவுகள் வௌிவந்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,

கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது மாகாணத்தின் கல்வித்துறையின் பின்னடைவுக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதுடன், அதனை நிவர்த்திக்க உரிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை நாம் அரசாங்கத்துக்கு வழங்கி எமது  மாகாணத்தில் மேலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.

இந்நிலையிலேயே பட்டதாரிகளின் போராட்டமும் இடம்பெற்றது. அவர்களின் போராட்டம்  மூலமான அழுத்தமும் எமது தொடர் முயற்சிக்கமைய அரசாங்கம் எமக்கு 1700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதியை வழங்கியது.

இதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 259 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தோம். இந்நிலையிலேயே ஏனைய 1441 பேரை நியமிப்பதற்கான போட்டிப்பரீட்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. குறித்த 1441 பேருக்கான நியமனத்தின் போது, ஆசிரியர் பற்றாக்குறை அதிகமுள்ள பகுதிகளை மையப்படுத்தி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு சில கல்வி வலயங்களுக்கு மாத்திரம் ஆசிரியர்கள் பகிர்ந்தளிக்கப்படுவதால், எமது மாகாணத்தின் கல்வி நிலை வளர்ச்சியடையுமென எண்ணுவது தவறாகும். அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு  கோரப்பட முன்னர் குறித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை ஆளுநர் வழங்க வேண்டும்.

இல்லையெனில், போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலையேற்படும் என்பதைக் சுட்டிக்காட்ட வேண்டும்.

இதே வேளை, தற்போது எமது மாகாணத்தைச்சேர்ந்த  கல்வியியற்கல்லூரி ஆசிரியர்கள் வௌி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். எமது  மாகாணத்தில்  ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு தொடர் ஆர்ப்பாட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எமது மாகாண ஆசிரியர்கள் வௌிமாகாணங்களுக்கு நியமிக்கப்படுவது எமது மாகாணத்தின் கல்விக்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய துரோகமாகும்.

ஒரு சில  மாகாணங்களின் கல்வி நிலை மேம்பாடு முழு நாட்டினதும்  கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்காது. மாறாக, ஒட்டு மொத்த மாகாணங்களின் கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் துணை புரியும்.

எனவே, கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையைக் கருத்திற்கொண்டு அங்குள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் விதமாக எமது ஆசிரியர்கள் எமது மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here