ஆதம் றிஸ்வின்
ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் நிருவாகத்தெரிவிற்கான தேர்தலில் மூன்று அணிகள் பிரதானமாகக் களமிறங்கியுள்ளன. அதில் ஹனீபா ஹாஜியார் தலைமையில் ஒரு குழுவும், ஹனீபா (மம்மலி ஜீஎஸ்) தலைமையில் இன்னொரு குழுவும், மூன்றாவதாக மாற்றத்திற்கான நடுநிலை அணியென்று ஒரு குழுவும் களமிறங்கியுள்ளனர்.
சமூகத்தில் முக்கிய நிலைகளிலிருக்கும் 17 பேரை உள்ளடக்கிய மாற்றத்திற்கான நடுநிலை அணியானது, எந்தவித அரசியல் பின்னணியுமின்றி பள்ளிவாயலின் மறுமலர்ச்சியைக் குறிக்கோளாக மட்டும் கொண்டு களமிறங்கியுள்ளதால் அதிக எதிர்பார்ப்பினைக் கொண்ட அணியாகவும் காணப்படுகின்றது.
இருந்தாலும், மற்றைய இரு அணியினரும் இந்த நடுநிலை அணியினுள் உள்ளடங்கும் சுமார் 6 பேரை தங்களது பிரசார விளம்பரங்களிலும் உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதால், இந்த 6 பேரும் உண்மையில் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குழப்ப நிலையேற்பட்டிருந்தது.
இக்குழப்பங்களைக் களையும் வண்ணம் மாற்றத்திற்கான நடுநிலை அணியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அனைவரும் கடந்த 25.10.2017ம் திகதி புதன்கிழமை இரவு ஏ.எல்.எம். றிசான் அவர்களின் இல்லத்தில் ஒன்றாகக்கூடி தாங்கள் ஒரே அணியாகவுள்ளதை நிரூபித்துள்ளனர்.
இதன் மூலம், ஏனைய இரு குழுக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென்றும், மாற்றத்திற்கான நடுநிலை அணியினுடனேயே தொடர்ந்தும் இருப்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு, மாற்றத்திற்கான நடுநிலை அணியிலுள்ள 6 பேரின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியில்லாமலேயே மற்றைய இரு அணியினரும் தங்களது பிரசார விளம்பரங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.