போலிக் கணக்குகள் அற்ற முகநூல் Facebook without Fake Accounts

0
889

-M.I.MUHAMMADH SAFSHATH, UNIVERSITY OF MORATUWA-

PicsArt_10-27-08.51.16தேர்தல்கள், தெரிவுகள் என்று வந்துவிட்டால் பிரச்சாரங்கள் தோற்றம் பெறுவது போலவே மழைக்காளான்களாய் சில போலிக்கணக்குகளும் (Fake Account) ஏராளமான வசைபாடல்களும் முகநூல் (Facebook) முழுவதும் முடுக்கிவிடப்படுவது என்னவோ வெகு சாதாரணமாகிப்போன விடயம் ஒன்றாக, குறிப்பாக எமது பிரதேசத்தில் ஆகிவிட்டுள்ளது கவலைக்குரிய உண்மையே! இலங்கை மொத்த சனத்தொகையில் இணையதள பாவனையாளர்களின் 60.98% ஆனோர் முகநூல் பாவனையாளர்கள். 2012 காவல் துறை அறிக்கைப் படி 20% ஆன இலங்கை முகநூல் கணக்குகள் போலிக் கணக்குகள்.

எது போலிக் கணக்கு?

விடயத்திற்கு வரமுன் போலிக்கணக்கு (Fake Account) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.
பார்வை 1) முகநூல் நிர்வாகம் (Facebook Administration) அதாவது மார்க் சுகர் பேக் விதிமுறைகளுக்கு அமைவாக ஒரு கணக்கு உரிமையாளர் இவர் தான் என்பதை பிறர் அறியா விதத்தில் அவரது கணக்கு பேணப்படின் அது போலிக் கணக்கில் அடங்கும். இதன்படி நாம் மெய்க் கணக்காக(True Account) கருதும் சில கணக்குகளும் போலிக் கணக்குகள் ஆகின்றன. உதாரணமாக தனது புகைப்படம், தொடர்புத் தகவல்கள் வெளிப்படத்தப்படாது தமது கணக்கை தாமே இயக்கும் கணக்குகள் கூட இதில் அடங்கிவிடுகின்றன.

பார்வை 2) முகநூல் பாவனையாளர்களைப் (Facebook Users) பொருத்தவரை தொடர்புத்தகவல்கள் வழங்கப்படாத கணக்குகள் எல்லாம் போலிக் கணக்குகளாக பார்ககப்படுவதில்லை. மாறாக தங்களை இன்னாரென காட்டிக்கொள்ளாது இயங்கும் கணக்குகள் மாத்திரம் போலிக்கணக்குகளாக அவதானிக்கப்படும். உதாரணமாக சில பெண்கள் தங்கள் முகநூல் கணக்குகளை பேணும் விதம் முகநூல் நிர்வாகத்தால் யாரென அறியமுடியாத போதும் அவர்களை அறிந்தவர்களால் இது இன்னாரது கணக்கே என அறியும் விதத்தில் அமையும் இது பாவனையாளர்களை பொருத்தவரை போலிக் கணக்குகள் அல்ல.
இங்கு போலிக் கணக்குகள் தொடர்பில் பேசப்படும் போது இரண்டாவது பார்வையே முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதை கருத்திற்கொள்க.

போலிக் கணக்குகள் தோன்றும் காரணம்?

தங்களுக்கென்று உண்மையாக முகநூல் கணக்குகளை பேண முடிகிற போதும் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுவதன் காரணங்களை அடுத்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இதை அறிந்து கொள்வதன் மூலமே சில போலிக் கணக்குகளும் பயன் தரக்கூடியவை என்பதையும் அனைத்து போலிக் கணக்குகளும் ஒரே விதமானவை அல்ல என்பதையும் எம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேலும் இவை தொடர்பில் எமது நிலைப்பாட்டை சீரமைத்துக்கொள்ளவும் அவசியமாகும். அத்தகைய சில முதன்மைக் காரணங்கள் இங்கு அலசப்படுகின்றன.

காரணம் 1) செல்வாக்கு மிக்கவர்களின் ஊழல்களை குற்றங்களை சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் உள்ள பாதகம் எண்ணி அஞ்சும் தனிநபர்கள்.
காரணம் 2) மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எண்ணி முகநூல் புரட்சியை ஒரு ஆயுதமாக்கி கருத்துக்களை அதிகம் பகிரவிட்டு விளைவை எதிர்பார்க்கும் புரட்சியாளர் கூட்டம்.
காரணம் 3) அரசியல் மற்றும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளால் தனிநபர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அல்லது அவர்களை மானபங்கப்படுத்தும் பதிவுகளைப் பகிரும் கூட்டம்.
காரணம் 4) இயக்க கட்சி பேதங்களுக்காக தங்களது கொள்கைப் பிரச்சாரத்திற்காகவும் அல்லது பிற கொள்கைகளை விமர்சிப்பதற்காகவும் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தும் கூட்டம்.
காரணம் 5) தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ள போலிக் கணக்குகளைப் பயன்படுத்தும் கூட்டம்.
காரணம் 6) தனது உண்மைக் கணக்கில் செய்ய முடியாத செய்ய விரும்பும் விடயங்களை செய்துகொள்ள போலிக் கணக்குகளை இயக்கும் கூட்டம்.

காரணங்களுக்கேற்ப தேவையும் தேவையற்ற தன்மையும்

காரணம் 1) செல்வாக்கு மிக்கவர்களின் ஊழல்களை குற்றங்களை சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் உள்ள பாதகம் எண்ணி அஞ்சும் தனிநபர்கள். : இத்தகைய நிலைகளில் செல்வாக்கு மிக்க அல்லது அதிகாரம் உடைய தனிநபர்களது ஊழலை குற்றத்தை வெளிச்சமிடுவது சாதாரண குடிமகனுக்கு ஆபத்தில் முடியலாம் என்ற அச்சப்பாட்டால் எழுவது. அத்தகைய அச்சம் இயல்பானதும் அவர் தரப்பில் இருந்து நியாயமானதும் கூட. எனினும் இதற்கான வழிமுறை போலிக் கணக்கிலிருந்து அவரை விமர்சிப்பது தானா என்றால் இல்லை அதை விட சிறந்த வழிமுறைகள் தாராளமாக திகழ்கின்றன.
முதலில் குற்றம் அல்லது ஊழலை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சாட்சியங்களை அது கொண்டிருத்தல் வேண்டும். சாட்சியங்கள் இன்றி ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றம்  / கொள்ளப்படும் சந்தேகம் மிகவும் பாரதூரமானது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது  பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ; ( அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 5006
தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் அல்லது ஊழலை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அதை ஆவணப்படுத்தி தங்களது அடையாளத்தை காட்டாமலே அவர்களது குற்றத்தை ஊழல் தடுப்பு பிரிவிற்கும் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளத்தக்க அதிகாரப் பிரிவுகளுக்கும் அதை தெரியப்படுத்தமுடியும். முகநூலில் ஆதாரமின்றி பக்கம் பக்கமாக எழுதுவதிலும் ஆதார பூர்வமாக ஒன்றை மட்டுமே நிரூபிக்க முடிந்தாலும் அது போதுமானது. அவ்வாறு முறையான அறிவிப்பு செய்தும் புறக்கணிக்கப்படின் மக்கள் மயப்படுத்தப்படுவது நியாயமானது. அதன் மூலமும் தீர்வு எட்டப்படமுடியும். ஆனால் அதிலும் ஒழுக்கத்தை கையாண்டு மானபங்கப்படுவதில் கவனம் செலுத்தாது குற்றத்தை மட்டும் மக்கள் மயப்படுத்தப்படுத்துதல் வேண்டும்.
குறிப்பு: மிகப் பெரும்பாலும் பிறரை வசைபாடி எழுதும் முகநூல் கணக்குகள் ஆதாரத்துடன் தவறை வெளிப்படுத்த திராணியற்றவர்களே! இவர்கள் மேல் காட்டிய நபிகளாரின் எச்சரிக்கைக்கு அஞ்சிக்கொள்ளட்டும்!

காரணம் 2) மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எண்ணி முகநூல் புரட்சியை ஒரு ஆயுதமாக்கி கருத்துக்களை அதிகம் பகிரவிட்டு விளைவை எதிர்பார்க்கும் புரட்சியாளர் கூட்டம். :

இதன் தேவை மற்றும் தேவையற்ற தன்மையை ஏற்படுத்த விளையும் மாற்றமே தீர்மானிக்கும். ஏற்படுத்தப்படும் மாற்றம் ஆக்கபூர்வமான மாற்றமாக இருந்தால் அதை தங்களது சொந்த அடையாளத்துடன் வெளிப்படுவதில் அஞ்சவேண்டியதில்லை. அதற்காக தங்களை உண்மை கணக்குகளையே பயன்படுத்த முடியும். எனினும், ஏற்படுத்த விளையும் ஆக்கபூர்வமான மாற்றம் அதிகார வர்க்கத்தை இலக்கு வைத்ததானால் தனிநபர் மீதான காழ்ப்புணர்வாய் கருதி அவர்கள் மீது வேட்டை நிகழ்த்தப்படுமோ என்ற அச்சம் குடி கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு.
உதாரணமாக போதை ஒழிப்பு தொடர்பில் முகநூல் புரட்சி செய்ய விளையும் பலரும் தங்கள் முகத்தை வெளிப்படுத்த விரும்பாமை இதனாலும் இருக்கமுடியும். இத்தகைய தருணங்களில் ஏற்படுத்தப்பட நாடப்படும் மாற்றம் சமூக இலக்கொன்றை நாடிய ஆக்கபூர்வமான மாற்றமாக இருக்கிற நிலையில் போலிக் கணக்குகள் ஆனாலும் அவை ஏற்கப்படத்தக்கவையாக மாறிவிடுகின்றன.
குறிப்பு: மாற்றங்கள் ஆக்கபூர்வமானதாக உள்ள நிலையில் இறைவனை அஞ்சி துணிந்து செயல்படும் திறன் கொண்ட கூட்டுக்கட்டமைப்புக்களின் தோன்றுகையால் இவற்றிற்காக போலிக் கணக்குகள் பயன்படுத்த வேண்டிய தேவையை தவிர்க்க முடியும்.

காரணம் 3) அரசியல் மற்றும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளால் தனிநபர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அல்லது அவர்களை மானபங்கப்படுத்தும் பதிவுகளைப் பகிரும் கூட்டம். : இது வன் கண்டனத்திற்கு உரிய கூட்டம் கருத்து வேறுபாடு, கட்சி வேறுபாடு, தனிப்பட்ட பகைமைகளை கொண்டு தனிநபர்களை மானபங்கப்படுத்துவதற்காக பெரும்பாலும் பல போலிக்கணக்குகள் குறிப்பாக அரசியல் வாதிகளின் பிணாமிகளால் இயக்கப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பொய் உரைப்பதையும் சில வேளைகளில் மாத்திரம் உண்மையான தவறுகளை சுட்டிக்காட்டி மானபங்கப்படுத்துவதையும் காணலாம்.
இரண்டில் எவ்வகையை கையாண்டாலும் அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு உரியவர்களே! மனித மாமிச உண்ணிகளே! உண்மையான தவறுகளை சுட்டிக்காட்டி மானபங்கப்படுத்தினால் புறம் பேசிய பாவம்இ பொய்யைக் கூறி மானபங்கப்படுத்தினால் அவதூறுக்கான பாவம்.

அல்லாஹ் கூறுகின்றான்: “குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.”
திருக்குர்ஆன் 104:1
மேலும்,
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்)  ” புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்  ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது  ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்)  கூறுங்கள் ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ” நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான்  நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ  நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5048
மேலும்
“நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில அல்லாஹ் கூறுகின்றான்: ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.”
திருக்குர்ஆன் 49:12
மேலும்
“யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ் சகதியும் நரகவாசிகளின் சீலும் சலமும் கலந்திருக்கின்ற மலையில் தங்க வைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 312
இறந்தோரின் மாமிசத்தை உண்பதற்கு சமம் பிறரது குறைகளை புறம்பேசித் திரிவது. செம்பு நகங்கள் அளிக்கப்பட்டு அதனாலேயே தங்களைத் தாங்களே நரகில் கிழித்துக் கொள்ளப்போகிற கூட்டம் இக் கூட்டம். மேலும் இறைவனால் கேடு உண்டாக சபிக்கப்பட்ட கூட்டம் இக்கூட்டம். இத்தகைய போலிக் கணக்குகள் செய்வோர் ஒன்றை உணர்ந்தால் போதுமானது போலிக் கணக்குகளை சாதாரண தகவல் தொழில்நுட்ப அறிவை உடைய நபர்களாலேயே கண்டுபிடிக்க முடிகிற போது எம்மையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் இறைவனின் பார்வையில் இருந்து இவர்கள் எம்மாத்திரம்.

காரணம் 4) இயக்க  கட்சி பேதங்களுக்காக தங்களது கொள்கைப் பிரச்சாரத்திற்காகவும் அல்லது பிற கொள்கைகளை விமர்சிப்பதற்காகவும் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தும் கூட்டம்.

சமூகத்தை கூறாக்கி குழப்பத்தை விளைவிப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். அதே நேரம் வழிகேடுகளில் இருந்து மக்களை தெளிவுபடுத்த வேண்டியது தலையாய கடமையுமாகும். இதனடிப்படையில் இயக்கங்களின் கொள்கை விளக்கங்கள் வழங்கப்படுதலும் ஆரோக்கியமான விவாதங்களும் அவசியமே ஆனால் அதற்கு முகநூல் அத்தனை பொருத்த்தமான ஊடகம் அல்ல என்பதை நாம் உணர்தல் அவசியம். ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கத்தக்கவை ஆனால் அவை செய்யப்பட வேண்டிய விதத்தில் செய்யப்பட வேண்டும்.
முகநூலில் பதிவுகளிலும் (Pழளவ) பின்னூட்டங்களிலும் (Comments) தொடரும் நாகரீகமற்ற வாதங்களில் சல்லி பெறுமதி கிடையாது. மாற்றின சமூகங்களுக்கிடையில் எமது சமூகத்திற்கு ஒரு தலைகுனிவைத் தவிர வேறேதையும் அது தேடித்தரப்போவதுமில்லை. முகநூல் ஒன்றும் தனிப்பட்ட தொடர்பாடல் முறைமை அல்ல. இங்கு இடம்பெறும் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படுத்தப்பட்ட கருத்தாடல்களே என்பதை கவனத்தில் கொண்டால் இயக்கச் சண்டைகளுக்கான கட்சி மோதல்களுக்கான போலிக் கணக்குகளை தவிர்க்க முடியும். வழிகேடுகளை விழிப்பூட்ட உண்மையான அடையாளங்களை பெருமிதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

காரணம் 5) தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ள போலிக் கணக்குகளைப் பயன்படுத்தும் கூட்டம். :

இது ஒரு வகை மனநோயைச் சேர்ந்ததாகும். அதிக விருப்பு(Like) ) மற்றும் பகிர்வுகளை (Share) தங்களது பதிவுகள், புகைப்படங்களுக்கு பெறும் நோக்கில், அதன் மூலம் தங்களை பிரபல்யமாக ஆக்கிக் கொள்ள நினைக்கும் சிலரால் இத்தகைய பல போலிக் கணக்குகள் இயக்கப்படுகின்றன. மனநோய் என்ற அடையாளப்படுத்தலிலேயே இதன் தேவைத்தன்மை புலப்பட்டிருக்கும். இத்தகையவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பலன்மிக்கது.

காரணம் 6) தனது உண்மைக் கணக்கில் செய்ய முடியாத செய்ய விரும்பும் விடயங்களை செய்துகொள்ள போலிக் கணக்குகளை இயக்கும் கூட்டம். :

இதில் பல ரகங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவையும் மனநோய் வகையைச் சார்ந்தவையே! பெண் நட்புக் கோரிக்கைகள் வேண்டி பெண்கள் போல் காட்டி முகநூல் கணக்கு பேணும் ஆண்கள் சில ஆண்கள் மீதே கவர்ச்சி கொண்டு அவர்களை கவர பெண்கள் போல் முகநூல் கணக்குகளை பேணும் ஆண்கள் சில ஆண்களை ஏமாற்ற பெண்கள் போன்ற முகநூல் கணக்குகளை பேணும் பெண்கள் அதற்கு நேர்மாறாக ஆண்கள் போல் கணக்குகளை பேணும் பெண்கள் உலகறிய உத்தமத்துவம் காட்டி ஒழிந்து கொண்டு லீலைகள் பாடும் கணக்குகள் என இவ்வகை மனநோயாளர்களின் பட்டியல் நீள்கிறது.

கட்டுப்படுத்தலில் எமது பங்கு

இறுதியாக ஒன்றை அனைத்து முகநூல் பாவனையாளர்களும் உணர்ந்தாதல் வேண்டும். முகநூல் போலிக் கணக்குகளின் ஊடுறுவல் சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒரு விடயமல்ல. எனவே அவற்றின் ஊடுறுவலை கட்டுப்படுத்துவதில் எமது வகிபாகம் கணிசமான காத்திரப் பங்களிப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். இன்று யாரோ ஒருவரை ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்வுக்காக அல்லது அரசியல் இலாபத்திற்காக அவரது தவறை அம்பலப்படுத்தி அல்லது இல்லாததை புனைந்து கூறி மானபங்கப்படுத்துபவர்கள் நாளையே உங்கள் மீது காழ்ப்புணர்வடைந்தால் உங்களையோ உங்கள் குடும்பத்தையோ மானபங்கப்படுத்தமாட்டார்கள் என என்ன நிச்சயம்?!
எமக்கு அவ்வாறு இல்லாதையோ இருப்பதையோ கூறி எம்மை பொதுவில் மானபங்கப்படுத்தினால் அதன் வலி எத்தனை கொடுமையானது. அதே போல் விமர்சிக்கப்படும் யாரோ ஒருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இருக்கும். தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கு விரும்பாதவரை ஒருவர் ஈமானின் பூர்த்தி நிலையை அடைவதில்லை. எமது மானம் எமக்கு எத்தனை சிறப்புமிக்கதோ அதே போன்றதே பிறரதும். எனவே பிறரை மானபங்கப்படுத்தும் போலிக் கணக்குகளை பார்த்தும் பார்க்காதது போல் போவதோ அதன் உண்மைத் தன்மை கூட தெரியாது விருப்பிட்டு பகிர்ந்து பாவத்தில் பங்குகொள்வதோ ஆரோக்கியமானதல்ல. இத்தகைய கணக்குகளை காணும் போது அவற்றை முடக்கி செயலிழக்கச் செய்வதன்(Report & Block) மூலம் பிறர் மானம் பங்கப்படுவதில் எமக்குள்ள வெறுப்பைக் காட்ட வேண்டும்.
முடக்க முடக்க முளைப்பார்கள்; முளைக்க முளைக்க நாமும் முடக்கத் தொடங்கினால் ஓய்ந்து சிதறிப்போவர்கள். பிறரில் தவறெண்ணம் கொள்ளாமை எம்மை சுவனத்திற்கு இட்டுச்செல்லும் நல்லமல்களில் ஒன்று. போலிக் கணக்குகளின் பெருக்கம் அதற்கு நாம் எதிர்நோக்கும் பெரும் தடைகளுள் ஒன்று. இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு விடயங்களை செய்தால் இவர்களது ஊடுறுவலை தடுக்கலாம். நான் செய்வதால் மாறப்போவது எதுவும் இல்லை. நாம் அனைவரும் செய்தால் மாறாமல் இருக்க வழியில்லை.
செய்யவேண்டியது 1) போலி முகநூல் கணக்குகளின் நட்புக் கோரிக்கைகள் வந்தால் அவற்றை ஏற்பதில்லை என்பதில் உறுதிபூணல் மற்றும் இதுவரை நட்புப் பட்டியலில்(Friends List) உள்ள அனைத்து வசைபாடி போலிக் கணக்குகளையும் நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிடல்(In friend & Block).. இதன் மூலம் அவர்களை விலாசமற்றவர்களாக ஆக்க முடியும். (சொல்வதைக் கேட்க நாதியில்லையேல் சொல்லிப் பயனேது!)
செய்யவேண்டியது 2) பொலிஸ் நிலையத்தில் IC3 (Internet Crime Complaint Center) பிரிவிற்கு போலிக் கணக்குகளின் குற்றங்களை தெரியப்படுத்தல். இணையத்தள குற்றங்களை கண்டுபிடித்து சட்டத்தீர்வை வழங்குவதற்காகவே The Sri Lanka Computer Emergency Readiness Team | Coordination Centre (Sri Lanka CERT|CC) எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தகைய பல இணையத்தளக் குற்றங்களும் கண்டறியப்பட்டு பல குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஒரு அறிதலுக்காக இப்பிரிவின் கீழ் இது வரை கண்டறியப்பட்டுள்ள குற்றங்கள் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன. (காவல்துறை அறிக்கை 2012)
குற்றம் 1) 20 % ஆன குற்றங்கள் முகநூல் போலிக் கணக்குகள் (Fake Facebook Accounts)
குற்றம் 2) 70% ஆன குற்றங்கள் தனிப்பட்ட கலந்துரையாடல்கள் (Private Chat) அதில் பகிரப்பட்ட புகைப்படங்கள் காணொளிகளை தொடர்பு முடிந்ததும் பகிர்தல்.
குற்றம் 3) 5% ஆன தனிப்பட்ட கலந்துரையாடல்கள் (Private Chat) அதில் பகிரப்பட்ட ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை பகிர்வதாக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள்.
குற்றம் 4) 5% ஆன குற்றங்கள் Hacking
இவைகளோடு மட்டுமன்றி ஒருவரது பெயரில் வேறு சிலர் போலியான கணக்குகளை இயக்குதல் உள்ளிட்ட பலவிதமான இணையத்தளம் சார்ந்த குற்றங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகளை IC3 பிரிவில் காவல் நிலையத்தில் மேற்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு:

(Sri Lanka CERT|CC)

Room 4-112, BMICH, Bauddhaloka Mawatha,

Colombo 07, Sri Lanka.

Tel: +94 11 269 1692 / 269 5749 / 267 9888

Fax: +94 11 269 1064

E-Mail: slcert@cert.gov.lk

எம்மை நாம் புறம் பேசுதல் எனும் கொடிய முகநூல் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள இறைவனைப் பிரார்த்திப்பதோடு போலிக் கணக்குகளின் பெருக்கத்தையும் அவர்களது புறத்தால் நாம் அறிந்த அல்லது அறியாத சகோதரர்களின் மானம் பொதுவில் சீரழிக்கப்படுவதையும் தடுக்க எம்மால் இயன்றதை செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.”
நூல்: புகாரி 6477

-M.I.MUHAMMADH SAFSHATH, UNIVERSITY OF MORATUWA-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here