அதிகாரப்பசிக்குப் பலியாகும் தொப்புல்கொடி உறவு!

0
386

samad -2 (2)எம்.எம்.ஏ.ஸமட்
வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளுக்கு தலைமை வகித்த தலைமைகளின் செயற்பாடுகளும், தமிழினத்தின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழ் ஆயுதக்குழுக்களின் திசை மாறிய நடவடிக்கைகளும், அபிவிருத்தி அரசியல் சித்தாந்தத்தின் அடிமைத்தனமும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களிடையே தனித்துவமான அரசியல் சிந்தனையை உருவாக்கியது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக, கிழக்கு மாகாண முஸ்லிம்களை மேற்கூறப்பட்ட காரணிகள் தனித்துவமான அரசியலை நோக்கி  திசை திருப்பியதுடன், உரிமைக்கான அரசியல் பயணத்தில் கிழக்கின் பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களை  ஒன்றுபடுத்தியது.

கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி அரசியலிருந்து உரிமைக்கான அரசியலை நோக்கி இழுத்துச்சென்ற அல்லது  கிழக்கு முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரபைச்சாரும். இதில் மாற்றுக்கருத்துக்களும் இருக்கலாம். இருப்பினும், அஷ்ரபின் உரிமைக்கோஷம் அபிவிருத்தி அரசியலை பெரும்பாலன கிழக்கு முஸ்லிம்களிடையே மறக்கச்செய்ததுடன், உணர்வு ரீதியாக ஒன்றுபடவும், ஒத்துழைக்கவும் செய்தது. தலைவர் அஷ்ரபிடமிருந்து அபிவிருத்தியை எதிர்பார்க்காத மக்கள் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காக அவரின் அரசியல் நீரோட்டத்தில் பயணித்து, தேர்தல்களில் வாக்களித்து வெற்றியையும் பெற்றுக்கொடுத்தனர்.

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை மூலதனமாகக் கொண்டு சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காக உள்ளூராட்சி மன்ற, மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று அதிக ஆசனங்களைப் பெறுவதும், இவற்றின் மூலம் தன் பக்க மக்கள் பலத்தை தேசியத்திற்கு எடுத்துக்காட்டுவதும் அவசியமென்பது 1986ல் அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் பதிவு செய்யப்பட்டது. முதல் அவர் அகால மரணடைந்த 2000ஆம் ஆண்டு வரை தலைவர் அஷ்ரபின் அரசியல் இலக்காகவிருந்தன.

சமூக உரிமைகளையும், அந்த உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது பற்றியும், அதற்கான மக்கள் ஆதரவு எவ்வாறிருக்க வேண்டுமென்பது குறித்துமே அஷ்ரபின் தேர்தல் கால மேடைப்பிரசாரங்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் பிரதேசங்களின் ஆதரவைக் கட்சியின் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக  தலைவர் அஷ்ரப் பல்வேறு அரசியல் நுட்பங்களைக் கையாண்டார்.

பெரும்பாலான கிழக்கு முஸ்லிம்கள் மாத்திரமின்றி, ஏனைய பிராந்திய முஸ்லிம்களும் அவரது அரசியல் நுட்பங்களினால் கவரப்பட்டார்கள். அதிலும், கிழக்கின் அம்பாறை மாவட்ட பிரதேச முஸ்லிம்கள் வெகுவாகக் அவரின் அரசியல் நகர்வுகளால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள் என்பது யதார்த்தமாகும். அதனால் தான், இன்று வரை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விடுபட முடியாத நிலையிலுள்ளனர் அம்பாறை முஸ்லிம்கள்.

மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளும் அவ்வப்போது அஷ்ரபினால் வழங்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திகளை விட பிரதேச, பிராந்திய, தேசிய மட்டத்திலான சமூக உரிமைகள் தொடர்பில் பேசி செயற்பட்டு அவற்றைப்  சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு அவரது ஆளுமை துணை நின்றது.

அவ்வாறானதொரு செயற்பாட்டின் வடிவம் தான், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலின் போது ஐ.தே.க. ஆதரவாளர்களை அதிகம் கொண்ட சாய்ந்தமருது மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக மறைந்த தலைவர் அஷ்ரபினால் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச செயலகமொன்று ஸ்தாபிக்கப்படுமென அளித்த வாக்குறுதியாகும்.

அளிக்கப்பட்ட இவ்வாக்குறுதிக்கேற்ப 1999 டிசம்பர் மாதம் 19ஆம் திகதி சாய்ந்தமருதுக்கான தனியான உப பிரதேச செயலகத்தை அவர் பெற்றுக்கொடுத்தார். சாய்ந்தமருதுக்கான தனியான உப பிரதேச செயலகத்தைப் பெற்றுக்கொடுத்த தலைவர் அஷ்ரப் தனியான பிரதேச செயலகம் பிரகடனப்படுத்தப்பட்ட அன்றைய தினம் சாய்ந்தமருது மக்களுக்கு தனது கையெழுத்துப்பட இவ்வாறு எழுதியிருந்தார்.

“எல்லாப் புகழும் இறைவனுக்கே! சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையாகவிருந்த பிரதேச செயலகக் கோரிக்கை இன்று வெற்றி பெற்றிருக்கின்றது. அதிகாரப் பரவலாக்கல் நடைபெறும் இன்றைய காலகட்டத்தில் இன்று இக்கிராமம் பெறவிருக்கின்ற புதிய அதிகாரம் புதிய யுகத்தை நோக்கி நம்மைத்தயார் செய்யும் பணியில் பெரிதும் உதவிடப் பிரார்த்திப்போம்.”

என அத்தினத்தில் எழுதிய தலைவர் அஷ்ரப், எதிர்காலத்தில் சாய்ந்தமருதுவை கல்முனைப் பிரதேச நிர்வாக எல்லையிலிருந்து பிரித்து தனி பிரதேச சபையை உருவாக்கி அம்மக்களின் அபிலாஷைகளை மேலும் நிறைவேற்றி வைப்பது அல்லது கல்முனை என்ற ஒரு குடைக்குள் சாய்ந்தமருது உள்ளிட்ட சகல பிரதேச மக்களினதும் அபிலாஷைகளை நிறைவு செய்து கொடுப்பது என்ற எத்தகைய நிலைப்பாட்டுடன் அவரின் சாந்தமருதுக்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதோ என்பதை இறைவன் ஒருவன் தான் அறிந்தவன்.

இவ்வாறு. மக்களுக்கும் பிரதேங்களுக்கும் அளித்த வாக்குறுதிகளைக் காப்பற்றி தேசிய, பிராந்திய, பிரதேச ரீதியாக மக்களுக்கான உரிமைகளை மக்களின் ஒன்றுபட்ட சக்தியினூடாக போராடி வென்றெடுத்த மறைந்த தலைவர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த, வளர்த்தெடுக்கப்பட்ட அல்லது பாசறையின் அனுபவங்களைப் பெற்றவர்களின் அனுபவங்களைப் பெற்ற தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினைளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குபதிலாகää அவை தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்குப் பதிலாக தேசிய மட்ட சிந்தனையிலிருந்து பிரதேச மட்ட சிந்தனைகளுக்கு இடம்மாறி தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கி தலைவர் அஷ்ரபின் அரசியல் பாசறைக்கு கலங்கம் ஏற்படுத்துவதோடு, பிரதேசங்கங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சாய்த்தமருதுக்கான பிரததேச சபையென்பது இலகுவாகப் புரிந்து கொள்ளச் செய்துள்ளது.

தேசியபட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், கரையோர மாவட்டம், மாவட்டத்துக்கான தலைநகரம், தனியான பிரதேச சபை, பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தி, பதவிகள் என்ற பல்வேறு அரசியல் துரும்புச்சீட்டுக்களை மக்கள் முன் வைத்து அம்மக்களின் ஒற்றுமையையும், பிரதேச ஒருமைப்பாடுகளையும், சகோதரத்துவத்தையும் பிளவுபடுத்துகின்ற கைங்கரியங்களை கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசங்கேற்றிக் கொண்டிருக்கிறார்களா? எனக்கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்ற எலி – பூனை விளையாட்டை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது சுயநல அரசியலுக்காவும், சரியும் அரசியலைத் தூக்கி நிமிர்த்தவும், அந்த அரசியல் அதிகாரங்களினால் பதவிகள் வழங்கப்பட்டு, அப்பதவிகளின் மூலம் வரப்பிரசாதங்களைக் பெற்றவர்களைக் கொண்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் தங்களது சுய இருப்பையும், செல்வாக்கையும் தக்க வைத்தக்கொள்ளவும், கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கவும், இவர்களினால் பதவி அதிகாரங்களைப் பெற்றவர்கள் தங்களது பிரதேசங்களின் கதாநாயகர்களாகவும், வரலாற்றுச் சிற்பிகளாகவும் அவ்வப்பிரதேசங்களில் புடம்போட்டுக்கொள்வதற்காகவும் தொப்புல் கொடி உறவு கொண்ட கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட இரு பிரதேச முஸ்லிம்களிடையே உணர்வுகளை உசுப்பி எதிர்வினைகளை எரிய விட்டிருக்கிறார்கள்.

‘ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு’ என்ற நீயூட்டன் விதியை அதிகாரப்பசி தற்போது யதார்தமாக்கியிருக்கிறது. ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும், பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் அப்பால் தலைக்கு மேல் வெள்ளம் பாய்ந்தாற்போல் அதிகாரப்பசியின் விளைவு ஊர்களில் வேண்டத்தகாத வேடிக்கைகளையும், கூக்குரல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இவை ஊர்களை நாற வைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு பிரதேசம் மாத்திரமல்ல முழு உலகமும் இணைக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களினூடாக இவர்கள் கக்கிக்கொண்டிருக்கின்ற பிரதேசவாத நச்சுக்கருத்துகள் இப்பிரதேசவாசிகளின் மனப்பாங்குகளை உலகிற்குப் புடம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதிகாரப்பசி, பிரதேச உச்சப்பற்று என்பவற்றுக்கப்பால் சமூக ஒற்றுமையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும், சகோரத்துவத்தையும் நேசிக்கின்ற அவை பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்பும் மக்களை வெகுவாகக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள  வாதப்பிரதிவாதங்களுக்குரிய, சகோதரத்துவப் பாதிப்புக்களுக்கான அத்தனை பொறுப்பையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளே சுமக்க வேண்டுமென்பதை பலரும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் ஒற்றுமையை அல்லது  சகோதரத்துவத்தை, தொப்புல் கொடி உறவுகளைச் சிதைப்பதென்பது ஒருவரைக் கொலை செய்வதற்குச்சமமானது என இஸ்லாம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், அதிகாரப்பசி இஸ்லாத்தின் போதனைகளை மறக்கச் செய்துள்ளது.

“ஓற்றுமை என்ற கயிற்றைப் பலமாகப்பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்” என வலியுறுத்தும் அல்குர்ஆன் “நிச்சமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே” எனவும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

அத்தோடு, “தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே ஒருவர் மோசமானவர் என்பதற்கு போதிய சான்றாகும்” என அண்ணல் நபி அவர்கள் அருளியுள்ளார். அதுமாத்திரமின்றி, வெவ்வேறு ஊரைச்சேர்ந்த வெவ்வேறு பழக்க வழங்கங்களையுடைய  மனிதர்களை இஸ்லாம் உடன்பிறவா சகோதரர்களாக நேசிக்க வைத்தது ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் விதைத்திருக்கிறது.

இவ்வாறு ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இஸ்லாத்தின் போதனையை விட அழிந்து போகக்கூடிய இந்த உலகத்தின், வாழும் பிரதேசத்திற்கான அதிகாரங்கள் அதனால் கிடைக்குமென்று எதிர்பார்க்கும் நன்மைகளும் பெறுமதிமிக்கதாகி விட்டதன் விளைவு பிரதேசங்கள் தொடர்பில் எதிர்மறை பதிவுகளை வளரும் எதிர்காலச் சந்தியினர் மத்தியில் விதைக்கச் செய்திருப்பது வேதனையளிக்கிறது.

கல்முனையின் வரலாற்றில் ஒவ்வொரு பிரதேச மக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகள் கல்முனையை ஆண்ட அதிகாரத்தரப்புக்களால் மறுக்கப்பட்டிருக்கலாம். புறக்கணிப்புச் செய்யப்பட்டிருக்காலம். அதனால் அவர்களது பிரதேசம் சமூக, பொருளாதார, அரசியலில் பின்னடைவு கண்டிருக்கக் கூடும். அவற்றை மறுப்பதற்கில்லை.

இருப்பினும், அதற்காக பிரதேசங்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. அதிகாரப்பசிக்காக இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமையைச் சிதைத்து தொப்புல்கொடி உறவைச் சிதைக்காது செயற்பட வேண்டிய சம்பந்தப்பட்ட தரப்புக்களின் தார்மீகப்பொறுப்பாகும். அதிகாரப்பசிக்கப்பால் இஸ்லாம்  எடுத்தியப்பும் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வழிகாட்டுவானாக! ஆமீன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here