சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கோரிக்கை யாருக்கும் அநீதியிழைப்பதற்கான ஒன்றல்ல-பள்ளிவாசல் தலைவர்

0
576

1எம்.வை.அமீர்-
யாருக்கும் அநீதியிளைப்பதற்காகவோ எவருடையதும் உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ சாய்ந்தமருது மக்கள் உள்ளூராட்சி சபையைக்கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வலியுறுத்தி, 30, 31 மற்றும் 01 திகதி வரை கடைகளை அடைத்து நோன்பு நோற்பதற்கு திட்டமிட்டுள்ளதை மக்களுக்கு அறிவிக்கும் “மக்கள் எழுச்சிப்பொதுக்கூட்டம்” 2017-10-29 ஆம் திகதி ஜும்ஆப் பள்ளிவாசல் முற்றலில் பிரமாண்டமான மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரண்டுள்ள மக்கள் வெள்ளம் சாய்ந்தமருதில் வரலாறொன்றைப் படைக்கின்றனர். இந்த மக்கள் கூட்டம் அவர்களை, அவர்களே ஆள வேண்டுமென்ற அடிப்படையில், அவர்களுக்கென தனியானதொரு உள்ளூராட்சி சபையைக் கோரியே இங்கு திரண்டுள்ளனர். ஜனநாயகமான இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காய், சாய்ந்தமருது பள்ளிவாசல் 40 க்கு மேற்பட்ட உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இச்சந்திப்புக்களில் பல்வேறு தரப்பினராலும் உத்தரவாதங்கள் தரப்பட்ட போதிலும், அவைகள் எதுவும் நிறைவேறுவதாக இல்லை. காலத்தை இழுத்தடிக்கும் நிகழ்வுகளே இடம்பெறுவதாகவும், தொடர்ந்தும் ஏமாறுவற்கு தாங்கள் தயாரில்லையென்றும் தங்களுக்கு நியாயம் கோரி, சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் நோன்பு நோற்று இறைவனிடம் பிரார்த்திக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையானது இன்று நேற்று உருவான கோரிக்கையல்ல. இது பலவருடங்களாக முன்னெடுக்கப்படும் கோரிக்கையாகும். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரிடமும் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அவர்களால் தருவதாக முன்வைக்கப்பட்டவொன்றாகும். அதேபோன்று இலங்கையிலுள்ள பிரதேச செயலகங்களில் உள்ளூராட்சி சபையில்லாத பிரதேச செயலகத்தைக் கொண்ட பிரதேச செயலகம் என்றால், அது சாய்ந்தமருது பிரதேச செயலகம் தான் என்றும் சிறிய சிறிய ஊர்களுக்கும் பிரதேச சபைகள் இருக்கின்ற போதிலும், இந்த பெரிய ஊருக்கு உள்ளூராட்சி சபை இல்லாதது கவலையானதும் அநீதியானதுமான விடயமாகுமென்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பச்சை மஞ்சள், பச்சை, நீலக்கொடிகளை அரசியல்வாதிகளுக்காக கட்டிய இளைஞர்களே இப்போது கறுப்புக்கொடிகளைக் கட்டியுள்ளதாகவும் இளைஞர்களது பலத்தை அரசியல்வாதிகளுக்கு தான் கூற வேண்டியதில்லையென்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளக்குமுறல்களை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உதாசீனம் செய்துள்ளதாகவும், அவர்களது கோரிக்கைக்கு விரைந்து நிவாரணமளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் கல்வி அதிகாரி பீர் முகம்மட், வைத்திய கலாநிதியும் சமூக சிந்தனையாளருமான நாகூர் ஆரீப், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.முகம்மட் சதாத், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபையின் தலைவர் அஷ்செய்க எம்.ஐ.எம்.சலீம், லங்கா அஷோக் லேலன்ட் நிறுவனத்தின் நிதி மற்றும் செயற்பாட்டுத்தலைவர் ஏ.ஆர்.முகம்மட் அஸீம் உள்ளிட்ட அதிதிகள் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பிலுள்ள நியாயப்பாடுகளையும் இந்த ஊருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் இவற்றுக்காக கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினர்.

சாய்ந்தமருதின் வரலாற்றில் முதன்முறையாகத் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் உலமாக்கள், மரைக்காயர் சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள், இளைஞர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் இணைந்து கொண்டு பள்ளிவாயலால் முன்னெடுக்கப்படும் குறித்த கோரிக்கைக்கு ஆக்ரோஷமான தங்களது ஆதரவை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.1 2 3 6 8 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here