முன்னாள் முதல்வரினால் மட்டக்களப்பு பதற்ற நிலை தொடர்பில் விசேட கூட்டம்

0
303

616A2628(ஊடகப்பிரிவு)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஒரு சில தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களைத் தௌிவூட்டும் வகையிலான கூட்டமொன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி உட்பட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏறாவூர் சம்மேளத்தினர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் போது கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கெதிராக சில விஷமிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் வாழைச்சேனை ஆட்டோ தரிப்பிடம் தொடர்பில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது மக்களால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த பிரச்சினைகள் சிலரின் தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளவையெனவும், இதனால் தமிழ், முஸ்லிம் அப்பாவி மக்களும் வர்த்தகர்களுமே பாதிக்கப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பிரச்சினைகளை இனப்பிரச்சினைகளாக உருவெடுக்க ஒரு போது இடமளிக்கக்கூடாதென கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிழ் நசீர் அஹமட் இதன் போது பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இவ்வாறான நேரத்தில் மிகவும் சுமூகமான முறையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் ஒரு சில சதிகாரர்களின் துர்நோக்கங்கள் நிறைவேறுவதற்கு நாம் காரணமாக இருந்து விடக்கூடாதெனவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்

அத்துடன், மேலும் பல இடங்களில் முஸ்லிம்களின் வர்த்தகங்களுக்கெதிராக தடைவிதிக்கும் வகையில் வன்முறைகளிலும் சிலர் ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் மாவட்ட மட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்த முனையும் விஷமிகளை விரைவில் அடையாளங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்கெடுக்கவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி முன்னாள் கிழக்கு முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.

இதே வேளை, தமக்கு பிரதிப்பொலிஸ் மாஅதிபரை நேரில் சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த முன்னாள் கிழக்கின் முதலமைச்சருக்கு புத்திஜீவிகளும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.616A2628 616A2630 616A2637 616A2646 616A2651

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here