பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் (1917.11.02-2017.11.02)

0
665

Untitled-1ஆய்வுக் கட்டுரை- M.I. MUHAMMADH SAFSHATH  (University of Moratuwa)

(1917.11.02 இல் வெளியிடப்பட்டு இன்றுடன் (2017.11.02) நூற்றாண்டைத்தொடும் இப்பிரகடனம் தொடர்பிலான ஒரு பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வு)

பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம்
சங்க காலந்தொட்டு சரித்திர காலத்திலும் அதைத்தொடர்ந்த காலங்கள் வரை பலஸ்தீன புனித பூமி எகிப்தியர்கள், பபிலோனியர்கள், ரோமானியர்கள், சிரியர்கள், கனானைட்டுக்கள் எனப்பல தரப்பட்டோரின் ஆளுகைகளைக் கடந்ததோடு நிலமெல்லாம் இரத்தமாய் ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் அம்மக்கள் வாழ்வை பேரின அலையில் சிக்குண்ட துடுப்பற்ற படகாக்கியமை வரலாற்றில் தெளிவாகிறது.

கி.மு. 587 களில் ‘நெபுசத்னெஸ்ஸார் 2’ எனும் பாபிலோனிய மன்னனாலும், கி.பி. 70 களில் ‘டைட்டஸ்’ எனும் ரோமானிய மன்னனாலும் முழுமையாக எரிக்கப்பட்டதாகவும், கி.பி. 135 இல் ‘டைனஸ் ரூபஸ்’ எனும் ரோமானிய மன்னனின் ஆளுகைக்குட்பட்ட போதும், பாரிய போரும் இழப்பும் ஏற்பட்டு குறித்த பிரதேசம் ‘சிரியா பலஸ்தீனா’ எனவும் ஜெருசலேம் நகரம் ‘எலியா கெபிடோலினா’ எனவும் பெயர் மாற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

கி.பி. 326 களில் ரோம கிறிஸ்தவ மன்னரான ‘கொன்ஸ்டான்டைன்’ என்பவரின் ஆட்சியில் ஜெருசலேம் மிகுந்த செழிப்பானாலும் தொடர்ந்தும் பாரசீகர்களிடமும் பைஸாந்தியர்களிடமும் ஆட்சி மாறியது. நிலைமை மோசமாகியது.

இவ்வாறு இரத்தம் தோய்ந்த எழுத்தாணி கொண்டே பெரிதும் வரையப்பட்ட பலஸ்தீன புனித மண்ணின் வரலாறு கண்ட முழு முதல் பொற்காலம் கலீபா உமரின் ஆட்சியில், கி.பி. 638 இல் காலீத் பின் வலீத் எனும் தளபதி தலைமையிலான படைப்பிரிவின் யர்மூக் யுத்த வெற்றியுடன் பலஸ்தீனை உள்ளடக்கிய சிரிய தேசம் இஸ்லாமிய ஆளுகை கண்டமை தான் என்பது பல தரப்பட்ட வரலாற்றாசிரியர்களதும் ஒருமித்த முடிவாகும்.

‘காரன் ஆம்ஸ்ரோங்’ தனது ‘புனிதப்போர்’ (The Holy War) எனும் நூலில் உமரின் வருகையை விபரிக்கும் விதம் இஸ்லாமிய ஆட்சி ஏன் பொற்காலமாகத் திகழப்போகிறதென்பதை அன்றே அம்மக்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பதை படம் பிடித்துக்காட்டுகிறது.

‘கலீபா உமர்’ கிறிஸ்தவ தேவாலயங்களை தலைமை குருக்களுடன் பார்க்க விரும்புகிறார். அவ்வாறே பார்த்துக் கொண்டிருக்கையில், தொழுகை நேரம் வரவே, தலைமை குரு கலீபா உமரை அங்கே தொழப் பணிவுடன் கோருகிறார். அதற்கு கலீபா உமரின் பதில், நான் இங்கு தொழுதால் அதன் நினைவாக இங்கு மஸ்ஜிதை எழுப்ப முஸ்லிம்கள் நாடலாம். அதனால் ஆலயம் இடிபடலாம் என்று கூறி அதை மறுத்தார்கள்.’

மத நல்லிணக்கமும் சகவாழ்வும் தலைத்தோங்கிய இஸ்லாமிய ஆட்சியில் பலஸ்தீன புனித பூமி மூன்று வேத மக்களின் சகவாழ்வால் திளைத்தது. அது வரை காணாத ஒரு பெரும் செழிப்பைத் தனதாக்கியது. அம்மக்கள் மீது இஸ்லாம் திணிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அதன் வளர்ச்சி அலை மோதியது. காலம் சுழன்றோட குறுக்கே சிலுவைப்போர் என கிறிஸ்தவ மதத்தின் பெயர் காட்டி ஒரு வன் குரோதம் தீர்க்கப்பட்டது.

கி.பி.1095 களில் ‘கிளமோன்ட்’ நகரில் கூடிய ஆலோசனைக்கூட்டத்தில் ‘போப் இரண்டாம் அர்பான்’ விடுத்த அழைப்பின் பேரில், சிலுவைகளை சட்டையில் குத்தியவர்களாக கிறிஸ்தவர்களால் பெடும் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டு, பலஸ்தீனில் பெரும் இரத்த சரிதம் நிகழ்த்தப்பட்டது.

பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் குதிரைகளின் முன்னங்கால் அளவு நனையும் வரை இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. 70,000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கழுத்தறுப்புச் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதுவரை பலஸ்தீன் வரலாறு கண்டிராத பெரும் இரத்த சரிதம் கிறிஸ்தவ மதத்தின் பெயரால் சிலுவைப்போர் எனும் போர்வையில் நிகழ்த்தப்பட்டது. மனிதம் அங்கே மண்ணில் புதைக்கப்பட்டது.

மீண்டுமொரு சக வாழ்வை ஏற்படுத்த முஸ்லிம்களது ஆட்சிக்காய் பலஸ்தீன பூமி காத்திருக்க நேர்ந்தது. ‘தளபதி ஸலாஹுத்தீன் ஐயூபி’ தலைமையில் கி.பி. 1187 ஹாட்டின் போரில் சிலுவைப்போர் வீரர்கள் வீழ்த்தப்பட்டு, மீண்டும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. குடிகள் மனதில் அச்சம் குடி கொள்ளத் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழித்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்காக கிறிஸ்தவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கொல்லப்படுவார்களோ எனும் அச்சமே அது.

ஆனால் நிகழ்ந்தது வேறு. இஸ்லாமிய மனித நேயம் அங்கு நிலைநாட்டப்பட்டது. தளபதி ஸலாஹுத்தீன் ஏற்படுத்திய அந்த மனித நேயம் முழு பலஸ்தீனையும் அமைதியின் பூமியாக்கியது. அன்றிலிருந்து பலஸ்தீன புனித பூமி முஸ்லிம்களது மத நல்லிணக்க ஆட்சியில் நீடித்திருந்தது. அமைதிக்காய் அங்கலாய்த்துக் கொண்டிருந்த பலஸ்தீன மக்களின் வாழ்வின் பேரொளியாய் இஸ்லாமிய ஆட்சி அவர்களை வந்தரவணைத்துக் கொண்டது.

புனித பூமி அமைதியின் பூமியாய் இஸ்லாமிய ஆட்சியில் மிக நீண்ட காலமாய் முஸ்லிம்களின் பெரும்பான்மையில் மிளிர்ந்து கொண்டிருந்த வேளை, அவர்களது முழு வாழ்வியல் உரிமைகளையும் பறித்து, அவர்களையே அவர்களது தேசத்தில் இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்க வித்திடும் பேரிடியாய் “பல்போர் பிரகடனம்” வந்து வீழ்ந்தது.

ஐரோப்பாவெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் எல்லோரும் திரட்டப்பட்டு ஒன்றாய் அவர்களுக்கென தனித்தேசமாய் பலஸ்தீனிலிருந்து இஸ்ரேலிய தேசம் உருவாக்கப்பட வேண்டுமென, 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி பிரித்தானிய அரசு வெளியிட்ட அந்தப்பிரகடனம் வெறுமனே சரித்திரத்தில் ஒரு சம்பவமென்று சந்தேகமின்றி ஏற்குமளவு தோன்றுவதில் துளியும் நியாயமில்லை என்பது வரலாற்றை நுனிப்புல் மேய்ந்தோராலும் உடன் கூற முடியும்.

குறித்த இப்பிரகடனம் பலவற்றை தன்னுள் மறைத்தாலும் வெளித்தெரியும் பல தரவுகளின் மூலம் அதன் பின்னணியை அறிய முடியாமலுமில்லை. பாரிய தூரநோக்குடனான செயற்றிட்டமொன்றிற்கான அடித்தளமாய் இடப்பட்ட அந்த சாபப் பிரகடனம் பல முன் காய் நகர்த்தல்களைத்தொடர்ந்த யூதர்களின் ஒரு பேரடைவாகவே இருந்துள்ளமையை வரலாறு காட்டி நிற்கிறது.

மனித குல வரலாறெங்கும் மனிதர்களாகக்கூட மதிக்கப்படாதவர்களாக அவர்களது அட்டூழியங்களால் பாரெங்கும் அலைக்கழிய விடப்பட்ட யூதர்களையும் மனிதர்களாக மதித்த அவர்களது மத உணர்வுகளை மதித்த ஒரு சமுதாயம் இருக்குமென்றால், அது முஸ்லிம் அரேபிய சமூகமே. அனாதரவற்று அலைந்தவர்களுக்கு அடைக்கலம் தந்த மனித நேயம் மட்டுமே பலஸ்தீன முஸ்லிம்கள் வரலாற்றில் இழைத்த ஒரே பெருந்தவறாகும்.

1896 களில் ஆறு அங்கத்தவர்களை மட்டுமே கொண்டு ஆஸ்திரிய யூதனான ‘தியோடோர் ஹெர்ட்சு’ தலைமையில் தோன்றிய சியோனிச இயக்கமே முதன் முறை யூத தேசம் எனும் பிரமாணாத்தை வகுத்தளித்தது. யூதர்களுக்கான ஒரு தனியான தேசத்தைப் பாரெங்கும் குறிப்பாய் ஐரோப்பாவெங்கும் பரவிக்கிடந்த யூதர்களைத் திரட்டி உருவாக்க வேண்டுமென்ற தூரநோக்குடன் இயக்கத்தின் திட்டமிடல்கள் வலுப்பெற்றன.

உதவியவர்களுக்கே உபத்திரவம் செய்யும் ஈனப்புத்திக்கு வரலாற்றில் யூதர்களுக்கு நிகர் யூதர்களே. வட்டியை தலைமைத்தொழிலாய்க் கொண்டிருந்த அவர்கள், மாபெரும் பொருளீட்டல் செய்து தமக்கான தேசத்தை தங்கள் துயரில் உதவிய பாலஸ்தீனர்களிடமிருந்தே பறிக்கும் ஈனத்திட்டம் அரங்கேற்றங்கண்டது.

பெரும் செல்வந்தர்களாகிவிட்ட யூதர்கள் பணத்தால் பலஸ்தீனை வாங்கி விடும் பேரத்தையும் மேற்கொண்டார்கள். இஸ்லாமிய பேரரசின் இறுதி ‘கலீபா சுல்தான் அப்துல் ஹமீத் 2’ அவர்களிடம் பேரம் பேசப்பட்டது. யூதர்களின் திட்டங்கள் அறிந்த கலீபா ‘தன் உடல் கண்ட துண்டமாக்கப்படுவதிலும் அதை கொடுமையானது’ என உணர்ந்திருந்தமையை தியோடர் ஹெர்ட்ஸின் நாட்குறிப்பு சான்றுப்படுத்துகிறது.

பொருளாசையற்ற கலீபாவிடமிருந்து பணத்தால் சூறையாட முடியாத தங்களுக்கான ஒரு தேசத்தை அக்கால வல்லரசான பிரித்தானிய அங்கீகாரம் மற்றும் உதவியுடன் சூறையாடும் திட்டம் அமுலாக்கம் காணுவதையே வரலாற்றில் பல்போர் பிரகடனமாகக்காண முடிகிறது.

அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ‘ஆதர் ஜேம்ஸ் பல்போர்’ இனால் சியோனிச தலைவன் ‘ரோத்சில்ட்’ என்பானுக்கு பிரித்தானிய அரசின் சார்பில் எழுதப்பட்ட வாக்களிப்புக்கடிதமே அது. ஐரோப்பாவெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் திரட்டப்பட்டு பலஸ்தீன மண்ணில் தனி நாடமைப்பதானது எத்தனை பாரிய அநீதி அக்கிரமமென அறிந்து கொள்ள எச்சிரமமும் வேண்டியதில்லை. இருந்தும் பிரித்தானியா தன் கண்களை கட்டிக்கொண்டு அவ்வன்குரோதத்தில் வேர்ப்பங்கு கொண்டது.

இரத்தக்கறை படிந்த சரித்திரமொன்றை நிகழ்த்தப்போகும் யூதர்களின் திட்டத்திற்கு சாய்ந்து அப்போது வரை பலஸ்தீனில் எந்தவித உரிமையுமற்ற பிரித்தானிய இவ்வீனச்செயலை முனைந்து செய்தமைக்காக, தன் வரலாறெங்கும் தனக்கான இழி பெயரை தாங்கிக்கொள்ளத் தயங்காது சென்றதில் இரு பெரும் பின்னணிக் காரணங்கள் இருந்துள்ளமை ‘டொம் சேகேவ்’ எனும் வரலாற்றாசிரியரின் முன்வைப்புக்களிலிருந்து அறிய முடிகிறது.

முதலாம் உலகப்போரில் பிரித்தானியாவின் உக்கிர வெற்றியில் அதன் ஆயுத பலமே முழு முதற்காரணி என்றாலும் தவறில்லை எனுமளவு பாரிய வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அக்காலப்பகுதியில் வெடி பொருட்தயாரிப்பில் பெரிதும் பயன்படும் அசற்றோனைக் கண்டுபிடித்து பிரித்தானியாவுக்கு அளித்த சியோனிச தலைவன் ‘செயிம் வெயிஸ்மன்’ தகுந்த அன்பளிப்பு கொண்டு பிரித்தானிய அரசால் கௌரவிக்கப்பட வேண்டுமெனும் உணர்வு பிரித்தானியாவிடமிருந்தது. இந்த நன்றியுணர்வு அவர்களுக்காக சர்வதேசத்தில் ஒரு நிலையான துரோக வடுவை இழைக்கவும் பிரித்தானியாவை துணிக்கச்செய்துள்ளது.

முதலாம் உலகப்போரை வென்று தன்னாதிக்கத்தை மேலும் வலுப்படுத்திய பிரித்தானியா தற்காப்பில் அதிகம் கரிசணை செலுத்த வேண்டியிருந்தது. பிரிந்து கூறுகளாய்க் கிடந்த ஜேர்மனி ஒன்றாக்கப்பட்டு, வலுப்பெறும் நிலையும் நாசிச விளைவாகத் தொடர்ந்திருந்தது. ஒரு கட்டத்தில் எதிர்க்கும் நிலை வந்தால் அதற்கான பங்களிப்பை யூதர்களிடமிருந்து பெற அவர்களது விடயத்தில் கரிசணை செலுத்தி அவர்களுக்காக ஒரு தேசத்தை ஆக்கியளித்தல் பொருத்தமானதென கருதியமையும் இப்பெரும் வரலாற்றுத்துரோகத்தின் கதாநாயகனாக பிரித்தானியாவை மாற்றுவித்திருந்தது.

உதவிக்கு பரிகாரம் செய்ய நினைத்தாலோ, தங்களுக்கு யூதர்களுக்கு உதவ வேண்டிய தேவை இருந்தாலோ பிரித்தானிய அரசு ஐரோப்பிய யூதர்களைத் திரட்டி ஐரோப்பாவில் ஒன்றுகூட்டி இருக்க வேண்டும். ஆனால், பிரித்தானியா செய்ததெல்லாம் ஏற்கனவே பூர்வீக மக்களின் குடியிருப்பாய் திகழ்ந்த பூமியில் இரத்த சரிதம் ஓட்ட வித்திட்டதும், உடனிருந்து இறுதி வரை அவர்களைப் பலப்படுத்தியதும் தான். இங்கு தான் ஐரோப்பிய யூதர்களின் தேசம் அரேபிய முஸ்லிம்களின் உடைமையிலிருந்து ஏன் பறித்தெடுக்கப்பட வேண்டும்? ஐரோப்பாவிலேயே அவர்களுக்கான தேசம் ஆக்கப்பட்டிருக்கலாமே? எனும் கேள்விகள் வலுவாய் எழுகின்றன.

இக்கேள்விகளுக்கான பதில்களை தங்களது புனித பூமி அதுவென யூதர்கள் கோரும் உரிமையைக்காட்டி சுருக்கி விடுவதில் எவ்வித அறிவுடைமையும் இருக்காது. காரணம், மத ரீதியில் அதிக புனிதத்துவமிக்கதாக பலஸ்தீன பிரதேசம் உள்ளங்களில் அங்கம் பிடிப்பதும், தெளிவான சான்றுகளுடன் அமைந்த வரலாற்றுத்தொடர்புகளும் இஸ்லாமியர்களுக்கே மிகவும் உண்டென்பதும் யாவருமறிந்த இரகசியமே.

அல்குர்ஆன் அருள்மிக்க பூமி என்று வர்ணித்திருப்பதாலும், முஸ்லிம்களது முதலாம் கிப்லாவைக் கொண்டிருப்பதாலும், நபிகளாரின் விண்ணுலக யாத்திரை தொடங்கிய இடமென்பதாலும், மக்காவின் கஃபதுல்லாஹ், மஸ்ஜிதுந்நபவி ஆகிய புனிதப் பள்ளிவாசல்களுக்கு நிகரான பைத்துல் முகத்திஸைக்  கொண்டிருப்பதாலும், இன்னும் பல சிறப்புக்களாலும் இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பலஸ்தீன் உள்ளங்களில் தோய்ந்த பன்மடங்கு  புனித பூமியாகவே திகழ்கிறது.

எனவே, வெளியில் அவ்வாறு கூறப்பட்டாலும் ஆழமான வேறு காரணங்கள் இருக்க வேண்டுமென்பதை இது உணர்த்துகின்றது. இஸ்ரேலின் உருவாக்கமும் அதைத்தொடர்ந்த அதன் நிகழ்வுகளும் அவர்களுக்கு பக்க பலமாகும் சர்வதேச சக்திகளையும் கொண்டு பகுப்பிற்குள்ளாக்கும் போது அத்தகைய திடுக்கிடச்செய்யும் காரணிகளையும் எதிர்வுகூற முடிகிறது.

ஐரோப்பாவில் சிதறிக்கிடந்த யூதர்களுக்கான தேசத்தையே பாலஸ்தீனத்தில் சூறையாடி வழங்க வழி திறந்தது பல்போர் பிரகடனம். ஐரோப்பாவில் சிதறியவர்கள் மற்றும் ஹிட்லரின் ஆட்சியில் இவர்களது திட்டமிடல்களை அறிந்த ஹிட்லரால் கொல்லப்பட்ட 2/3 பங்கினரான யூதர்கள் போக மீதியான யூதர்கள் என முழு ஐரோப்பிய யூதர்களும் ஐரோப்பாவில் ஒன்று திரட்டப்படாது, மத்திய கிழக்கில் ஒன்று திரட்டப்படுகின்றனர். இவ்வாறு ஒன்று திரட்டப்பட பிரித்தானியா தன் முழுச்சக்தியையும் பிரயோகிக்கிறது. அமெரிக்காவும் வலுப்படுத்துகிறது.

1920 களில் பிரித்தானிய ஆட்சியில் பலஸ்தீனம் காலணித்துவத்தின் கீழ் வர யூதக்குடியிருப்புகள் அதிகரித்தன. படிப்படியாய் பலஸ்தீனம் சுரண்டப்பட்டது. அப்பாவி முஸ்லிம்கள் துரத்தப்பட்டும் கொல்லப்பட்டும் இரத்த சரிதம் தொடரப்பட்டது. தாய் மண்ணில் அதன் சமூகம் அகதிகளானது. வன்கொடுமைக்குள்ளானது. தொடர்ந்து நாளுக்கு நாள் மோதல்கள். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் முஸ்லிம்கள். அதீத ஆயுத பலத்தால் அடக்கியாளும் யூதர்கள் எனும் தொடரில் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் சபையில் ஜனநாயக நாடகம் வரைகிறது.

1947 இல் இஸ்ரேல் எனும் தேசம் யூதர்களுக்காக உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைத்தது. அமெரிக்கா வழி மொழிந்தது. சரித்திர துரோகம் நிகழ்த்தப்பட்டது. சரி நீதி நிலை நாட்ட உருவான அமைப்பெனக் கூறிக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையும் கைகட்டி அனுமதித்தது.

1947ல் உலக நாடுகளின் பேரவை பலஸ்தீனத்தை இரு நாடுகளாகப்பிரிக்க ஒப்புதலளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அரேபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. ஜெரூசலேம் நகரம் உலக நாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டுமென்றும் முடிவு செய்தது. ஜெரூசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டுமென மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும், அதனைத்தவிர்ப்பதற்காக இம்முடிவென்றும் கூறப்பட்டது.

முழு அரபுலகும் எதிர்த்தது. இருந்தும் சர்வதேச அரங்கில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் துணை நிற்க ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் மனிதம் புதைக்கப்படுகிறது. வன்குரோதம் கட்டவிழ்க்கப்படுகிறது. பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இஸ்ரேல் தம் நாடு உருவானதை அறிவித்தது.

இவ்வாறு கூட்டுச்சதியில் உலக வரைபடத்தில் தவறாய்ப்பிறந்த இஸ்ரேலின் ஒவ்வொரு கட்ட நகர்வுகளும் அது உருவாக்கப்பட மத்திய கிழக்கு களமான காரணத்தைக் காட்டியே நிற்கின்றன. 1990 களில் அமெரிக்கா இஸ்ரேல் சார்பாக 14 விமானத்தளங்களும் 1 கப்பல் தளமும் ஆக்கப்பட்டது. மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தும் தூரநோக்கில் இஸ்ரேல் எனும் தேசம் உருவாக்கப்பட்டுள்ளமைக்கு இது ஒரு பெரும் சான்று.

2006 களில் லெபனானை இஸ்ரேல் தாக்கியது. 1760 கி.மீ. நீள உலகின் இரண்டாவது பெரிய குழாய் வழி எண்ணெய்ப்பாதை ஆக்கத்தில் பயனடையவுள்ள சில நாடுகளுடன் தனக்கான பங்கை நிலை நாட்ட இஸ்ரேல் நாடியது. துருக்கியின் சிஹான் துறைமுகத்திலிருந்து இஸ்ரேலின் அஸ்கொலோ துறைமுகத்திற்கான குழாய் வழி அமைத்தாலே திட்டம் நடைமுறை காணும் நிலை அமைகிறது. பாதையில் குறுக்கேயுள்ள லெபனானைத்தாக்கியது. இவ்வாறு பல இஸ்ரேலியத் தாக்குதல்களும் அலசப்படின், எண்ணெய் வளத்தை கைப்பற்றும் தூரநோக்கு இஸ்ரேலிய தேச உருவாக்கத்தில் முக்கிய அங்கம் வகித்துள்ளமை புலப்படும்.

இஸ்ரேலின் துவக்கத்திலிருந்து இடம்பெற்ற போர்ச்சூழல்களின் கணிப்பு மாபெரும் மற்றுமொரு உண்மையையும் தெளிவுபடுத்துகிறது. எண்ணிலடங்காத போர்ச்சூழல் மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் தேசம் அங்கு உருவாக்கப்பட்டதால் சாத்தியமானது. இது மாபெரும் ஆயுத விற்பனைக்கு வித்திடுகின்றது. ஆயுத விற்பனையை பிரதான பொருளீட்டலாகக் கொண்டுள்ள அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இருக்கை அவசியமாகிறது.

இதனாலேயே வருடாந்தம் அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தில் 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான ஆயுத உதவியை இஸ்ரேலிற்காக அமெரிக்கா தொடர்ந்தும் செய்து வருகிறது. பிரித்தானியாவும் தனது பங்கிற்கானப் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இவ்வாறு பகுப்பாய்வு செய்யும் போது, இஸ்ரேல் எனும் தேசம் மிகுந்த தூரநோக்குகளுடனே மத்திய கிழக்கில் உதமாக்கப்பட திட்டம் தீட்டப்பட்டிருப்பதை உணர முடியும். சுருக்கக்கூறின், அரபகத்தையே அழிக்க வல்ல கேந்திர முக்கியத்துவம், வள இருக்கை, பெற்றோலிய சுரண்டல், ஆயுதச்சந்தைப்படுத்தல், அதிகார நிலைநாட்டல், இஸ்லாத்தை அழித்தல் போன்ற தூரநோக்குகளுக்காகவே அதன் அமைவிடத்தேர்வு அமைந்துள்ளது.

இத்தகைய மாபெரும் தூரநோக்குகளுடன் பலஸ்தீனில் தமது தனி நாட்டை உருவாக்கிக் கொள்ள வந்த யூதர்களை முதன் முதலில் சட்டபூர்வ ஆதரவளித்து பலஸ்தீன மக்கள் வாழ்வில் பேரிடியாய் பல்போர் பிரகடனத்தை வீழ்த்திய அரசு இன்றைய பலஸ்தீன முஸ்லிம்களின் நிலைக்கு என்ன பதில் தரத்தயாராகவுள்ளது?

நூறாயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடியிருப்பு இழந்து அகதிகளாகியுள்ளனர். ஒரு நாளுக்கு வெறும் 3-4 மணி நேரமே அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு மின்சாரம். நாளுக்கு நாள் கொலை. சிறைப்பிடிப்புக்கள். குண்டு வெடிப்புக்கள். கற்பழிப்புகள் தெட்டத்தெளிவாக ஒரு கொடூர இனச்சுத்திகரிப்பிற்கும் வன்குரோத குருதிக்கலாசாரத்துள்ளும் முஸ்லிம்களைத் தள்ளி விடும் படி பல்போர் பிரகடனம் அமைத்து, போதாமைக்கு உடனிருந்து ஆயுத உதவிகள் வழங்கி, ஐக்கிய நாடுகள் சபையில் நாடு எனும் அங்கீகாரம் வாங்கி அளித்து, தொடர்ந்தும் அவர்களை ஆதரிக்கும் பிரித்தானியா இப்பொழுது இவற்றைப் பொறுப்பேற்றே ஆதல் வேண்டும்.

நீதியை நிலைநாட்டவெனவும் அனைத்து நாடுகளின் அமைப்பெனவும் காட்டிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையும் இதைப் பொறுப்பேற்ற ஆதல் வேண்டும். மாற்ற முடியாத கசப்பான கடந்த காலத்தை கருவாக்கிய பிரித்தானிய அரசின் செயல் நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் மறுக்காது பொது மன்றில் பலஸ்தீன அரசிடம் மன்னிப்புக் கோரியாவது தன் தவறுக்கு ஒரு தணிக்கை தேடுமா?

உலகம் கூறும் ஒரு நியாயம் மட்டுமே இதுவரை உலக வாழ் முஸ்லிம்களாலும் மனித நேயமுள்ள சகலராலும் ஜீரணிக்க முடியாத நிலையிலுள்ளது. காலணித்துவமும் ஏகாதிபத்தியமும் இணைந்திருந்த ஒரு புனித பூமியை நசுக்கி, அழித்து நச்சு விதை விதைத்து விட்டு அப்பாவி முஸ்லிம்கள் மீது வன்முறையை சொல்லொனா அளவில் தொடுத்து விட்டு, இதுவரை 43,000 முறை சர்வதேச நியமனங்களை மீறி இஸ்ரேல் பைத்துல் முகத்திஸ் விடயத்தில் தாக்குதல் நிகழ்த்தியும், உலக நீதி பேசுவோன் எல்லாம் மறுத்து ஒதுக்கி விட்டு, டையர் யாஸின் படுகொலை, கியூபிய்ய படுகொலை, ராஃபாஃ படுகொலை, ஷாப்ரா ஷத்தீலா படுகொலை, அல் அக்ஸா படுகொலை, ஹெப்ரான் படுகொலை அனைத்தையும் பார்த்திருந்து விட்டு, முஸ்லிம்கள் உயிரிலும் மேல் நேசிக்கும் பைத்துல் முகத்திஸை தகர்க்க நூறு முறைக்கும் மேல் முயலும் போதெல்லாம் இருந்து விட்டு உரிமை சுரண்டப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக எழும் போது, மண்ணின் பூர்வீக உரிமையாளர்கள் மண்ணை நேசித்து கிளரும் போது, உயிரிலும் மேல் நேசிக்கும் புனித இல்லம் தாக்கப்படுகையில் உணர்ச்சி மேலோங்கும் போது மாத்திரம் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முழங்குகிறீர்களே, உண்மையில் யார் தீவிரவாதி? உரிமையில்லா தேசத்தை உருவாக்கி உரிமையாளர்களை அறுத்துருக்கும் மிருகங்கள் தீவிரவாதிகள்! சுய நலனுக்காக அதை அரங்கேற்றம் உடனிருந்த அமைதி காத்து துணை சென்ற அனைவரும் தீவிரவாதிகள்! உரிமைக்காய்ப் போராடும் அப்பாவிப் போராளிகளை தீவிரவாதிகள் என்று கூறும் நீங்கள் அனைவரும் தான் தீவிரவாதிகள்!

உசாத்துணைகள்
1) Decleration text, Zionism and Israel Information Center
2) Tom Segev, “View with favour,” New York Times, (August, 20, 2010)
3) “British government rejects Paleatenian request to apologize for Balfour Declaration” JTA, (April 25, 2017)
4) பைத்துல் முகத்திஸ் தற்போதைய நிலை, மு.குலாம் முஹம்மத், முதலாம் பதிப்பு, 2001.
5) அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தோல்வியிலிருந்து தோல்விக்கு, எம். றிஸ்வி ஸுபைர், முதலாம் பதிப்பு, 2009.
6) அறபுலகின் மக்கள் எழுச்சி புரிந்து கொள்வதற்கான பாதை, றஊப் செய்ன், முதலாம் பதிப்பு, 2009.
7) U.S. Foreign Aid to Israel, Jeremy M Sharp, CRS Report, 22 December 2016.
8) Islam Denounces the Terrorism, Adnan Kitta. 330px-Balfour_declaration_unmarked PicsArt_11-01-09.36.57 Screenshot_20171017-214856_01

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here