இரு தலைவர்களுக்கிடையிலான அரசியல் பிரச்சினை சாய்ந்தமருது மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
228

3a202c1b-e2ef-4cd4-977e-66e6b85a105dஆர்.ஹசன்

“சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச சபைக்கோரிக்கையானது, அரசியல் தலைமைத்துவங்களின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பிரச்சினை. இதன் பொறுப்பினை அரசியல் தலைமைத்துவங்களே ஏற்க வேண்டும். இந்த விடயத்தைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றினைந்து முன்னெடுக்க வேண்டும்” – என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவசால் தலைவர் அல்ஹாஜ் ஹனீபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர், ஆர்ப்பாட்டங்கள் மூலமல்லாது, கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள தம்முடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறும் கோரிக்கை விடுத்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

சாய்ந்தமருது பிரதேச சபையென்பது இன்று நேற்றுள்ள பிரச்சினையல்ல. அது நீண்ட நாட்களாகவுள்ள ஒரு பிரச்சினை. தேர்தல் காலங்களில் அரசியல் சுயலாபங்களுக்காக அரசியல் தலைமைத்துவங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் வெளிப்பாடே இன்றைய நிலைக்குக்காரணம்.

இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்குள்ளது. ஆனால், அது இதனைத்தீர்த்து வைக்காது இவ்வளவு காலம் இழுத்தடிப்புச் செய்துள்ளது.

இறுதியில் இந்த விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலையிட்டதால் அது அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. இரண்டு கட்சிகளினதும் தலைமைத்துவங்களுக்கிடையிலுள்ள அரசியல் ரீதியிலான பிரச்சினை இன்று ஒரு சமூகம் வீதியில் இறங்கிப் போராடுகின்றளவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அத்தோடு, இரண்டு முஸ்லிம் ஊர்களுக்கிடையில் பகைமையும் இது ஏற்படுத்தியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

புதிய அரசியலமைப்புத்திருத்தம், மாகாண சபை எல்லை நிர்ணயம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சமூகம் இவ்வாறு வீதியில் இறங்கிப் போராடுவது மிகவும் மன வேதனையான விடயமாகும்.

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் இருந்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் தீர்த்து வைக்கும் விடயமாக இது அமைந்திருக்கும்.

இந்த விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருடன் கலந்தாலோசித்து இறுதித்தீர்மானம் எடுக்கும் முயற்சிகளைச் செய்து வருகின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here