பேசித்தீர்ப்பதை போராடித்தீர்க்கலாமா?-எம்.எம்.ஏ.ஸமட்

0
155

Untitled-1காலத்திற்குக்காலம் நடைபெறும் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதற்காக அரசியல் தலைமைகளினால் அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகளைப் பொறுப்பேற்ற கையோடு அளித்த அவ்வாக்குறுதிகள் மறக்கப்பட்டு விடுகின்றன.

இவை தான் இலங்கை அரசியலின் சிந்தாந்தம் என்று குறிப்பிடுவதிலும், 2000 ஆண்டின் பின்னரான முஸ்லிம் அரசியலின் யதார்த்தமெனச் சொல்வதிலும் தவறிருக்காது.

சமூக ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வாக்குறுதிகள் வழங்குகின்ற போது அவ்வாக்குறுதிகள் ஏனைய சமூக மற்றும் பிரதேசங்களுக்குப் பாதகமான அல்லது சாதகமான பக்க விளைவுகளை உருவாக்குமா? பிரதேச ஒருமைப்பாட்டுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? ஒற்றுமையை சீர்குழைக்குமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?  என்ற சுயவிசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

வாக்குறுதிகள் மீதான எதுவித சுயவிசாரணைகயுமின்றி தங்களது அரசியலிருப்பைத் சமூகத்திலும், பிரதேசங்களிலும் தக்க வைத்துக்கொள்வதற்காக வழங்கிய வாக்குறுதிகள் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளின் எதிரொலியே தற்போது கல்முனை மகாநகர எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருதூரிலும் , கல்முனையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அரசியல் தலைமைகளினால் அளிக்கப்பட்ட அவ்வாக்குறிதிகளை நிறைவேற்றுங்கள் என வாக்குறுதிக்களுக்காக வாக்குகளித்த மக்கள் கேட்பதில் எவ்விதத்தவறுமில்லை. அது அவர்களின் உரிமை. ஆதை எவரும் கொச்சப்படுத்த முடியாது.

ஆனால், இந்த உரிமைப்போராட்டத்தின் பக்க விளைவுகள் குறித்துப் போராடுகின்ற, கருத்துக்களை வெளியிடுகின்ற உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டியதும் அவசியமாகும்.

உலகளவில் உரிமைப் போராட்டங்கள் எனத்தொடங்கிய போராட்டங்கள் திசை மாறியதும், திசை மாற்றப்பட்ட வரலாறுகளும் பலவுண்டு. அவை குறித்தும் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். விட்டுக்கொடுப்புக்களும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளும் பல உரிமைகளை வெற்றி கொள்ளச் செய்திருக்கிறதென்பதையும் இங்கு பதியப்பட வேண்டிய தேவையுமுள்ளது.

அந்த வகையில், சாய்ந்தமருதுக்கான தனிப்பிரதேச சபையின் தேவையும் அப்பிரதேச சபை நிறைவேற்றப்படுவதன் பின்னணியில் கல்முனையின் ஏனைய பிரதேசங்களில் ஏற்படும் எதிர்காலப் பிரச்சினைகள் தொடர்பிலும் சாய்ந்தமருது மக்கள் சிந்திப்பதும் அவசியமாகவுள்ளது.

இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் இவ்விருபிரதேச பள்ளிவாசல்கள் நிர்வாகங்களும், பிரதேச புத்திஜீவிகளும் ஒன்றுபட்டு ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தால் அல்லது சாய்ந்தமருதூருக்கு தனிப் பிரதேச சபை பெற்றுத்தருவோமென்று வாக்குறுதியளித்தவர்கள் அவை தொடர்பில் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை இரு ஊர்களிலும் நடாத்தி ஒரு முடிவுக்கு வந்திருந்தால், இப்பிரச்சினை விஷ்வரூபமெடுத்து வீதிக்கு வந்திருக்காது.

ஆனால், இப்பிரச்சினை வீதிக்கு வந்து கல்முனையை 30 வருடங்கள் பின்னோக்கி நகரச்செய்திருக்கிறது.

சாய்ந்தமருதின் கோஷமும் பின்னணியும்
பிரித்தானியர் கரவாகுவை கல்முனை எனவும் அதன் எல்லையாக வடக்கே தாளவாட்டுவான் வீதிக்கும் தெற்கே கல்முனை ஸாகிறாக்கல்லூரி வீதிக்குமிடைப்பட்ட பிரதேசத்தை வரைபடத்தில் கல்முனை எனக்குறித்து அதன் அந்தஸ்தை 1887ல் சனிட்டரி போட்டாக உயர்த்தினர்.

பண்டைய கல்முனையின் நிர்வாக எல்லையானது, மூன்று நிர்வாக கிராம சபைகளையும் ஒரு பட்டின சபையையும் கொண்டிருந்தது. கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என்பன அவையாகும். கரவாகு வடக்கு கிராம சபை கல்லாறு, துறைநீலாவனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, கல்லாறும் துறைநீலாவணையும் மட்டக்களப்பு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன.

கரவாகு மேற்கு கிராம சபை நற்பட்டிமுனை, மணற்சேனை, சேனக்குடியிருப்பு, துரவந்தியன்மேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகவும், கரவாகு தெற்கு சபை சாய்ந்தமருது கிராமத்தை உள்ளடக்கியதாகவும் இருந்ததுடன், கல்முனைப் பட்டின சபையின் எல்லையானது கல்முனை சனிட்டரி போட்டின் எல்லையாக அதவாது, தாளவட்டுவான் வீதி முதல் கல்முனை ஸாகிறா வீதி வரையானது என கல்முனையின் வரலாற்றுப்பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், இவ்வரலாற்றுப்பதிவு தவறானது என கல்முனை வாழ் தமிழ் தரப்புக்கள் சுட்டிக்காட்டி வருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இந்நிலையில், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சட்ட மூலத்தின் பிரகாரம் பட்டின சபை மற்றும் கிராம சபைகள் என்ற அதிகார சபைக்களுக்குப் பதிலாக பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. இதனடிப்படையில் கல்முனைக் கரைவாகுவின் 3 கிராம சபைகளும் ஒரு பட்டின சபையும் கல்முனைப் பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் இவ்வாறு உருவாக்கப்பட்ட சபைபளுக்கான தேர்தல்கள் 1991ஆம் ஆண்டு நடைபெற்றது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக இத்தேர்தல் இவ்விரு மாகாணத்திலும் குறித்த காலங்களில் நடாத்தப்படவில்லை.

கல்முனை பிரதேச சபைக்கான முதலாவது தேர்தல் 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் சாய்ந்தமருது மக்களும் தாங்கள் விரும்பும் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிந்திருந்தார்களே தவிர, தங்களுக்கு ஒரு தனியான சபை வேண்டுமென்று அப்போது கேட்வில்லை.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது சாய்ந்தமருது மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பெற்றுக்கொள்வதற்காக சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச செலயலம் வழங்கப்படுமென்ற வாக்குறுதி மறைந்த தலைவர் அஷ்ரபினால் வழங்கப்பட்டு அவ்வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம், 1999ஆம் ஆணடு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி உப பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2001ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டு செயற்பட ஆரம்பித்தது. இதன் பின்னரே தனியான பிரதேச சபைக்கான கோஷமும் எழத்தொடங்கியது.

கடந்த 2015ல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் பிரசாரத்தின் போது, சாய்ந்தமருதூருக்கான தனியான பிரதேச சபை வழங்கப்படுமென்ற வாக்குறுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலம் வழங்கச்செய்யப்பட்டதன் பின்னர் தான் இக்கோஷம் வழுப்பெற்றதென்பது நிதர்சனமாகும்.

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபைக்கான கோஷம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதிலுள்ள சாதக, பாதங்கள் குறித்து ஆரோக்கியமாகப் பேசப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்பட்டிருந்தால் தொப்புல் கொடி உறவாக விளங்கும்  சாய்ந்தமருதூரிலும் கல்முனையிலும்  அதிகாரப்பசிக்காக பலி சொல்லும் நிலை உருவாகயிருக்காது. ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறான நிலையை உருவாக்கியவர்கள் இப்பிரதேச அரசியல்வாதிகளும் அவர்களின் தலைமைகளும் என்பதை முழு நாடே அறியும். அவர்களின் அரசியலிருப்புக்காக இன்று இவ்விரு ஊர்களும்  பலியிடப்பட்டிருக்கிறதென்பதை மறுக்க முடியாது.

இருப்பினும், ஒரு தேசத்தில் ஒரு சமூகத்தில் அல்லது ஏதாவதொரு துறையில் பிரபலயமிக்க விடயம் அல்லது பிரபல்யமிக்கவர்கள் பேசப்படுவது போன்று அல்லது பெயர் கூறி எல்லோராலும் உச்சரிக்கப்படுவது போன்று கிழக்குப் பிராந்தியத்தில் கல்முனை என்ற பெயர் பிரபல்யமிக்கது. இப்பெயர் பல்வேறு தளங்களில் உச்சரிப்படுவது யதார்த்தமானது.

ஆனால், அப்பிரபல்யமிக்க பெயர் தாங்கிய எல்லைக்குள் வாழ்பவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் கருதப்படுவதோ அல்லது கல்முனை என்ற பெயருக்குள் ஏனைய பிரதேசங்களின் பெயர் மறைக்கப்பட்டு விடுகிறதென்று சிந்திப்போதோ நியாயமாகாது. அது சின்னத்தனமான சிந்தனையாகும்.

கல்முனையின் அதிகாரத்திலிருந்தவர்கள் இழைத்த சில தவறுகள்தான் தங்களது தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைகுக் காரணமென்றும், நாங்கள் யாருக்கும் எதிரானவர்களில்லையென்றும் கூறப்பட்டாலும், கல்முனை என்ற பெயருக்குள் எங்கள் ஊர் மறைந்து கிடக்க முடியாதென்ற அற்ப சிந்தனை கொண்ட ஒரு சில  சாய்ந்தமருது நபர்களினால் உருவாக்கப்பட்ட பிரதேசவாதச் சிந்தனையின் ஒட்டு மொத்த வடிவமே தொப்புல் கொடி உறவாக விளங்கும் சாய்ந்தமருது மக்களையும் கல்முனை மக்களையும் ஏட்டிக்குப் போட்டியாக வீதியில் இறங்கி பேரணி செல்லவும், ஹர்த்தால், கடையடைப்பை மேற்கொள்ளவும் வழிகோலியுள்ளதென்பதை மறுக்க முடியாது.

போராட்டங்களும் எதிரொலிகளும்
உரிமைகளைப் பெறுவதற்காக அவற்றை விடாப்பிடியாகப் பிடிப்பதும், அதனை விஷ்பரூபமெடுக்கச் செய்து பிரதேசத்தின் அமைத்திக்கும் மக்களின் இயல்பு வாழக்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உரிமைகளுக்காகப் போராடுவதை நிராகரிக்க முடியாதென்றாலும், அப்போராட்டம் ஏனையவர்களின் உரிமையிலும் பிரதேச ஒருமைப்பாட்டிலும், அன்றாட  நடவடிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதை அங்கீகரிக்கவும் இயலாது.

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை வேண்டுமென்று முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களும் கல்முனையை நான்காகப்பிரிக்க வேண்டுமென்று மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்களும் எவருக்கும் எதிரானதாகவோ, பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவோ முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல எனப்பகிரங்கமாகக் குறிப்பிட்டாலும். இப்போராட்ட நடவடிக்கைகள் கல்முனைப் பிரதேச மக்கள் பலரினது உளத்தைக் காயப்படுத்தியிருக்கிறது என்பதோடு, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் உட்பட நாளாந்தத் தொழிலாளர்களின் வருமானத்தையும் பாதித்திருக்கிறது.

சமகால அரசியல் நகர்வுகளில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு இழக்கப்படப்போகும் அநீதிகள் குறித்தும், குறிப்பாக, இப்போது விவாதிக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பிலுள்ள சாதக, பாதங்கள் குறித்து சிந்தித்து சமூகம் சார்பில் இழக்கப்படவுள்ள உரிமைகள் தொடர்பில் அவற்றிற்காக ஆரோக்கியமான முன்மொழிவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது, எல்லை நிர்ணையங்களுக்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, அவற்றின் பாதிப்புக்கள் தத்தமது பிரதேசத்திற்கு எதிர்காலச் சந்திதியினருக்கும் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்று சிந்திக்காது கிடைத்தும் முழுமையாக அனுபவிக்க முடியாத அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாதையிலிறங்கி மறியல் போராட்டம் நடாத்தும் இவ்விரு ஊரையும் பார்த்து சந்தி சிரிக்கிறதென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இருப்பினும், வெள்ளம் தலைக்குமேல் போய் விட்டது. இந்த இடத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்து இப்பிரச்சினைக்குத் தீர்வைப்பெற முடியாது. அவை சாத்தியமில்லையென்பதை எதிரொலிக்கும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஏனெனில், சாந்தமருதூருக்கான தனியான பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு பிரதேச சபை உருவாக்கப்படுவதானது ஏனையவர்களுக்கு எத்தகைய பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது. எங்களது மண்ணை நாங்கள் ஆள இடம் தர வேண்டும். அதுவரை எங்களது போராட்டங்கள் ஓயாதென்று சாய்ந்தமருது மக்கள் கூறி வருகின்ற வேளை, சாய்ந்தமருதைத் தனியாகப் பிரித்துக்கொடுப்பதானது எங்களது சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் பாதிக்கும்.

அதனால் சாய்ந்தமருதூரைப் பிரித்துக் கொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், சாய்ந்மருதுக்கு மாத்திரம் தனிச்சபை என்றில்லாது, 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தவாறு, நான்கு சபைகளுக்கான எல்லைகளோடு கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டுமென கல்முனை மக்களின் குரல்கள் ஒலிக்க, கல்முனையை நான்காப் பிரிக்க நாங்கள் விடமாட்டோம் என கல்முனை வாழ் தமிழ் மக்கள் சார்பிலிருந்து கருத்துக்கள் எதிரொலிக்கப்படுகிறது.

அப்படியானால், இதற்குத்தீர்வென்ன என்ற கேள்விக்கு விடை காண்பதே இன்றுள்ள வினாவாகும்.

விட்டுக்கொடுப்புக்களும் சகவாழ்வும்
பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிறுபான்மை மக்களின் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ, அதற்காக எவ்வாறான பொறிமுறைகள் உருவாக்கப்படுகிறதோ அப்பொறிமுறைகளினூடாக தமது சமூகத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமெனத் தமிழ் தரப்புக்கள் ஒத்துழைத்துச் செயற்படுகிறதோ அவ்வாறு பிரிக்கப்படாத கல்முனைக்குள் பிரதேசங்களின் நலன்களைப் வழங்குவதற்கும் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சகவாழ்வுக்கும் உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அவை செயற்படுத்தபடுகின்ற போது, கல்முனையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வைப்பெறலாம். சமூக உறவை வழுவூட்டி சகவாழ்வைக் கட்டியெழுப்பலாம்.

இவ்வாறான தீர்வுக்கான சோனைக்கு மத்தியில், சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் அவர்களை வழிநடத்துகின்ற பள்ளி நிருவாகங்களும் இஸ்லாத்தின் போதனையின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரு மேசையிலிருந்து பேச முன்வார்களா?

சாய்ந்தமருதூருக்கு தனியான சபை வழங்குவதோடு, கல்முனையையும் முன்னர் இருந்த சபைகளுக்கான எல்லைகளோடு நான்கு சபைகளாப்பிரிக்க தமிழ்த்தரப்புக்கள் ஏற்றுச் செயற்படுவார்களா? இவற்றைச் சாத்தியப்படுத்துவது யார்? என்ற வினாக்களுக்கும் மத்தியில்  ஓவ்வொரு ஊரும், ஒவ்வொரு சமூகம் தங்களது நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வந்து ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு கல்முனையின் பிரதேச மற்றும் சமூக ஒருமைப்பாட்டைப் காயப்படுத்தாது, பாதுகாத்து பிரதேச ஒற்றுமையையும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றே சமூக உறவையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் சகவாழ்வை விரும்பும் கல்முனை வாழ் மக்களும்  ஏனைய பிரதேச மக்களும் விரும்புகின்றனர்.

ஒரு மொழி பேசும் இரு தனித்துவ சமூகங்களும், ஒரே மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற இரு ஊர் மக்களும் ஒற்றுமையை விரும்புகின்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டும். போராட்டங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புக்களுடன் பேசித்தீர்க்க வேண்டும். கரைபடிந்த வரலாறுகளை நோக்கிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கல்முனையின் அரசியல் அதிகார வரலாற்றில் ஆட்சியிலிருந்தவர்கள் புரிந்த தவறுகளும், புறக்கணிப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கல்முனை வாழ் எதிர்காலச் சமூகத்தின் ஆரோக்கி வாழ்விற்கு வழிவிட்டு, பிரதேசவாத உணர்வுகளை உரமூட்டி, அதனை எரிய வைக்காது, ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி, இரு ஊர் மக்களும் ஒன்றுபட வேண்டுமென கல்முனை, சாய்ந்தமருது என்ற ஊர் பெயர்களுக்கப்பால் முஸ்லிம் சகோரத்துவம் என்ற அடிப்படையில் இக்கட்டுரை வினையமாக இரு ஊர் மக்களையும் வேண்டுவதோடு, கடந்த காலங்களில் பேரினவாதம் ஒரே மொழி பேசும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதவிட்டு இரு சமூகத்தையும் பிரித்தாண்ட வராலாற்றையும், சிந்திய கண்ணீரையும் செந்நீரையும் நினைவுக்குக் கொண்டு வந்து, மீண்டுமொருமுறை அவ்வாறான சந்தர்ப்பத்திற்கு கல்முனை ஆளாக்கப்படக்கூடாதென்ற இதய சுத்தியான எண்ணத்தோடு, ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புக்களை கல்முனை வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கட்டுரை வேண்டி நிற்கிறது.
விடிவெள்ளி – 02.11.2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here