மட்டு.மாவட்ட தமிழ், முஸ்லிம் இன முறுகலுக்கு சுமூகத்தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கையெடுங்கள்-சம்பந்தன் ஐயாவுக்கு றியாழ் கடிதம்

0
335

indexஊடகப்பிரிவு

அண்மைக்காலமாக வாழைச்சேனை, கிரான், சந்திவெளி போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஆட்டோ தரிப்பிட பிரச்சினை, வியாபாரத்தில் ஈடுபடுதலைத் தடுத்தல் போன்ற இனமுறுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை உடன் நிறுத்தி, பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கௌரவ எதிர்க்கட்சித்தலைவருமான கௌரவ. இரா.சம்பந்தன் (பா.உ) அவர்களிடம் கோரிக்கை முன்வைத்து சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் கெளரவ எம்.எம்.எம்,றியாழ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

2017.11.01

கௌரவ. இரா.சம்பந்தன் (பா.உ),
கௌரவ எதிர்க்கட்சித்தலைவரும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்

ஐயா,

இன முறுகளைத்தடுக்குமாறு கோரல்.

தங்களின் மேலான கவனத்திற்கு.

வாழைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் பதற்றமானவொரு சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் ஆட்டோ தரிப்பிட பிணக்காகும்.

கடந்த இரு தசாப்தங்களாக ஆட்டோ தரிப்பிடமாக இருந்து வரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையச்சந்தியிலுள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் ஆட்டோ சாரதிகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி, தனித்துவமான தமிழ் ஆட்டோ சாரதிகளின் தரிப்பிடமாக அதனை மாற்றுவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் சிலர் அரசியல் இலாபங்களுக்காக முன்னெடுத்துள்ளார்கள்.

கடந்த காலங்களில் முஸ்லிம் இனத்தவர்கள் சகோதர இனமான தமிழ் இனத்தவர்களுடன் அன்னியோன்னியமாக கலந்து தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வாறானதொரு நிலை தோற்றுவிக்கப்பட்டது கவலையளிப்பதாக அமைந்துள்ளது.

யுத்தம் நிலவிய காலத்தில்  அந்தப்பிரதேசத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வறுமை காரணமாகவும், வேறு தொழில்கள் இல்லாத நிலையிலும் குறித்த முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் தங்களது தொழிலை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் குறித்த பிரதேசத்தில் தமிழ் சகோதரர்களுக்கென ஒரு ஆட்டோ தரிப்பிடமொன்றை உருவாக்கும் நோக்கில் பஸ் தரிப்பிடத்தை அவர்களுக்கு ஏற்றாற்போல் நகர்த்தி மாவட்டத்திலுள்ள தமிழ் அரசில் தலைமைகள் ஒரு தனி ஆட்டோ தரிப்பிடம் அமைத்துக் கொடுத்தார்கள்.

இதனால் முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் பாதிக்கப்பட்டாலும், சகோதர இனத்திற்காக விட்டுக்கொடுப்புடன் தங்களது தொழிலை தொடர்து மேற்கொண்டு வந்தார்கள். அவர்களை முழுமையாக அப்பிரதேசத்திலிருந்து அகற்ற முற்பட்ட போது, அங்கு முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது.

இதற்கு சுமூகமாகத்தீர்வு காணும் பொருட்டு சுமூகப் பேச்சுவார்த்தைகளின் போது, பஸ் தரிப்பிடத்திற்கென தனியானதொரு இடம் ஒதுக்கப்பட்டு, முஸ்லிம் ஆட்டோ சாரதிகளுக்கான தரிப்பிடம் வாழைச்சேனை பெற்றோல் நிலையச்சந்தியில் அமைந்துள்ள  சிறுவர் மகளிர் குற்றத்தடுப்பு நிலையத்திற்கு அருகாமையில்  வழங்கப்பட்டது.

சுமூகமான நிலையில் தங்களது ஆட்டோக்களை குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தி தங்களது தொழிலைச் செய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென அத்துமீறி தங்களின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தனது அரசியல் அதிகாரத்தைக் கொண்டு பஸ் தரிப்பிடதிற்கென ஒதுக்கப்பட்ட இடம் வேறொரு இடத்தில் இருக்கத்தக்க, முஸ்லிம் ஆட்டோ சாரதிகளின் தரிப்பிடத்தில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லை நட்டு, தரிப்பிடத்தை இல்லாமலாக்கி முஸ்லிம் ஆட்டோ சாரதிகளை அப்புறப்படுத்த எடுத்த இனவாத முயற்சி காரணமாக இப்பிரதேசத்தில் முறுகல் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அரசியல்வாதி  பல விடயங்களில் இனவாதத்தை தூண்டும் வகையில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டடு வருவது குறிப்பிடத்தக்கது. இரு இனங்களிடையேயும் பிளவையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவதற்கு எத்தனிப்பதாகாவே இவ்வாறான செயற்பாடுகள் தென்படுகின்றது.

இதன் தொடரில், தமிழ், முஸ்லிம் மக்கள் அன்னியொன்னியமாக ஒன்று  கூடும் கிரான் ஞாயிறு வாராந்த சந்தைக்கு முஸ்லிம்கள் எவரும் வரக்கூடாதென்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (29ஃ10ஃ2017) எச்சரிக்கைப்  பதாதைகள் இடப்படுள்ள நிலையில், அன்றைய தினம் வழமை போன்று வியாபாரங்களுக்காகவும் பொருட்கொள்வனவுக்காகவும் சென்ற முஸ்லிம் வியாபாரிகளும் பொது மக்களும் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதே போன்று  செவ்வாய்க்கிழமை (31.10.2017) காலை வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சந்திவெளி சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகள் மீது தமிழ் குழுவொன்றால் கல் வீசித்தாக்குதல் நடத்தப்பட்டு இதனால் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறானதொரு சூழல் இப்பிரதேசங்களில் உருவாக்கப்படுவது ஆரோக்கியமானதொன்றல்ல. இன்று இரு இனங்களும் இணைந்து பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியதொரு நிலையில், இன நல்லுறவு கட்டியெழுப்பப் பட வேண்டியதொரு கால கட்டத்தில் இவ்வாறு இனவாதத்துடன் அரசியல் செய்வதை நிறுத்தி, இரு இனங்களையும் ஒற்றுமைப்படுத்தி சமூகம்சார் நன்மைகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதோடு, இரு இனங்களைச்சேர்ந்த இளம் சமூகத்தினர்  மத்தியில் இவ்வாறான பிரச்சனைகள் பிரிவினைகளை ஏற்படுத்துவதைத் தவிர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை விரைந்து காண வேண்டும்.

மேலும், உங்களின் கட்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் அவர்களின் இனங்களுக்கிடையில் பிரிவினைகளைத் தூண்டும் இவ்வாறான  செயற்பாடுகளை தாங்கள் கண்டிக்க வேண்டுமென்பதுடன் இவ்வாறான பிரச்னைகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் நிலைமைகளைச் சீர்செய்யுமாறு தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையிலும் தங்களிடம் இவ்விடயங்கள் தொடர்பில் செயற்பட்டு சுமூகமான தீர்வைப் பெற்றுத்தந்து இன முரண்பாட்டைத்தவிர்க்க உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வண்ணம்
எச்.எம்.எம்.றியாழ்
கல்குடாத் தொகுதி அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

கடிதம் PDF வடிவில்

Page 1 Page 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here