மட்டக்களப்பின் அண்மைய இன முறுகல் பின்னணி – ஜுனைட் நளீமி

0
370

unnamed (2)வாழைச்சேனை சிறுவர்  பொலீஸ் நிலையம் முன்பாக பஸ்தரிப்பிடம் அமைத்தல், முஸ்லீம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தல் என்ற விடயம் மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் உறவில் விரிசலினை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்திருந்தது. பொலிஸாரின் மத்தியஸ்த்தத்துடன் தமிழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகளின் பங்கு பற்றுதலுடன் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுக்கு மத்தியில் குறித்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.
என்றபோதும் குறித்த விடயம் திட்டமிட்ட அடிப்படையில் இனமுருகளை ஏற்படுத்தி தமது அரசியல் இலாபங்களை அடைந்துகொள்ள எடுக்கும் முயற்ச்சி என உன்னிப்பாக அவதானிக்கின்றபோது தெரிந்து கொள்ள முடியும். ‘என்னத்தடா பாத்திட்டு நிக்கிங்க குடுங்கடா.. உங்கட அரசியல் வாதிகளெல்லாம் வரமாட்டானுகள் நீங்க செய்றத செய்ங்கடா பாப்பம்..’ பிரதேச அரசியல் வாதியின் உற்சாகமூட்டல் தமிழ் அப்பாவி இளைஞர்களை நாவிழந்து மோசமான வார்த்தைகளை சகோதர இனம் மீது அள்ளிவீச வழிவகுக்கின்றது. ‘எங்களுக்கும் ஏழும்டா.. நீங்க ஆயுதத்தோட வந்து கிழிச்ச காலம் போயிட்டு.’ பதிலுக்கு முஸ்லீம் இளைஞ்சர்கள். கலகம் அடக்கும் பொலிஸார் தாக்குதலுக்கு தயாராகின்றனர். ‘ரைபிள எடுத்துட்டுப்போய் அடிங்கடா’ கருவாக்கனியிலயும் நாவலடிலயும் கட்டவுட்டை போட்டு இவனுகளுக்கு குடுத்தாத்தான் சரி..’ அப்போதைய தளபதி வாக்கி டோக்கி மூலமாக கட்டளை பிறப்பித்துக்கொண்டிருந்தது மீண்டும் அதே குரல் அதே பதற்றம், அப்பாவி இளைஞர்கள், பிழைப்புக்கு வழியின்றி கூலிக்கு மாரடிக்கும் சில விஷமிகள் எல்லாம் போலீஸ் நிலைய சுற்றுவட்டத்தில். இவையாவும் 2003 வாழைச்சேனை கலவரத்தை ஜாபகமூட்டியது

முச்சக்கர வண்டி நிறுத்துமிடம் தொடர்பான பிணக்கு மாவட்டம் பூராகவும் தழுவிச்செல்ல காரணம் பின்னணி குறித்து பல்வேறு விடயங்கள் பேசப்படவேண்டியவை. அரசின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான முன்னெடுப்புக்கள் எதிர்வர இருக்கின்ற உள்ளுராட்சி மாகாண சபை தேர்தலுக்கான வாக்கு வேட்டைகள் வர்த்தக போட்டி என பல்வேறு அம்சங்கள் இதன் பின்னால் மறைந்து கிடக்கின்றது. இவற்றை புரிந்து கொள்ளவேண்டுமாயின் முச்சக்கர வண்டி தரிப்பிடம் தொடர்பான உண்மை நிலையினை கண்டறியவேண்டியுள்ளது.

முச்சக்கர வண்டி தரிப்பிட வரலாறு

யுத்த சூழ்நிலை காலப்பகுதியில் வாகனப்போக்குவரத்து பெற்றோல் நிரப்பு நிலைய சந்தியினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. வாழைச்சேனை புகையிரத குறுக்கு வீதியினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. புகையிரத குறுக்கு சந்தியில் தொண்ணூறுகளுக்கு பிற்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு வண்டிகளே சேவையில் காணப்பட்டன. புலிகளது தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகும் பகுதி என்பதால் யாருமே அப்பகுதியில் முண்டியடித்துக்கொண்டு சேவை புரிய முன்வரவில்லை. மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான பாதை திறக்கப்பட்டதன் பின்னர் சில முஸ்லீம் முச்சக்கர வண்டி சாரதிகள் புகையிரத தடவைக்கு அருகில் பிரதான வீதியை அண்டித்து சேவைகளை வழங்கி வந்தனர். பின்னர் மெது மெதுவாக தமிழ் சகோதர இன முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் அவ்விடத்தில் சேவை வழங்குநராக முன்வந்தபோது அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு தீர்க்கப்பட்டும் வந்துள்ளன. பிற்பட்ட காலங்களில் தற்போதைய போலீஸ் சிறுவர் மகளிர் பிரிவு அமைந்துள்ள பகுதிக்கு முன்னாள் சில முஸ்லீம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சேவை வழங்கி வந்தபோதும் பின்னர் தமிழ் சகோதரர்களும் அவ்விடத்தில் தொழில் புரிய ஆரம்பித்தனர். தொழில் போட்டி நிமித்தம் மீண்டும் இருசாராருக்கிடையில் அவ்வப்போது பிரச்சினைகள் நிலவி பிரதேச சபை, மற்றும் போலீஸ் நிலையங்களினூடாக தீர்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. என கருத்து தெரிவித்தார் 1990 களின் பின்னர் முதன் முதலில் இப்பகுதியில் முச்சக்கர வண்டி சேவை புரிந்த ஹனிபா. மேலும் கருத்து தெரிவித்த அவர் ‘யுத்த காலப்பகுதியில் வந்து ஒடுங்கடா என்று சொன்னாலும் கூட யாரும் வருவதற்கு முன்வருவதில்லை. பயமே காரணம். ஆனால் இப்போது ..’ என முகத்தை விரக்தியோடு திருப்பிக்கொள்கின்றார். குறுகிய அரசியல் சிந்தனையும் இனவாத நகர்வுகளும் இப்பிரச்சினையை மையப்படுத்தியதாக தமது சுய இலாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்ச்சி செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. என கருத்து தெரிவிக்கும் அப்பகுதி மளிகைக்கடை வியாபாரி இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை என அலுத்துக்கொள்வதனை காணமுடிந்தது.

இதன் ஒருபடியாக 2017.10.30ம் திகதி வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் முஸ்லீம் ஆட்டோ சங்கத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்படாமல் ஒருதலைப்பட்சமாக கறுவாக்கேணி தமிழ் சகோதர முச்சக்கர வண்டிக்காரர்களுக்கு முழுமையாக தாரைவார்க்கும் தீர்மானம் எட்டப்பட்டதுடன் முஸ்லீம் ஆட்டோ சாரதிகள் தரித்து நிற்கும் இடத்தில் இலங்கையில் எப்பாகத்திலும் அமைந்திராத இருபத்தி நான்கு அடி நீளமுள்ள பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை காலாகாலம் தமது முச்சக்கர வண்டியினை செலுத்தி வந்த முஸ்லீம் தரப்புக்கு ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே கருத முடிந்தது.

பிரச்சினைக்கு மூலகாரணமாக அரச அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும்.

குறித்த இரு சமூக முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு இடையில் அவ்வப்போது நிலவிய முறுகளினை தமது சுயலாபங்களுக்காக அரச அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் பயன்படுத்தி இருப்பதனை ஆவண ரீதியாக உறுதிப்படுத்த முடியுமாக உள்ளது. ஏனெனில் 2006.03.31ம் திகதியை வர்த்தமானி அறிவுறுத்தலின் அடிப்படையில் முஸ்லீம் தரப்புக்கான தரிப்பிடம் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் 2012.10.30ம் திகதிய கோறளைப்பற்று பிரதேச சபையின் 54வது அமர்வில் தற்போதைய பிரச்சினைக்குரிய பகுதியின் முன்னாள் உள்ள பகுதியில் ஆட்டோ தரிப்பதற்கான அனுமதியினை சபையின் செயலாளரின் கையெழுத்துடன் நிறைவேற்றி அறிவித்திருந்தது. பின்னர் 2015.12.10ம் திகதி தற்போதைய பகுதியில் முஸ்லீம் ஆட்டோ சாரதிகள் தரித்திருக்க அனுமதியினை பிரதேச சபையின் செயலாளர் எழுத்து மூலமாக வழங்கியுள்ளார். பின்னர் 2015.10.14ம் திகதி குறித்த தீர்மானத்திற்கு மாற்றமாக தற்போதைய பிரச்சினைகளுக்குற்பட்ட பகுதியினை ஆட்டோ தரிப்பிட சு10ன்ய பிரதேசமாக எழுத்துமூலம் அறிவித்திருந்ததுடன் இருதரப்பிலும் தலா ஐந்து முச்சக்கர வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவும் அனுமதி அளித்திருந்தமை மயக்க நிலையினை தோற்றுவித்திருந்தது. ஆனால் மீண்டும் 2016.08.18ம் திகதி இருதரப்பும் இப்பகுதியினை பாவனைக்குற்படுத்த அனுமதி கடிதமும் வழங்கியுள்ளார். இதில் 10 முஸ்லீம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் இருசாராருக்கும் பிணக்கு ஏற்பட்டபோது போலீஸ் சிறுவர் மகளிர் பனிமைக்கு முன்னாள் உள்ள பகுதியினை இரண்டாக வகுத்து இரு சமூகங்களைச்சேர்ந்த ஆட்டோ சாரதிகளும் பயன்படுத்த 2017.06.05ம் திகதி பிரதேச சபை செயலாளரினால் இணக்கப்பாடு காணப்பட்டு கடிதமும் வழங்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க 2017.07.10ம் திகதியை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் ஆட்டோ சங்கங்களது பங்குபற்றுதல் இன்றி ஒருதலைப்பட்சமாக சகோதர தமிழ் ஆட்டோ சாரதிகளுக்கு வழங்குவதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பில் முதலமைச்சு செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு முதலமைச்சு செயலக திட்டமிடல் பணிப்பாளர் என்.தமிழ்ச்செல்வன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்ச்சி ஆணையாளர் கே.சித்திரவேல் உள்ளிட்ட நான்கு பேர்கொண்ட சுயாதீனக்குழு 2017.09.13ம் திகதி அமைக்கப்பட்டு அக்குழு இரு இனக்குழுமத்தையும் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இப்பகுதியினை பயன்படுத்த முடியும் என சிபாரிசு செய்து 2017.09.26ம் திகதி அறிக்கையும் சமர்ப்பித்திருந்தனர்.
இத்தகைய நடைமுறைகளை மீறியதாக அரசியல் சூடுபிடித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் 2017.10.27ம் திகதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அழைப்பு விடுக்காமல் ஒருதலைப்பட்சமாக பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ் சகோதர இனத்துக்கு மாத்திரம் இப்பகுதியினை பயன்படுத்த அனுமதி வளங்கள் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட மறுகணமே முஸ்லீம் ஆட்டோ சாரதிகள் தரிப்பிடத்தில் இலங்கையில் எப்பாகத்தில் இல்லாததுமான 24அடி நீலம் கொண்ட தற்காலிக பஸ் தரிப்பிடத்தினை அமைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயா முயற்ச்சி செய்தது பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குறித்த தீர்மானம் சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியிலும் ஒருதலைப்பட்சமானது என்பதனை சம்பந்தப்பட்ட பிரதேச சபை பிரதேச செயலக அதிகாரிகள் குறிப்பிடாமல் மூடிமறைத்து ஒரு இனத்தினை மாத்திரம் திருப்திப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டது மனட்ச்சாட்ச்சிக்கு முரணானது. அத்தோடு குறித்த பகுதி பிரதேச சபைகள் சட்டமூலத்திற்கு அமைவாக ஆட்டோ தரிப்பிடமாக வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட பிரதேசமும் அல்ல. மஞ்சள் கடவைக்கு அருகில் பஸ்தரிப்பு அமைவிடம் அமைப்பது வீதி ஒழுங்குக்கு முரணானது என்பதுடன் போலீஸ் சிறுவர் மகளிர் பணிமனைக்கு வருகை தருகின்ற பொதுமக்களுக்கு இடைஞ்சலாக அமையும் என்பதனையும் அதிகாரிகள் விளங்கியும் மூடி மறைப்பு செய்வதன் நோக்கம் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

பிரச்சினைக்கான தீர்வு

குறித்த பிரதேசத்தில் பயணிகள் தேவைக்காக பஸ்தரிப்பிட அமைவு இன்றியமையாதது என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. தற்போதைய சிலிங்கோ முன்பாக உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்னாள் உள்ள பகுதியில் (தற்போது பஸ்தரிப்பிடம் அமைக்க முயற்சிக்கும் பகுதியில் இருந்து ஐம்பது மீற்றர் தூரத்தில்) புதிய பஸ்தரிப்பிடத்தை அமைத்து தற்போது அமுலில் இருந்ததுபோல் இருதரப்பும் தமது வண்டிகளை நிறுத்தி தொழில் புரிய வழிவகை செய்துகொடுக்க முடியும். அல்லது ஏற்கனவே ஆட்டோ சாரதிகள் முயற்சியினால் சிறுவர் மகளிர் பணிமனைக்கு முன்னர் பஸ்தரிப்பிடம் ஒன்றினை அமைக்க முயற்சி மேற்கொண்டு இடைநிறுத்தப்பட்ட விடத்தில் தொடர்ந்தும் அமைத்தல். ஏற்கனவே அமைக்கப்பட்ட தரிப்பிடம் பனிரெண்டு அடி நீலமாக அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமைகின்றபோது இனரீதியான தீர்வாக நோக்காது நியாயமான ஒன்றாக கருத வாய்ப்புள்ளது. அல்லது இரு தரப்பினரையும் குறித்த பிரதேசத்திலிருந்து இருநூறு மீற்றர்களுக்கப்பால் தரித்து நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பின் இருசாராரும் திருப்தியுற வாய்ப்பாக அமையும்.

பஸ்தரிப்பிட முறுகளும் முஸ்லீம் வர்த்தர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையும்

பஸ்தரிப்பிடம் தொடர்பான இத்தகைய பின்னணி காணப்படுகின்றபோதும் இதனை மையமாக வைத்து தமது சுயநல அரசியலை அனுபவிக்க சில விஷமிகள் செயற்படுவது கவலையளிக்கின்றது. குறித்த ஒரு குழுவே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சாதாரண தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன் சமூக வலைத்தளங்களினூடாக வதந்திகளையும் பரப்ப முயற்சித்தனர். கிரான் வாராந்த சந்தைக்கு சென்ற முஸ்லீம் அங்காடி வியாபாரிகளை முப்பது நிமிடத்துக்குள் வெளியேறுமாறு வடக்கில் புலிகள் முஸ்லிம்கள் மீது நடந்துகொண்டது போன்று கட்டளையிட்ட மறுகணம் ஓட்டமாவடியில் ஒரு தமிழரை கட்டிவைத்து அடித்துக்கொன்றுவிட்டார்கள் என்ற வதந்தியினையும் பரப்பியிருந்தனர் என்பதனை ஓட்டமாவடி சந்தியில் சோழக்குலை விற்பனை செய்துகொண்டிருந்த கண்ணகையின் மக்கள் வந்து கூறும் வரை தெரியாது. தனது தாய்க்கு ஏதும் நடந்ததோ என அலறிக்கொண்டு வந்தவர் தாய் அமைதியாக வியாபாரம் செய்வதனைப்பார்த்து அதிர்ந்து போனார். கிரான் பகுதியில் முஸ்லீம் இளைஞ்சர் ஒருவர் தமிழ் யுவதி ஒருவரை செல்போனால் புகைப்படம் எடுத்ததற்காக ஏற்பட்ட பிரச்சினையே முஸ்லீம் வர்த்தகர்கள் வெளியேற்றப்படக்காரணம் என கதைகள் உலாவியது என கவலையுடன் குறிப்பிடும் சர்மிளா வதந்திகள் மூலம் தமது ஈனச்செயலை நியாயப்படுத்த இனவாதிகள் முயற்சிக்கின்றனர் என குறிப்பிடுகின்றார்.
முன்னாள் போராளிகளாக இருந்து தற்போது அரசியல் கட்சிகளின் எடுபிடிகளாக பணிபுரியும் குழுவினரே இத்தகைய திட்டமிட்ட இனமுருகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது என்ற தகவலினை நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்திற்கு பின்னரான இன நல்லுறவு வலுப்பெறும் இக்காலகட்டத்தில் தமிழ் முஸ்லீம் சமூகம் பிழையான பாதைக்குள் செல்ல திணிக்கப்படும் முயற்சிக்கு புத்திஜீவிகள் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சரியான வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும்.unnamed (1) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here