கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!-வஃபா பாருக்

22050383_508449526173824_259766451861240374_n- ரி. தர்மேந்திரன் –
கிழக்கு தேசம் என்கிற கோட்பாட்டின் ஸ்தாபகரான வஃபா பாருக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளர் ஆவார். தமிழீழ தாயகம் போல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல, ஒரு நாடு இரு தேசம் போல வஃபா பாருக் கிழக்கு தேசம் என்கிற சிந்தனைக்கருவை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக முன்னெடுத்து வருகின்றார். முஸ்லிம்களின் சம கால அரசியல் குறித்து நாம் இவரை பேட்டி கண்ட போது….

- ரி. தர்மேந்திரன்:-
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கோரிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

வஃபா பாருக்:-
கல்முனை மக்களின் அச்சத்தைத் தீர்க்கக்கூடிய விதத்திலும், சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையை நிறைவேற்றக்கூடிய வகையிலும் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். அரசியல் தலைமைகள் அனைத்தும் சந்தர்ப்பவாத வாக்குறுதிகளை வழங்கி, மக்களை ஏமாற்றுகின்றன.

இந்நிலையில், சத்தியமும், சாத்தியமுமற்ற வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை சந்தர்ப்பவாத அரசியலுக்குட்படுத்தி, வாக்குகளைச் சேகரித்து, அதிகாரங்களை அமைத்துக் கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசியல் தலைமைகளை தூக்கியெறிய மக்கள் துணிந்து விட்டனர் என்பதையே சாய்ந்தமருது மக்களால் முடுக்கி விடப்பட்டுள்ள போராட்டங்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன என்பது அவதானத்துக்குரிய முக்கியமான ஒரு விடயமாகும்.

கல்முனை பட்டின சபையுடன் ஏனைய 04 சபைகளை இணைப்பதாக 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானிப் பிரகடனத்தை சட்ட வலுவற்றதும், செல்லுபடியற்றதென்றும் அறிவித்து, இரத்துச் செய்வதன் மூலம் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை மிக இலகுவாக வழங்கக்கூடிய முறை இருக்கத்தக்கதாக கட்சி சார்ந்த குறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்தில் அரசியல் தலைமைகள் இழுத்தடிப்புச் செய்து கொண்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

- ரி. தர்மேந்திரன்:-
கிழக்கு தேசம் என்கிற எண்ணக்கரு மூலமாக என்ன சொல்ல விழைகின்றீர்கள்?

வஃபா பாருக்:-
கிழக்கு மக்களின் சுய நிர்ணய ஆட்புலத்தின் குறியீட்டுப் பெயர் தான் கிழக்கு தேசம் என்பதாகும். கிழக்கு மாகாணம் வளங்களையும், வாய்ப்புக்களையும் கொண்ட தனியான தேசம் என்று இது பிரகடனப்படுத்துகின்றது. கிழக்கு மக்களின் சுய நிர்ண உரிமை உதாசீனப்படுத்தப்பட்டு, வடக்கோடு கிழக்கு இணைக்கப்படுவதில் கிழக்கு தேசம் முரண்படுகிறது.

ஆனால், இது ஒரு பிரிவினைக் கோஷமாக மாறுவதும், மாறாமலிருப்பதும் இரண்டு பெரும்பான்மைச் சமூகங்களினதும் அரசியல் தலைமைத்துவத்தின் கைகளில் தான் உள்ளது.

- ரி. தர்மேந்திரன்:-
அரசியலமைப்பைத் திருத்த மேற்கொள்ளப்படுகின்ற முன்னெடுப்புகள் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

வஃபா பாருக்:-
அரசியலமைப்புத் திருத்தத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும் கூட இது சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப்பகிர்வை இலக்காகக் கொண்ட ஒரு முனைப்பேயாகும். இதில் மறைமுகமாகவேனும் முஸ்லிம்களின் நலனையும், இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய ஒரு அதிகார அலகு உள்ளடக்கப்படாமல் விட்டு, வெறுமனே வடக்குடன் கிழக்கை இணைப்பது தமிழீழக்கோஷம் ஏற்படுத்திய வடுக்களைப்போல புதிய வடுக்களை கிழக்கு தேச கோஷம் ஏற்படுத்தக் காரணமாகி விடலாம்.

இந்நிலையேற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு புதிய அரசியலமைப்புக்குள்ளது. ஆகவே சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகள் கிழக்கு மக்களின் சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலான உத்தரவாதங்களைக் கொண்ட ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

- ரி. தர்மேந்திரன்:-
கரையோர மாவட்டக்கோரிக்கை முஸ்லிம்களுக்கான தீர்வு யோசனையாக இருக்கமாட்டாதா?

வஃபா பாருக்:-
தமிழ் மக்கள் அவர்களுடைய போராட்டத்தை தனி நாடு என்கிற உச்சபட்சக் கோரிக்கையை முன்வைத்து முன்னெடுத்ததன் விளைவாகவே குறைந்த பட்சமாக சமஷ்டிக்குச் சமமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஆனால், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கரையோர மாவட்டத்தைத் தீர்வாகக் கேட்கின்ற கேலி கூத்தைச் செய்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை கச்சேரிக்கு மேலதிகமாக மொழி ரீதியான நிர்வாக அலகொன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதையே கரையோர மாவட்டக்கோரிக்கை முன்வைக்கின்றதேயொழிய, அது முஸ்லிம்களுக்கான தீர்வாக ஒரு போதும் இருக்க முடியாது.

ஆகவே, கரையோர மாவட்டக்கோரிக்கை முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வாகப் பார்க்கப்படுவது பிழையாகும். முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வென்பது வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம்களினதும் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற பொறிமுறைகளையும், நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் அடையாளப்படுத்தக் கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு, நிதி, நிலம் போன்றவற்றின் மீதான பூரண அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட, சிற்றலகுகளின் பேரலகொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவையே கிழக்கு தேசம் பரிந்துரைக்கின்றது.

- ரி. தர்மேந்திரன்:-
நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது மாத்திரமே அரசியல் ரீதியாகத் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றீர்கள். ஏனைய தலைவர்களை ஒரு போதும் தாக்குவதில்லை. ஏன்?

வஃபா பாருக்:-
முஸ்லிம்களின் மக்கள் மயப்படுத்தப்பட்ட விடுதலை அமைப்பாக முஸ்லிம் காங்கிரஸை மாத்திரமே நான் காண்கின்றேன். தவிரவும் இதன் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் நேரடியாக ஏராளமான பங்களிப்புகளை வழங்கி இருக்கின்றேன்.

அப்படிப்பட்ட சமூக விடுதலைக்கான அமைப்பை விலை போட்டு, அதிகாரங்களுக்காக விற்று, சிதைத்துக் கொண்டிருக்கின்ற காரியத்தை ரவூப் ஹக்கீம் செய்து கொண்டிருப்பதால் தான் எனது கண்டனங்கள் அனைத்தும் அவர் மீது குவிந்துள்ளன. இது நியாயமானது தான். மற்றைய கட்சிகளை சமூக விடுதலைக்கானவையாக நான் நோக்கவில்லை. அதனால் அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

- ரி. தர்மேந்திரன்:-
கிழக்கு தேசம் வருகின்ற தேர்தல்களில் போட்டியிடுமா?

வஃபா பாருக்:-
கிழக்கு தேசக்கோட்பாட்டைப் புரிந்து உள்வாங்கியுள்ள சிந்தனையாளர்களை எங்கள் சார்பாக தேர்தல் களங்களில் இறக்கி மக்களின் அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்கின்ற முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>