சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையும்: ஐக்கிய தேசியக்கட்சி எதிர்கால அரசியலும்

கமுகம்மத் இக்பால்-சாய்ந்தமருது
சிங்கள அரசாங்கமானது முஸ்லிம் மக்களைப் பாதிக்கின்ற புதிய சட்டங்களை இயற்றுவதென்றால் காலதாமதமின்றி அவசரமாகச் சமர்ப்பிக்கின்றார்கள். அவ்வாறு உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் திருத்தச்சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையானது மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அது அம்மக்களின் தேவையுமாகும். அக்கோரிக்கையை நிறைவு செய்வதாகக் கூறி கடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மக்கள் முன்னிலையில் வாக்குறுதியும் வழங்கியிருந்தார்.

பலரும் வாக்குறுதிகள் வழங்கியிருந்தாலும், ஏனையவர்களுக்கும் பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்குமிடையில் நிறையவே வேறுபாடுகளுண்டு. ஏனெனில், பிரதமர் நினைத்தால் சிறுபான்மைக்கட்சித் தலைவர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை.

அதாவது இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு இதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு கட்டளையிட்டால் போதும். தேர்தல் வாக்குறுதியென்ற ரீதியில் உடனடியாக சபையைப் பிரகடனம் செய்ய முடியும்.

இங்கே கேள்வி என்னவென்றால், முஸ்லிம் மக்களைப் பாதிக்கின்ற சட்டங்களை இயற்றும் போதும், முஸ்லிம் பிரதேசங்களில் புத்தர் சிலை வைத்தல் மற்றும் காணிகளை சுவிகரித்த போதும் முஸ்லிம் தலைவர்களை அலட்சியம் செய்த பிரதமர் ரணில், சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விடயத்தில் மட்டும் முஸ்லிம் தலைவர்கள் சம்மதமின்றி வழங்க முடியாதென்று கூறுவது ஏன்?

நாட்டின் பிரதமரான ரணில் எந்த அடிப்படையில் மக்கள் முன் வாக்குறுதி வழங்கினார்? வாக்குறுதி வழங்கும் போது முஸ்லிம் தலைவர்களின் சம்மதம் பெறவில்லையா? அன்று சம்மதம் பெற்றிருந்தால், இப்போது சபை வழங்குவதற்கு என்ன தடை இருக்கின்றது?

அல்லது தனியான சபைக்கோரிக்கை வலுவடைகின்ற போது, அதனை வழங்காது விட்டால் இதற்காக வாக்குறுதிகள் வழங்கிய முஸ்லிம் தலைவர்கள் மீது அம்மக்களுக்கு வெறுப்பு அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்ததன் பின்பு தனது ஐக்கிய தேசியக்கட்சியை அப்பிரதேசத்தில் காலூன்றச்செய்ய முடியுமென்ற ரணிலின் எதிர்பார்ப்பா? என்ற வலுவான சந்தேகங்கள் எழுகின்றது.

ஏனெனில், அண்மைக்காலமாக வட கிழக்கு மாகாணங்களின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியினை வளர்த்தெடுப்பதில் ரணிலின் கவனம் அதிகமாகவுள்ளது. இதற்காக பிரதேச அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டும், அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டும் வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியை வட கிழக்கு மாகாணங்களில் வளர்ப்பதென்றால், அங்கிருக்கின்ற சிறுபான்மைக்கட்சித் தலைவர்களை அம்மக்கள் வெறுக்க வேண்டும். இல்லாவிட்டால், தங்களது கட்சியை அங்கு காலூன்ற முடியாதென்பது ரணிலுக்கு நன்கு தெரியும்.

நாட்டில் யுத்தம் ஆரம்பித்த போது, தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டால் நாட்டுக்கு ஆபத்தென்பதனை உணர்ந்ததனால் இரு சமூகத்தையும் பிரிப்பதிலும், புலிகளை அழிப்பதற்காக சமாதானம் என்ற போர்வையில் அவ்வியக்கத்திலிருந்து கருணாவைப் பிரிப்பதிலும் வெற்றி கண்ட ஐக்கிய தேசியக்கட்சியும், ரணில் விக்ரமசிங்கவும் இன்று கிழக்கில் ஐக்கிய தேசியக்கட்சியை வளர்ப்பதற்காக முஸ்லிம்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கமாட்டார் என்று எவ்வாறு கூற முடியுமென்பது தான் விடயம் அறிந்தவர்களின் கேள்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>