அக்கரைக்கு வெளியிலும் சிந்திப்பாரா அதாவுல்லா?

0
642

atha1ஷிபான் BM

இலங்கை அரசியல் அதிரடியான சில மாற்றங்களைத் தொடர்ந்தேர்ச்சியாகச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் அரசியல் நாள் ஒரு பரிமாணமெடுக்கிறது. எவ்வளவு தான் முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கை பூர்வமாக அரசியல் செய்யினும் ஆதவன் பாடலை மேவ முடியாமல் தோற்றுப்போனவர்களே அக்கரையூரின் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும், காத்தான்குடியின் இன்றைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவும் என்பதே வரலாற்று கூறும் உண்மை.

மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபிற்குப் பின்னரான 17 வருட முஸ்லிம் அரசியலைக் கேலிக்கூத்தாக மாற்றிய தலைமைத்துவத்தினை ஓரணியில் நின்று ஓட விரட்டும் வியூகமே முஸ்லிம் கூட்டமைப்பு. முஸ்லிம் கூட்டமைப்பின் சிம்ம சொர்ப்பனமாவும் கிழக்கு அரசியலைக் கொண்டு நடத்தக்கூடிய கூட்டின் தலைமையாகவும் எதிர்பார்க்கப்பட்டவர் அதாவுல்லா என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், இறைவன் சிலருக்கு சிலவற்றை மறைத்து வைப்பது போன்று, அதாவுல்லாவின் ஞானக்கண்ணும் திரையிட்டு மறைந்து கிடக்கிறதோ தெரியவில்லை. அவருடைய அண்மைக்கால உரைகளும் செயற்பாடுகளும் இவற்றிற்குச் சான்றாக மாறி வருவதனை நாம் கண்டு வருகின்றோம். தனி அக்கரைப்பற்றையும் அதன் அயல் கிராமங்களையும் மையமாக வைத்து அதாவுல்லா தனது அரசியலை தப்புக்கணக்குப்போடுகிறார்.

ஆனால், அதாவுல்லாவுக்கு அரசியல் ரீதியாக அனுதாப அலைகள் கிண்ணியா தொட்டு ஏறாவூர் வரை வந்து அக்கரைப்பற்று எல்லை வரை இல்லாமல் இல்லை. இருப்பினும், அவை வாக்குப்பெட்டிகளை நிறைக்கக்கூடியளவில் இல்லையென்பதனை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும். சில கூலிகள் அவருடைய அன்பைப்பெறுவதற்காக அவரை வாழை மரத்தில் ஏற்றி நடுவால் தறித்து விடுவதற்கான முயற்சியை அவர் எந்தக்கோணத்தில் நோக்குகிறார் என்பது புரியவில்லை.

இருப்பினும், இன்று அக்கரைப்பற்றின்  அரசியலில் பிர்அவ்னின் கோட்டையில் வளர்ந்த மூஸா போன்று நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் பிரமுகர்களின் தாக்கம் தலையிடியாக மாறி வரும் நிலையில், அவர்கள் கூட்டமைப்பாக மாறி, அதாவுல்லா தனித்தால் வரக்கூடிய விபரீதமாக, அக்கரைப்பற்றின் மேயர் வேட்பாளராக அதாவுல்லாவே மாறக்கூடிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். சில வேளை தோற்றும் போகலாம் யாரறிவார்? ஆட்சியதிகாரத்தை வழங்கும் வல்லமை இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே உரியது.

இந்தத்தோரணையில் அக்கரையூருக்கு வெளியில் பொத்துவில், நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை தொடர்பிலும் தமக்கு சென்ற பாராளுமன்றத்தேர்தலில் விழுந்த விருப்புவாக்கு தொடர்பிலும் அதாவுல்லா கவனஞ்செலுத்த வேண்டும். இந்த ஊர்களில் தமக்கு விழுந்த விருப்பு வாக்குகளை குறைந்தபட்சம் பத்து சதவீதமாகவாவது உயர்த்தினாலேயே தமது கட்சி எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெட்டுப்புள்ளி அந்தஸ்துக்காகவாவது தமது நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.

தாம் அதிகாரத்திலிருந்த காலத்தில் பிடிக்க முடியாது போன கோட்டைகளை அதிகாரம் இழந்து நிற்கின்ற பொழுதினில் பிடிக்க பகல்கனவு காணலாம். தம்மை நோக்கி தற்போது வந்திருக்கின்ற எழுச்சியென்பது ஒரு அனுதாப அலையன்றி வேறொன்றில்லை என்பதனை சங்கடத்துடன் கூறுகின்றோம். இன்னும் பழைய சித்தாந்தங்களான தலைவர் அஷ்ரபின் வசியத்தையே புறந்தள்ளி வாக்களித்த மக்கள் மத்தியில் இன்னும் அதே சித்தாந்தம் எடுபடாதென்பதனையும் அதாவுல்லா விளங்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, அரசியலில் காலம் விட்டிருக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள அதாவுல்லா முன்வரவேண்டும். கிழக்கு வெழுக்க விடை காண தனது பரியைக் கூட்டாகக் கட்ட வேண்டும்.

கிழக்கு முஸ்லிம் பேரவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here