பிரதேசவாதத்தால் மலினப்பட்டு வரும் முஸ்லிம் சமூகம்: தமிழர் வரலாற்றிலிருந்து படிப்பினை பெறுமா?

0
254

13292867_1718742795062314_960966835_nமுகம்மத் இக்பால்-சாய்ந்தமருது
ஒரு சிறுபான்மைச்சமூகம் பலமான நிலையில் ஒற்றுமையாக இருந்தால் அது ஆட்சியாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தும். இதனால் சிறுபான்மைச் சமூகத்தினுள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரதேசவாதத்தினை விதைப்பது ஆட்சியாளர்களின் தந்திரமாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் வெற்றியடைந்து வடகிழக்கு மாகாணங்களின் பெரும்பான்மையான பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகள் ஆட்சி செய்த போது, அவர்களை வெற்றி கொள்வதற்காக இலங்கை இராணுவத்தினர்கள் மட்டுமல்ல, இந்திய இராணுவத்தினர்கள் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தது.

அன்று புலிகள் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியதற்கு அவர்களது இராணுவ பலம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவும், ஒற்றுமையும் ஒரு காரணமாகும்.

இறுதியில் புலிகளைத் தோற்கடிக்கும் நோக்கில் அவ்வியக்கத்தின் கிழக்கு தளபதியாக இருந்த கருணா அம்மான் மூலமாக கிழக்கு என்ற பிரதேசவாதம் விதைக்கப்பட்டு புலிகளை அழிப்பதற்குரிய முதற்கட்ட வேலைகள் ஆட்சியாளர்களினால் அரங்கேற்றப்பட்டது.

இதன் காரணமாக, கருணா அம்மான் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியதுடன், சுமார் ஆறாயிரம் போராளிகளை அவ்வியக்கத்திலிருந்து வெளியேற்றி வீட்டுக்கு அனுப்பினார். இது தான் புலிகளை அழிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் அடைந்த முதற்கட்ட பாரிய வெற்றியாகும்.

இதன் மூலம் ஒற்றுமையாகச் செயற்பட்ட தமிழ் சமூகத்தின் மத்தியில் வடக்கு தமிழர் என்றும் கிழக்கு தமிழர் என்றும், யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான் என்றெல்லாம் பிரதேசவாதம் பலாத்காரமாகத் திணிக்கப்பட்டது.

தமிழ் இளைஞர்களின் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பினாலும் பலமான சக்தியாகக் கட்டியமைக்கப்பட்ட புலிகள் இயக்கத்திலிருந்து ஆறாயிரம் போராளிகளை இழப்பதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தமிழீழம் என்ற தனி நாட்டினைப் பிரகடனப்படுத்துவதற்குரிய அனைத்து வேலைகளும் கட்டம் கட்டமாக மேற்கொண்ட சூழ்நிலையில் தான் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.

புலிகளின் அழிவு இந்நாட்டிலுள்ள சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் தமிழர்களுக்கு இது பாரியதொரு பேரிழப்பாகும்.

அது போலவே, இன்று முஸ்லிம்கள் ஓரளவு ஒற்றுமைப்பட்டு அரசியல் ரீதியில் சக்தியுள்ளவர்களாக இருக்கின்ற நிலையில், நாங்களும் பிரதேசவாதம் என்ற கொடிய நோயினால் பாதிக்கப்படுவோமானால், இறுதியில் நஷ்டமடைவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமாகும்.

இன்று முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாதம் கடுமையாக விதைக்கப்பட்டு வருகின்றது. இது எங்கிருந்து ஆரம்பிக்கின்றதென்று அறிய முடியவில்லை. இது தொடர்ந்து நீடித்தால் எதிர்காலங்களில் இருக்கின்ற சொற்ப உரிமைகளையும் இழந்து அரசியல் சக்தியினை இழக்கின்ற நிலைமை எமது சமூகத்துக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதாவது, 1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது முஸ்லிம்களின் அரசியல் நிலைமை எவ்வாறு இருந்ததோ, அதே நிலைமை எதிர்காலங்களில் ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலைமையேற்பட்டால், அதனால் மகிழ்ச்சியடைவது பேரினவாத சமூகமும், அதன் முஸ்லிம் தரகர்களுமாகும். ஆனால், முஸ்லிம் சமூகம் அரசியல் அநாதைகளாக மாறுமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here