போர்க்குற்றத்துக்கு தமிழர்கள் நீதி கேட்கக்கூடாதென்ற ஹக்கீமுடன் தமிழரசு கட்சி நட்பு பேணுவதன் அர்த்தமென்ன!-ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர் கேள்வி

0
289

samரி.தர்மேந்திரன்

தமிழ் மக்களை குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழரசுக்கட்சி அடகு வைக்கின்றதென்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் இக்கட்சியின் அம்பாறை மாவட்ட மேலதிக அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன் (ஹரன்) தெரிவித்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் வலுப்படுத்துவது குறித்தும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்தும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரை இவரின் கல்முனை இல்லத்தில் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையாவும் கலந்து கொண்டார்.

இங்கு சிவசுந்தரம் புண்ணியநாதன் (ஹரன்) தொடர்ந்து பேசியவை வருமாறு:-

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அறிய கொடுக்காமலும், இக்கட்சிகளின் அனுமதியைப் பெறாமலுமே கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழரசுக்கட்சி தாரை வார்த்துக் கொடுத்தது.

கிழக்குக்கு முஸ்லிம் முதலமைச்சரை வழங்கியது போதாதென்று வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மதிக்கின்ற பட்சத்தில் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை வழங்கத் தயாராகவுள்ளனர் என்று தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் எதேச்சையாக அறிவித்துள்ளனர்.

சம்பந்தன் ஐயா, சுமந்திரன் எம். பி போன்றோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மூடிய அறைகளுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்துவது ஏற்க முடியாதவொன்றாகும். ஏனென்றால், இப்பேச்சுவார்த்தைகளில் பேசப்படுகின்ற விடயங்கள், எட்டப்படுகின்ற முடிவுகள், இணக்கம் காணப்படுகின்ற விவகாரங்கள் ஆகியன குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும்கூட எதுவும் தெரியாதென்பதே உண்மையான நிலைமையாகும்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளை தமிழரசுக்கட்சி அழைத்து செல்வதுமில்லை. ஆனால், இவர்கள் எதேச்சையாக தீர்மானங்களை எடுத்து விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரால் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகின்ற கபடத்தனத்தையும் செய்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையிலுள்ள தமிழ் பிரதேச செயலகம் முஸ்லிம்களின் எதிர்ப்புக்காரணமாக தரமுயர்த்தப்படாமல் கடந்த மூன்று தசாப்த காலமாக மழுங்கிக் கிடக்கின்றது. இவ்விடயம் சம்பந்தன் ஐயாவின் கவனத்துக்கு அண்மையில் கொண்டு செல்லப்பட்ட போது, இவ்வாறு ஒரு பிரச்சினை இருக்கின்றதா? என்று உண்மையில் ஒன்றும் அறியாதவராகவே கேட்டார். இவர் எவ்வாறு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்க்கப்போகின்றார்? என்று வினவுகின்றேன்.

சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தந்த சுமந்திரன் முஸ்லிம்களிடம் தமிழர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று பிரகடனப்படுத்தியிருந்தார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறு தமிழர்களை விற்றார்.

அண்ணன் சிவசிதம்பரத்தின் நினைவுப்பேருரை ஆற்ற இவர்களால் வடமராட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவூப் ஹக்கீம் யுத்தக்குற்றங்களுக்கு தமிழர்கள் நீதி கோரக்கூடாது. அது தேசிய நல்லிணக்கத்தைச் சிதைத்து விடுமென்பதாக அங்கு பேசியிருந்தார்.

இவ்விதம் பேசிய ரவூப் ஹக்கீமுடன் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதும், இவருடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபடுவதும் இவர்களும் ரவூப் ஹக்கீமுடைய நிலைப்பாட்டிலுள்ளனர் என்று தான் சிந்திக்க வைக்கின்றது. இதை நிரூபிப்பதாகவே சுமந்திரன் எம். பி அண்மையில் ஜெனிவாவுக்குச் சென்ற போது, இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று சொல்வதற்கு போதுமான ஆதாரமில்லையென்று சொல்லி இருக்கின்றார். தீர்வு முயற்சியை இழுத்தடிப்புச் செய்கின்ற இலங்கை அரசாங்கத்துக்கு ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரு வருட அவகாசம் காலம் பெற்று கொடுத்துள்ளார்.

ஈ. பி. ஆர். எல். எப் கட்சிக்கு நீண்ட காலப்போராட்ட வரலாறும், ஜனநாயக அரசியல் நீரோட்ட வரலாறுமுள்ளன. 1987 ஆம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் ஆட்சியமைத்து நடத்தியவர்கள் நாங்கள். வேறு கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே ஆட்சியமைத்திருந்தோம்.

எமது காலத்தில் அபிவிருத்திகள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கிக் காட்டினோம். தமிழர் பிரதேசங்களின் எல்லைகளை நிர்ணயித்தோம். ஆனால், கடந்த கிழக்கு மாகாண அரசாங்கத்தில் தமிழரசு கட்சியின் இரு அமைச்சர்களும் எதையுமே தமிழ் மக்களுக்குச் செய்து கொடுத்தார்கள் என்று சொல்வதற்கில்லை. வடக்கிலும் இதே நிலை தான் தொடர்கின்றது.

பழம் பழுத்தால் வௌவால் வரும் என்கிற தமிழரசு கட்சியின் பசப்பு வார்த்தைகளை எமது தமிழ் மக்கள் இனியும் நம்பமாட்டார்கள். தமிழ் தேசிய அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றே அவர்கள் மனதார விரும்புகின்றார்கள். தமிழ் மக்கள் விரும்புகின்ற இம்மாற்றத்தை ஏற்றே நாம் தமிழரசு கட்சியிலிருந்து விலகி நிற்கின்றோம். அத்தோடு, தமிழ் மக்கள் விரும்புகின்ற புதிய தலைமையை உருவாக்கவே பாடுபடுகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here