கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ளவர்கள் விழிப்படைவார்களா…?

0
218

Letterஎம்.ரீ.ஹைதர் அலி

இவ்வருடம் 2017இல் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 170 மற்றும் 170க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வுச்செயலமர்வு மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தினால் நடைபெறவுள்ளது.

குறித்த செயலமர்வானது கோறளைப்பற்று மேற்கு மற்றும் ஏறாவூர் ஆகிய கோட்டங்களுக்கு 2017.11.11ஆந்திகதி எறாவூர் அல்-முனீரா பாலிகா மகா வித்தியாலயத்திலும், காத்தான்குடி கோட்டத்திற்குரிய செயலமர்வானது  2017.11.15ஆந்திகதி காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்திலும் நடைபெறுவதற்குரிய  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதும், இம்முறை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் 134 மாணவர்களும், காத்தான்குடி கோட்டத்தில் 110 மாணவர்களும் மற்றும் ஏறாவூர் கோட்டத்தில் 46 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்தனர்.

இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்ட காத்தான்குடி கோட்டத்திற்கான செயலமர்வினை தனியாக காத்தான்குடியில் நடாத்த இயலுமாக இருந்தால், முதலாமிடத்தினை பெற்றுக்கொண்ட கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குரிய செயலமர்வினை ஏன் ஓட்டமாவடியில் நடாத்தாமல் மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்ட ஏறாவூர் கோட்டத்தினை இணைத்து ஏறாவூரில் நடாத்த வேண்டும்? இதற்கான காரணமென்ன…?

அதனை ஏறாவூரில் நடாத்துவதற்குப் பதிலாக மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்ட ஏறாவூர் கோட்டத்தினை இணைத்து கோறளைப்பற்று மேற்கு கோட்டமான ஓட்டமாவடியில் நடாத்தலாம் அல்லவா? அவ்வாறு நடாத்தாமைக்கான காரணமென்ன?

இது விடயமாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் முதலாமிடத்தினைப்பெற்றுக் கொண்ட பிரதேசத்திலுள்ள பிரதிக் கல்விப்பணிப்பாளர், உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரும், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர் சங்கம் என்பன கவனம் செலுத்தவில்லை.

இது பிரதேசவாதத்திற்கப்பால் முதலாமிடத்தினையும், 170 தொடக்கம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அதிகளவான மாணவர்கள் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் இருப்பதனால் தான் உரிமையாகக் கேட்கின்றோம். மூன்றாமிடத்தினையும் 170 தொடக்கம் அதிகூடிய புள்ளிகளை குறைந்தளவில் பெற்றுக்கொண்ட ஏறாவூர் கோட்டத்திற்குரிய மாணவர்களை அழைத்து ஓட்டமாவடியில் இச்செயலமர்வினை நடாத்துவதால் அவர்கள் வருவதற்குரிய எதுவிதமான சிரமங்களும் இருக்காது.

ஆனால், இச்சிரமம் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திலுள்ள மாணவர்களை ஏறாவூருக்கு அழைத்து வருவதால்  காணப்படும். எனவே, அதிகளவான மாணவர்களின் தொகையைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் இச்செயலமர்வினை நடாத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம். Letter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here