வீதியில் காவு கொள்ளப்படும் உயிர்கள்: பொறுப்பாளிகள் யார்?- எம்.எம்.ஏ.ஸமட்

indexஒவ்வொரு ஆத்தமாவும் மரணிப்பது நிச்சம். அம்மரணம் எக்கோணத்தில்  தழுவிக்கொள்ளும் என்பதை யாருமறியார். இருப்பினும், போராட்டமிக்க வாழ்க்கைப் பயணத்தை நகர்த்திச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது மரணமானது நல்லசகுணத்தில் வர வேண்டுமென்ற அவாவுடனேவுள்ளனர்.

அவ்வாறான அவாவோடு வாழும் போது, மரணமானது எதிர்பார்க்காத  விதத்தில், கவலையளிக்கும் வகையில் வந்தடைவது வேதனையளிக்கக் கூடியது. சமகாலத்தில் கொலை, தற்கொலை, நீரில் மூழ்குதல் என மனித உயிர்கள் மாண்டு கொண்டிருக்கும் நிலையில் கோர விபத்துகள் மூலம் உயிர்கள் பரிதாபகரமாகக் காவு கொள்ளப்படுதை ஜீரணிக்க முடியாது.

இப்பரிதாபகர மரணங்களுக்கான பொறுப்பாளிகள் யார் என்ற கேள்விக்கு பலரும் பதில சொல்ல வேண்டியுள்ளது. இதில், சாரதிகள் மற்றுமன்றி, பயணிகளும் சட்டத்தை அமுல்படுத்துகின்ற அதிகாரிகளும் பொறுப்பாளிகளாவர். ஏனெனில், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களின் இலகுத்தன்மையும் தாங்கள் பயணிக்கும் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளின் வாகனஞ்செலுத்தும் விதம் தொடர்பில் பயணிகளின் அக்கறையற்ற தன்மையும் காரணங்களாகவுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனெனில், சாரதிகள் வீதி ஒழுங்கு முறை மற்றும் சட்டத்தை மதிக்காது வாகனத்தை வேகமாகச் செலுத்தினாலும் அவ்வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் எவ்வித எதிர்ப்புக்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்காது மௌனித்திருப்பதைக் காண முடிகிறது. பயணிகளின் இத்தகைய அக்கறையற்ற மனபாங்கும் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதானல் ஏற்படுகின்ற விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறதென்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

சொல்வதைச் சொல்லுங்கள். செய்வதைச் செய்வோம் என்ற கோட்பாட்டில் பலர் நடக்க முற்படுவதனால் தான் விளைவுகளை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். இவ்விளைவுகளுக்கு அவர்கள் மாத்திரமின்றி, பலரும் பலியாக்கப்படுகிறார்கள்.

குற்றங்களையும் குற்றச்செயல்களையும் தடுப்பதற்கும், நோய்களையும் நோய்களை ஏற்படுத்தும் ஏதுக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், விபத்துக்களையும், அவ்விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எனப்பல்வேறு சட்ட ஏற்பாடுகளும்  திட்டங்களும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அவை வெற்றி பெறுவது அல்லது இலக்கை எட்டுவது என்பது நமது இலங்கையைப் பொறுத்தவரை முயற்கொம்பு நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

குற்றச்செயல்களும், டெங்கு போன்ற நோய்களும், வீதி விபத்துக்களும் தீர்ந்தபாடில்லை. அதனால் ஆபத்துக்களும் உயிர் இறப்புக்களும் தொடர்ந்த வண்ணம் தான் காணப்படுகின்றன. குறிப்பாக, விபத்துக்களைத் தடுப்பதற்கான சட்டங்களும்  விழிப்புணர்வுத்திட்டங்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், அவை எதிர்பார்க்குமளவுக்கு வெற்றியளிக்கவில்லை. சட்டங்களும், விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களும் சக்திமிக்கதாக்கப்படவில்லை  என்பதை நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் வீதிச் சட்டங்களை மீறுவோருக்கெதிரான தண்டத்தொகை வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை புத்தளம் முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தானது, சாரதியின் பொறுப்பற்ற மற்றும் அக்கறையற்ற நிலையைக் வெளிப்படுத்தியுள்ளதுடன், 7 உயிர்களைப் பலியெடுக்கச் செய்துள்ளதுடன், 40க்கும் மேற்பட்டோரை படுகாயப்படுத்தியுள்ளது. இவ்வாறு பெறுமதிமிக்க மனித வளம் தினமும் இடம்பெறும் விபத்துக்களினால்  பறியெடுக்கப்படுவது தடுக்கப்படுவதும் தவிர்க்கப்படுவதும் அவசியமாகும்.

எதிர்காலக்கனவுகள் பலவற்றுடன் நிகழ்காலத்தை நகர்த்திச்செல்லும் பாதசாரிகளும், வாகனங்களில் பயணிப்போரும், வாகன சாரதிகளும் எனப்பலதரப்பினர் அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துக்களுக்குள்ளாகி காயப்படுவதையும், அங்க உறுப்புக்களை இழந்து அங்கவீனமாகுவதையும், மீளப்பெற முடியாத இன்னுயிர்களையும் இழப்பதையும் தினமும் காணும் நிகழ்வுகளாக மாறி விட்டன.

விபத்துக்களின்  விளைவுகள்
விபத்து என்பது விரும்பத்தகாத, தேவையற்ற, எதிர்பாராத நிகழ்வாகும். வீதி விபத்துக்கள் வீதிகளில் வாகனங்கள் வாகனங்களுடன் போதுவதாலும், வாகனங்கள் மனிதர்களுடன் மோதுவதாலும் ஏற்படுகிறது.

வீதி விபத்துக்களில் அதிகம் தொடர்புபட்டவை துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டி, மோட்டார் கார், வான், லொரி பஸ்கள் அவற்றுடன் பாதசாரிகளையும் குறிப்பிடலாம்.

இவ்வாறு கடந்த காலங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பான பொலிஸ் புள்ளி விபரங்களின் பிரகாரம், 2014ல் 2,440 பேரும் 2015ல் 2,816 பேரும் 2016ல் 3,300 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவரின் தகவல்களின் பிரகாரம், இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 1,789 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கடந்த வருடத்தில் 39,086 விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இவ்வருடத்தில் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 18,980 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளதிலிருந்து எவ்விதச்சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுவதையும், உயிர்கள் இழக்கப்படுவதையும் தவிர்க்க முடியாதுள்ளமை குறித்து அதிக அக்கறை செலுத்தப்படுவதுடன், பொறுப்பாளிகளும் கண்ணடறியப்படுவதும் அவர்களுக்கான தண்டனைகளும் கூர்மையாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

தினமும் இடம்பெறும் வீதி விபத்துக்களினாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள், அங்கவீனங்கள் மற்றும் காயங்கள் என்பவற்றினால் பாரிய சமூக பொருளாதா இழப்பு ஏற்படுகின்றன.

மொறட்டுவ பல்கலைக்கழத்தின் ஆய்வுத்தகவல்களின் பிரகாரம், ஏறக்குறைய 25 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் இவ்விழப்பைத் தவிர்ப்பதற்கு வீதிப்பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை செலுத்தப்படுவதுடன், பொறுத்தமான வீதிப் பாதுகாப்புத் திட்டப்பொறிமுறைகளும் அமுல்படுத்தப்படுவது அவசியமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு 10 நிமிடத்திலும் வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனால் இரண்டு அல்லது மூன்று பேர் காயத்துக்குள்ளாகுவதாகவும், ஒவ்வொரு மூன்றரை மணித்தியாலத்திலும் ஒருவர் வீதி விபத்தினால் உயிரிழக்கின்றார் என்ற தகவல்கள் இந்த வீதி விபத்துக்களிலிருந்து மனித வளம் காவு கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கான வினைத்திறன்மிக்க பொறிமுறைகள் அமுல்படுத்தப்படுவது அவசியமென்பதை மேலும் வலியுறுத்துகிறது.

மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை விடவும்  திடீர் விபத்துக்களினால் பலியானவர்களின் தொகை அதிகமென சுகாதாரத்திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால கடந்த வருடம் தெரிவித்திருந்தார். வருடத்திற்கு 37,000 பேர் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதனால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களின் விபரங்களை அதானிக்கின்ற போது, இலங்கையின் மனித வளம் ஆபத்தை எதிர்நோக்கி வருவதை எடுத்துக்காட்டுகிறது. வருடந்தோறும் விபத்துக்களினால் 600 சிறார்கள் இறப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு புள்ளி விபரங்களும் தரவுகளும் வீதி விபத்துக்களின்  விளைவுகளைக் குறிப்பிட்டாலும் இவ்விபத்துக்களுக்கான காரணங்களில் அதிக பங்காளிகளாக இருப்பவர்கள் சாரதிகளாகும். நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தை வீதி ஒழுங்கைப் பேணாமை, கவனயீனம், மது போதை, அசவரமாக அதிக வேகத்துடன் வாகனஞ்செலுத்துதுதல் என்பன பிரதானமாகவுள்ளன.

அத்துடன், பொதுவாக பொதுப்போக்குவரத்தில் நெடுந்தூரப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் வாகனச்சாரதிகள் வாகனங்ளைச் செலுத்தும் விதம் தொடர்பில்  பயணிகள்  தமத பயணத்தின் பாதுகாப்புக் குறித்து  சாரதிகளை அறிவுறுத்தாது, வேகக்கட்டுப்பாட்டை குறைக்கச்சொல்லாது, மௌனிகளாக இருப்பதும் பிரிதொரு காரணமாகவும் கருத வேண்டியுள்ளது.

ஒரு சில நெடுந்தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சாரதிகள் அவர்களுக்கு ஒத்தாசை வழங்கும் நடத்துனர்கள் சின்னத்திரைப்படங்களை காண்பிப்பதனாலும், பாடல்ளை ஒலிபரப்புவதனாலும் இசையின் இரசனையிலும் சித்திரைக் காட்சிகளிலும் மனதைக் கொள்ளை கொடுக்கும் பயணிகள் தங்களது உயிர்களைக் கொலைக்களத்திற்கு இட்டுச் செல்வதற்காக அதிக வேகத்துடன் வாகனஞ்செலுத்தப்படுவதை அவதானிப்பதில்லையென்பதையும் பதிவிடப்பட வேண்டிய விடயமாகும்.

இவை தவிர, சாரதிகளிடையே காணப்படும் வீதி ஒழுங்கு தொடர்பான அறிவின்மை, வீதியின் தன்மை, நிலைமையை அறியாமை, காலநிலையின் தன்மையினைத் தெரிந்து கொள்ளாமை, வாகனத்தின் சாதக, பாதக நிலையைக் கண்டு கொள்ளாமை மற்றும் அவற்றைப் பரீட்சிக்காமை, மனித தவறுகள், மனப்போரட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் வானஞ்செலுத்துதல், வீதியில் நடத்தல், வீதிப்புனரமைப்பின் நிலையை தெரிந்து கொள்ளாமை, திட்டமிடப்படாத பிரயாணத்தை மேற்கொள்ளல், சாரதிகள், குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தைச் செலுத்துதல், வானஞ்செலுத்துவதற்கான திறன் மற்றும் முறையான பயிற்சியின்றி வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தின் வலுவைப் பரிசோதிக்காமை, பாதுகாப்பு ஆசனப்பட்டியை அணியாமை, வீதிச்சமிஞ்சைகளை கவனத்திற்கொள்ளாமை, பாதசாரிகளையும் குடிமக்களையும் கவனத்திற்கொள்ளாமை, வீதிச்சட்டங்களை மதிக்காது வாகனங்களைச் செலுத்துதல், தூரங்களைக் கவனத்ததிற்கொள்ளமை, சட்ட நடவடிக்கைகளிலுள்ள வழுக்கள், பாதசாரிகள் வீதி ஒழுங்குகளைச் சரியாகப்பேணி வீதிகளில் செல்லாமை போன்ற பல்வேறு காரணங்களாலும் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன.

வினைத்திறன்மிக்க விழிப்புணர்வும் பொறுப்புணர்வும்
சனத்தொகையின் பெருக்கத்திற்கேற்ப தேவைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மனித வாழ்வில் போக்குவரத்து  இன்றியமையாததொன்று. அப்போக்குவரத்து இன்று அதிக முக்கியமானதாகவும் விரைவானதாகவும் மாறிக்கொண்டு வருகிறது.

குறுகிய நேரத்துக்குள் குறித்த இடத்தை அடைந்து கொள்வதற்கான எத்தகைய மார்க்கங்கள் இருக்கிறதோ, அவற்றையே இன்று ஒவ்வொரு வாகனச்சாரதியும் வாகன உரிமையாளர்களும் விரும்புகின்றனர்.

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் வீதி அபிவிருத்தி முக்கியமானதாகும். பல நீண்ட தூரப்பிரதேசங்களுக்கான வீதிக்கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவற்றில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை முக்கியமானதாகும்.

இதனால் சாதாரண பாதைகளினூடாகப் பயணிப்பதிலும் பார்க்க நேரச்சுருக்கத்துடன் வேகமாகப் பயணிப்பதையே பலர் விரும்புவதைக் காண்கின்றோம். இவ்வாறு அவசரத்தின் அவதானமின்மையினால் இவ்வீதிகளினூடாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக, பாதைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன. முன்னொரு காலத்தில் குறிப்பாக, கிராமங்களில் மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டிகளுமே போக்குவரத்துக்கான வாகனங்களாக வீடுகளில் இருந்தன. ஆனால், இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டர் சைக்கில்கள் இருப்பதைக்காண முடிகிறது. கிராமங்களில் இத்தகைய நிலையென்றால், நகர்ப்புறங்களில் எவ்வாறு இருக்குமென்பதைச்  சுட்டிக்காட்ட வேண்டியதில்லை.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில். நாளாந்தம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாகப்பதிவு செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பானது, போக்குவரத்துத்தேவையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், போக்குவரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்பூட்டல் நடவடிக்கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்டம் வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அதுமாத்திரமின்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றைச் சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா? என்பது கேள்விக் குறியாகும்.

வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்ற கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக அக்காரணங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டும், சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையினுடனான விழிப்பூணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை  அதிகரிக்கப்படுவது அவசியமாகவுள்ளது.

ஒவ்வொரு காரணம் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட புரிதல்மிக்கதான விழிப்புணர்வூட்டல்  நடவடிக்கைகள்  கிராமப் புறங்களிலும் நகரப்புறங்களிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானாவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும்.

இந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது, தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அப்போது தான், நாட்டினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் மனித வளத்தைப்பாதுகாக்க முடியும்.
அந்தவகையில், வீதிப் போக்குவரத்துப்பாதுகாப்பு தொடர்பில் வீதிப்போக்குவரத்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையளர்களும் மதிப்பளிப்பதோடு, அவற்றைத்தவறாது பின்பற்றுவதோடு, பயணங்களின் போது அவதானமும் கவனமும் அவசியமாகவுள்ளது. கவனமாகப் பயணங்களை மேற்கொள்ளாததனால் தான் கோர விபத்துக்களைச்சந்திக்க நேரிடுகிறது.

வீதிப்பாதுகாப்புத் தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும்.

சமூக, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களுக்குப் பொறுப்பானவர்கள் சாரதிகள் மாத்திரமின்றி, பயணிகளுமாவர் என்பதை மறுக்க முடியாது. அத்துடன், முறை தவறி வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் மீது சட்டத்தை பிரயோகிப்பவர்கள் சட்டத்தைக்கூர்மைப்படுத்துவதற்குப் பதிலாக இழகுபடுத்துவதும்  மற்றுமொரு காரணமெனவும் கூறலாம்.

சாரதிகள் தவறான முறையில், பொறுப்பற்ற விதத்தில் வேகமாகவும் கவனயீனமாகவும் வாகனஞ்செலுத்துவதைத் தட்டிக்கேட்காது சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த முயற்சிக்காமை என்பன தினமும் ஏற்படும் இவ்வாறான கோர விபத்துக்களைத் தவிர்க்க முடியாதுள்ளது.

இருப்பினும், கவனமாகப் பயணிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற வழிப்புணர்வுத் திட்டங்களை பொது மக்கள் உட்பட்ட வாகன உரிமையாளர்கள், பொதுப்போக்குவரத்து வாகனங்களின் சாராதிகள், நடத்துனர்கள் ஆகியோரை முறையாகப் பின்பற்றுவதனூடகவும், சட்டத்தைக் கூர்மைப்படுத்துவதன் மூலம், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்கள் சட்டத்தை இலகுபடுத்தாதிருப்பதன் மூலமும் வீதி விபத்துக்களால் அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுவதையும், அதனால் ஏற்படும் குடும்ப, சமூக, பொருளாதாரப் பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியுமென்பதே நிதர்சனமாகும்.
விடிவெள்ளி – 09.11.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>