நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அமைப்பாளர் றியாழ் எப்படி எதிர்கொள்வார்?

0
305

indexஎம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி(கல்குடா)
கல்குடாத்தொகுதியில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் பெறக்கூடியதாக இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அதிலும் முஸ்லிம்கள் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை காணப்படுகிறது.

கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்கள் ஆரம்ப காலந்தொட்டு ஐக்கிய தேசியக்கட்சிக்கே வாக்களித்து வந்தது. இவை முஸ்லிம் காங்கிரஸின் வருகையுடன் முற்றுப்பெற்று, கல்குடா முஸ்லிம் பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக மாற்றம் பெற்றது.

இதன் காரணமாகவே, ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தராசு சின்னத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட்ட போது, முஸ்லிம்களைப் பெருமளவாக கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை புஹாரி விதானையார் தலைமையில் போட்டியின்றி ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், அந்தத்தேர்தல் நடைபெறவில்லை. அதன் பின்னர் இன்று வரைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

இதற்குக்காரணம் 1989ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர் முஹைதீன் அப்துல் காதருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை கட்சி நிறைவேற்றவில்லையென்பதால் அவர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தார். இதன் விளைவால் 1994ம் ஆண்டு கோ.ப.மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்தை முஹைதீன் அப்துல் காதரின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியது.

அடுத்ததாக வந்த இரண்டு உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களிலும் பிரதியமைச்சர் அமீர் அலியின் வழிகாட்டுதலில் அவரது கட்சி  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

மர்ஹும் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் மீண்டும் 2000மாம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததால், ஊர் ஒற்றுமைப்பட்டு இரண்டு தடவை அவரைப் பாராளுமன்றம் அனுப்பினார்கள். அதன் பின்னர் அவரின் மறைவைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு நடை பெற்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதியமைச்சர் அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்ற பின் அமைச்சுக்காக மூன்று மாதங்களுக்குள் கட்சி மாறினார்.

இதன் விளைவாக ஊர் இரண்டாகப் பிளவு பட்டது. இதன் காரணமாக, அதன் பின் இடம்பெற்ற எந்தத்தேர்தலிலும் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. இதற்குக்காரணம் பிரதியமைச்சர் அமீர் அலி தனது அரசியல் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி எதிரணியினரை அடக்கினார். சுதந்திரமாக அரசியல் பேசும் சூழ்நிலைகள் காணப்படவில்லை. அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்குட்பட்டார்கள்.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாவில் தனது கட்சிக்கு பிரதிநிதிகளின்றி பலமிழந்து காணப்பட்டது. இதனால் இவர்களை நம்பிச்சென்றும் தங்களுக்குப் பயனில்லையென்பதால், எல்லோரும் மௌனம் காத்தார்கள். இதனால், சமூக பொது நிறுவனங்களில் அரசியல் அதிகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, காலப்போக்கில் சீரழிந்தது.

இதனால் மக்கள் விரக்தியுற்று தங்களுக்கான நல்ல தலைமை வராதா? மாற்றம் நிகழாத என்று அங்கலாய்த்த போதே, 2015 ஜனவரியில் நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் அராஜக அரசுக்கு முடிவு கட்டி நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.  இந்த ஆட்சியில் ஏனைய ஆட்சியில் கிடைக்காதளவிற்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு கௌரவம் கிடைத்தது.

அதன் பின், 2015ல் வந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நேரடியாக தனது பிரதிநிதியாக நல்லொழுக்கமுள்ள, ஆளுமைமிக்க, சமூக சிந்தனை கொண்ட, அரசியலைச் சேவையாகச் செய்யக்கூடிய கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த காலங்களில் இந்தக்கட்சியில் அதிகாரம் பெற்று மாறியவர்கள், அதிகாரம் கிடைக்கவில்லையென்று மாறியவர்கள் போன்றால்லாது, இந்தக்கட்சியை நம்பி வாக்களிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவராகவும், மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு சிறந்த மாற்றத்தை வழங்கக்கூடிய ஒருவராகவும் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் திகழ்கிறார்கள்.

இவரின் வருகையுடன் அதிகார அடக்குமுறைக்கு அஞ்சியிருந்த சமூகம் வெளிப்படையாக அரசியல் பேசி, தங்களின் கருத்துகளை தைரியமாக வெளியிடும் நிலைமை கல்குடாவில் தோற்றுவிக்கப்பட்டது.

கடந்த கால கசப்பான அனுபவங்களாலும், அரசியல் களத்திற்குச் சமூகத்தில் பெரிதாக அறிமுகமில்லாதவர் என்பதாலும், அமீர் அலியின் செயற்பாடுகளாலும் முஸ்லிம் காங்கிரஸ் மீது கொண்ட அதிருப்தியினாலும் சுமார் 10,000 வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை அளிக்காததனால் றியாழ் அவர்கள் தோற்றாலும், அவர் மக்களை விட்டுச்செல்லவில்லை.

தன்னை நம்பி வாக்களித்த மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் காத்திரமாகச் செயற்பட்டு கடந்த காலங்களை விட முஸ்லிம் காங்கிரஸுடாக மக்களின் நீண்ட காலக்கோரிக்கையான சுத்தமான குடிநீர்த்திட்டம் உட்பட பல கோடி ரூபா அபிவிருத்தித் திட்டங்களை தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினூடாக கொண்டு வந்தார்.

இந்த வருடம்  பிரதியமைச்சரால் கூட கொண்டு வர முடிந்திராத நிதியினை எந்தவித அரசியல் அதிகாரமுமற்ற நிலையில் தனது ஆளுமையால் இந்த கல்குடா பிரதேசத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். தற்போது அடுத்தாண்டில் கல்குடாத்தொகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக, றியாழ் அவர்களின் செயற்பாடுகள் மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பியிருக்கின்றது. இளைஞர்களும் தங்களுக்கான தலைமையாக அவரை ஏற்று அவருடன் இணைந்து செயற்பட முன்வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், உள்ளூராட்சி மன்றத்தேர்தலை எதிர்நோக்கவிருக்கிறார். இதில் அவர் கோறளைப்பற்று மேற்கை கைப்பற்றும் வியூகங்களையும் இது வெற்றியளிக்கும் பட்சத்தில் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் முதற்தடவையாக இவரது காலத்திலேயே இப்பிரதேச சபை வெற்றி கொள்ளப்பட்டதென்ற வரலாற்றிலும் இடம்பிடிப்பார் என்பது குறிப்படத்தக்கது.

அதே போல், கோறளைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை மாற்றுகின்ற விடயத்திலும் சிறந்த நபர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கி வியூகம் அமைக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது.

இவைகளைக்கருத்திற்கொண்டு தனது தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவே தென்படுகிறது. கல்குடாத்தொகுதி தேர்தல் செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுக்கும் அதிகாரத்தை அண்மையில் கல்குடாவிற்கு வருகை தந்திருந்த தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் றியாழ் அவர்களுக்கு வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

கடந்த காலங்களில் அதிகாரங்களைப் பெறுவதற்காக மக்களைப் பயன்படுத்தியவர்கள் எதிர்காலங்களில் வரவிருக்கும் தேர்தல் மாற்றங்களால் இவை இனி சாத்தியமில்லையென்பதாலும், அதிகாரத்தைப்பெற இன்னுமொரு இனத்தைத் திருப்திபடுத்த வேண்டுமென்பதற்காகவும் இந்த சமூகத்தின் உரிமை விடயங்களில் மௌனமாக இருக்கலாம்.

ஆனால், அதிகாரம் எனக்கானதல்ல. என் சமூகத்திற்கானது. அது என்னிடத்தில் இல்லாவிடினும், அவர்களை முன்னேற்றும் பணிகளில் என்னால் முடிந்தளவு முயற்சி செய்வேன் என்ற நல்லெண்ணத்தில் செயற்படும் அமைப்பாளர் றியாழ் அவர்களின் கரங்களை சமூகம் ஒரணியில் இணைந்து பலப்படுத்துவதில் தான் எதிர்காலமுண்டு.

அமைப்பாளர் றியாழ் அவர்கள் பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பது வேறும் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனக்கு பெயர், புகழ் கிடைக்க வேண்டுமென்பதற்காகவோ அல்ல. மாறாக, இந்த சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்கள் பிரதேச சபை என்றால், குப்பைகளை அகற்றுவதும், வீதிகளுக்கு மின் விளக்கு இடுவது, உள்ளக வீதிகளைச் செப்பனிடுவதும், கான்களைத் துப்பறவு செய்வதும், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதும் தான் என பிரதேச சபையின் சேவைகளைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு தான் சபையை நடாத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

இவைகள் மாத்திரம் சேவைகளல்ல. பிரதேச சபை அந்த பிரதேசத்திற்குட்பட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்துச் செய்ய அதிகாரம் பெற்ற சபை. அதிகளவான வருமானங்களைப் பெறும் சபை. அந்த வருமானங்களைக் கொண்டு அந்த பிரதேச அபிவிருத்திகளில் கனிசமானளவு பங்களிப்புகளை செய்யலாம்.

வெளிநாடுகளிலுள்ள சபைகளுடன் அபிவிருத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதனூடாக நிதியைப் பெற்றும், அதன் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்யலாம். இவ்வாறு பல்வேறு அதிகாரங்கள் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவைகளைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும். சமூகத்தின் பெரும்பான்மையான தேவைகளை நிறைவேற்றலாம்.

அதே போல், சமூகக் கட்டமைப்புகளைச் சீர்செய்யலாம். போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான தீர்மானங்களை எடுக்கலாம். உலமாக்களுடன் ஆலோசனை செய்து மாணவர்களுக்கு மார்க்க வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளலாம். பெருநாள் தினங்களில் மார்க்கத்திற்கு முரணான விடயங்களைத் தவிர்ந்து, மார்க்க விழுமியங்களுடனான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். இப்படி பல விடயங்களைச் செய்யக்கூடியதாக சபை இருக்கிறது.

எனவே தான், றியாழ் அவர்கள் இதனைக் கைப்பற்றி இதன் சேவைகளை சமூகம் உச்சளவில் அடைந்து கொள்வதற்கு வழியமைக்க வேண்டுமென்ற நன்னோக்கில் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.

எனவே, இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். கடந்த காலங்களில் இந்த சபைகளால் நாம் கண்ட பயன் என்னவென்பதை யோசித்து ஒதுங்கிவிடாமல், மாற்றத்தை ஏற்படுத்தி, சமூகத்தை முன்னெற்ற அனைவரும் அணி திரள வேண்டும் அப்போதுதான் நல்ல மாற்றத்தை காணலாம். மாற்றம் ஒன்றே மாறாதது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here