வன்னி றிசாத்தின் கோட்டையல்ல: முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து மாற்றுத்தலைமைக்காகக் காத்திருக்கின்றனர்-அன்வர் முஸ்தபா விஷேட பேட்டி

IMG-20160103-WA0004ரி. தர்மேந்திரன்
வன்னி உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் கோட்டையல்ல. அது றிசாத் பதியுதீனின் கோட்டையாக இருக்குமானால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த கே. காதர் மஸ்தானால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இருக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தேசிய காங்கிரஸில் சில வாரங்களுக்கு முன்னர் இணைந்து கொண்ட அன்வர் முஸ்தபா  வழங்கிய சிறப்புப்பேட்டியில் தெரிவித்தார்.

இவருடனான நேர்காணல் வருமாறு:-

ரி. தர்மேந்திரன்:-
நீங்கள் அரசியலில் பிரவேசித்த முதலாவது சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்?

அன்வர் முஸ்தபா:- 
நான் 2000 ஆம் ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானிலுள்ள ஹம்பாட் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கணணித்துறையில் முதுமாணிப் பட்டத்துக்கான உயர் கல்வியை நிறைவு செய்த பிற்பாடு நாட்டுக்குத் திரும்பி வந்து கொழும்பில் தேசிய வர்த்தக முகாமைத்துவக் கல்லூரியில் பணிப்பாளராக இணைந்தேன்.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. முஸ்லிம்களும் சமாதான பேச்சுவார்த்தையில் தனியான தரப்பாக பங்கேற்க வேண்டுமென்கிற குரல்கள் அப்போது முஸ்லிம் சமூகத்திடமிருந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.

இவ்விடயங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் சம்மேளனம் உருவாக்கம் பெற்று சமூக அக்கறையுடைய இளைஞர்கள் பலரையும் உள்ளீர்த்தது. இவர்களில் நானும் ஒருவன்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை நியாயமான முறையில் பெற்றுக்கொடுக்கின்ற முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, வைத்திய கலாநிதி ஏ. எல். எம். ஜமீல், பொறியியலாளர் லத்தீப் ஆகியோரைக்கூட்டுத் தலைமையாகக் கொண்டு ஐக்கிய முஸ்லிம் உம்மா 2003 ஆம் ஆண்டு தோற்றம் பெற்று செயற்படத் தொடங்கிய போது, நானும் இதில் என்னை இணைத்துக் கொண்டேன்.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 28 இல் கொழும்பு தெமட்டகொட பள்ளிவாசலில் நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் பேரணியை நானே தலைமை தாங்கி நடத்தினேன் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்மேளனம், ஐக்கிய முஸ்லிம் உம்மா ஆகியவற்றில் நான் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டது. எனக்கிருந்த சமூக அக்கறை காரணமாகவேயொழிய எனக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென்கிற நோக்கம் சிறிதளவும் இருந்து இருக்கவில்லை.

மறுபுறத்தில் எனது சமூகம் சார்ந்த செயற்பாடுகள் காரணமாக நான் எனது உத்தியோகத்தை மாற்றி யூ. எஸ். எயிட் நிறுவனத்தில் கடமையாற்ற நேர்ந்தது. றிசாத் பதியுதீனை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே அறிமுகம் இருந்த போதிலும், நான் யூ. எஸ். எயிட்டில் வடக்கு, கிழக்குக்கான மானியங்கள் முகாமையாளராக உயர் பதவி வகித்துக் கொண்டிருந்த போது தான் அவருடைய பிரதேச மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்கிற கோரிக்கையுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்னை அணுகினார். அடிக்கடி சந்தித்துப் பேசினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நான் இணைந்து செயற்பட வேண்டுமென்று அவர் ஒரு கட்டத்தில் என்னைக்கேட்க தொடங்கினார்.

2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியூடாக நான் போட்டியிட வேண்டுமென்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பஷில் ராஜபக்ஸ எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆயினும், இந்த அழைப்பை நிராகரித்த நான், முஸ்லிம் மக்களுக்கு றிசாத் பதியுதீன் மூலமாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்கிற ஒரேயொரு நம்பிக்கையில் அதே கால பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் சேர்ந்து இக்கட்சியின் இளைஞர் அமைப்பாளராகவும், சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டு கட்சியை அம்பாறை மாவட்டத்தில் மக்கள் மயப்படுத்தியதுடன், சர்வதேச மட்டத்தில் விஸ்தரிப்புச் செய்கின்ற செயற்றிட்டங்களையும் முன்னெடுத்தேன். எனக்கிருந்த தொடர்புகள் மூலமாக வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொடுத்தேன்.

ரி. தர்மேந்திரன்:-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தேசிய காங்கிரஸில் நீங்கள் இணைய வேண்டி வந்தது ஏன்?

அன்வர் முஸ்தபா:- 
எனது கல்விப்புலம், அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகியன காரணமாக நான் அவரை அரசியலில் பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வந்து விடக்கூடுமென்கிற அச்சம் றிசாத் பதியுதீனுக்கு நாளடைவில் ஏற்பட்டு விட்டது. இதை நான் உணர்ந்தும், அறிந்தும் கொண்டவனாக கட்சிக்குள் எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்தி சில, பல வருடங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் செயற்பட்டேன்.

இருப்பினும் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியூடாகப் போட்டியிட அழைப்பு வந்த போதிலும், முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் சிதறக்கூடாதென்பதற்காக அதை நிராகரித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக நான் போட்டியிட்ட போது, அதே கட்சியைச்சேர்ந்த சக வேட்பாளர் ஒருவரால் அடிக்கடி பகிரங்கமாக சிறுமைப்படுத்தப்பட்டேன். இது குறித்து நான் றிசாத் பதியுதீனுக்கு முறைப்பாடுகளை மேற்கொண்ட போதிலும், அவர் எனக்கான நீதியைப்பெற்றுத்தர முயற்சிக்கவே இல்லை.

இருப்பினும், குறைந்தபட்சம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு இவர் மூலமாக ஏதேனும் அபிவிருத்திகள், வேலைவாய்ப்புகள், வாழ்வாதார உதவிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்கிற நப்பாசையில் அமைதியாகச் சகித்துக்கொண்டேன். ஆனால், அவ்விடயத்திலும் இவர் இரட்டை முகங்கள் உடையவராகவும், கபடம் மிகுந்தவராகவும் நடந்து கொண்டார்.

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளுக்குப் பாதகமான அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கையுயர்த்தியது மாத்திரமல்லாமல், ரவூப் ஹக்கீம் கை உயர்த்தியதாலேயே அவர் கையுயர்த்தியதாக சிறு பிள்ளைத்தனமாகத் தெரிவித்த போதே, இவரால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கப்போவதில்லையென்று தீர்க்கமாக முடிவெடுத்தவனாக தேசிய காங்கிரஸில் இணைந்தேன்.

ரி. தர்மேந்திரன்:-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியை நடத்துனராகக் கொண்டு இயங்குகின்ற தூய முஸ்லிம் காங்கிரஸ் ஏன் உங்கள் புதிய தெரிவாக அமையவில்லை?

அன்வர் முஸ்தபா:- 
தூய முஸ்லிம் காங்கிரஸின் நிகழ்ச்சி நிரல், உண்மையான நோக்கம் ஆகிய குறித்து எனக்கு எண்ணற்ற சந்தேகங்கள் உள்ளன. ஆகவே தான் நான் தூய முஸ்லிம் காங்கிரஸை நாடவில்லை.

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஏனைய முஸ்லிம் தலைவர்களைப் போலல்லாமல், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும், முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வைப்பெற்றுக் கொடுப்பதிலும் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன், இவரின் அரசியல் இனவாதத்துக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக, இவருக்கு இரட்டை முகங்கள் கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கெதிராக ஆவேசமாக கருத்துகளை முழங்கி, இளைஞர்களை உசுப்பேற்றி விட்டுச்சென்று, கண்டியில் சிங்கள மக்கள் மத்தியில் அன்பாக, அனுசரணையாக கதைப்பது போல நடிக்கத்தெரியாதவர் அதாவுல்லா.

முஸ்லிம் மக்களின் வாக்குகளைப்பெற வேண்டுமென்பதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் சம்பந்தன் ஐயாவைக்கூட ஏசி திட்டித்தீர்க்கின்ற றிசாத் பதியுதீன் தமிழர்களின் வாக்குகளைப்பெற தமிழர் பிரதேசங்களுக்குச் செல்கின்ற போது, தமிழர்களுடன் ஒட்டி உறவாடி நடிப்பது போல நடக்க அதாவுல்லாவுக்குத் தெரியாது. ஆகவே, அரசியல் வேடதாரியல்லாத இவருடன் தான் ஒன்றாகப் பயணிக்கின்ற தீர்மானத்துக்கு நான் வர முடிந்தது.

ரி. தர்மேந்திரன்:-
அதாவுல்லா ஒரு இனவாதியாகவும், தமிழின விரோதியாகவும் சித்திரிக்கப்படுகின்றாரே?

அன்வர் முஸ்தபா:- 
அதாவுல்லா உண்மையானவர். ஏனையவர்களின் மனம் புண்படுமாக இருந்தாலும்கூட, அவருடைய நிலைப்பாட்டை முகத்துக்கு நேராகப் பட்டென்று பேசுகின்ற பண்புடையவர். வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட வேண்டுமென்பது இவருடைய உறுதியான நிலைப்பாடாகும்.

ஏனைய முஸ்லிம் தலைவர்களைப்போல வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களுக்கு ஒன்றையும், தமிழருக்கு இன்னொன்றையும் இவர் கூறவில்லை. இதனால் தான் தமிழர்களில் ஒரு தொகையினர் இவரைத்தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர்.

சில அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் இவரை இனவாதியென்றும், தமிழின விரோதியென்றும் காட்டி வேண்டுமென்றே அவதூறு பரப்பினர். வடக்கு, கிழக்குப் பிரிப்பென்பது கிழக்கு முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல. கிழக்கு தமிழர்களுக்கும் அவர்களை அவர்களே ஆள்கின்ற அதிகாரத்தைக் கொடுக்கின்ற விடயமேயாகும்.

ரி. தர்மேந்திரன்:-
தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பாதிப்படையச் செய்யுமென்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

அன்வர் முஸ்தபா:- 
தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பு றிசாத் பதியுதீனை ரொம்பவே அச்சம் கொள்ள வைத்துள்ளது. மக்களுக்கு வெளியில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் வன்னி ஒன்றும் றிசாத் பதியுதீனின் கோட்டையல்ல. வன்னி றிசாத் பதியுதீனின் கோட்டையாக இருக்குமானால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த மஸ்தான் எவ்விதம் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்?

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் எவ்விதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செல்வாக்குச் சரிந்து கொண்டே செல்கின்றதோ, அதே போல வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் செல்வாக்கும் குறைந்து கொண்டே செல்கின்றது. குறிப்பாக, வன்னி முஸ்லிம்கள் இவர் மீது நம்பிக்கையிழந்து, அதிருப்தியடைந்து மாற்றுத்தலைமையொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பும், தொகுதிவாரித்தேர்தல் முறைமையின் வருகையும் றிசாத் பதியுதீனின் மணல் கோட்டையை மாத்திரமல்ல, அவரின் பல மனக்கோட்டைகளையும் தகர்த்தெறிந்து விடுமென்பதில் ஐயமில்லை.

ரி. தர்மேந்திரன்:-
இத்தருணத்தில் முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் கூறி வைக்க விரும்புகின்ற செய்தி என்ன?

அன்வர் முஸ்தபா:- 
கடந்த காலத்தில் வெளிப்பிரதேச அரசியல் தலைமைத்துவத்தை வீணாக நம்பி, பெருந்தலைவர் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்த, கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்துக்கு இருந்த மகத்தான தலைவரைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அநியாயமாக இல்லாமல் செய்து விட்டோம்.

இந்த பிழையை நாம் எதிர்காலத்தில் கட்டாயம் சரி செய்தல் வேண்டும். அத்துடன், சில சலுகைகளுக்காக கடந்த காலத்தில் வாக்களித்த நிலைமைகளை மாற்றி, சமூகத்துக்கு குரல் கொடுக்கக்கூடிய அரசியல் தலைமைத்துவத்தை வருங்காலத்தில் தெரிவு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்கள்கூட நிதானமாகச் சிந்தித்து அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது உகந்ததாக அமையும். மேலும், கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும், நல்லாட்சியின் உருவாக்கத்துக்கும் நானும் பங்களிப்புச் செய்திருந்தேன்.

ஆனால், இந்த நல்லாட்சி வெற்றிகரமான நல்லாட்சியாக இல்லை. எனவே, இந்நாட்டு பெரும்பான்மைச் சமூகத்தின் அதிகப்படியான செல்வாக்கையும், அதே போல பெரும்பான்மை சமயத்தலைவர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றிருக்கின்ற அரசியல் சக்தியுடன் நாமும் இணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்புகள் குறித்து சாதகமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் மக்கள் உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>