முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
310

868238d9-b1c8-450e-9d62-91915fa1e905ஆர்.ஹசன்
“அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு  அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்திலுள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது” என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் ஏறாவூரிலுள்ள சமூக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

நான் சுகயீனமுற்றிருந்த போது எனது தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. பலர் எனது சுகத்துக்காக நோன்பு நோற்று பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சமூக நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள் சிறப்பாக இயங்க வேண்டுமென்பதற்காகவே வரவு–செலவு திட்டத்தின் ஊடாக நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது. சமூக நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாத போது, அவை சிறப்பாக இயங்க முடியாது.

சமூக நிறுவனங்களுக்கு இவ்வாறு பொருட்கள் வழங்கும் நடைமுறை ஆரம்பத்தில் இருக்கவில்லை. 1989ஆம் ஆண்டு நான் முதலாவதாக நாடாளுமன்றம் சென்றதன் பின்னரே இந்த நடைமுறைக் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் எனக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து சமூக நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்களுக்கு தொடர்ச்சியாக இன்று வரை நிதியுதவி செய்து வருகின்றேன்.

வழங்கப்படுகின்ற பொருட்கள் பொதுச்சொத்தாகும். அதனைப் பொறுப்புடன் பேணுதலாகக் கையாள வேண்டும். ஆனால். சில சந்தர்ப்பங்களில் பொதுச்சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் வரை பிரச்சினை சென்றுள்ளது.

அரசாங்கம் தேர்தலுக்குப் பயந்து தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக சிலர் கூறுகின்றனர். ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ தேர்தல் தொடர்பில் எந்தவித அச்சமும் கிடையாதென்பதை நாங்கள் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எந்த நேரத்திலும் எவ்வாறான தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை முகங்கொடுக்க நாங்கள் தயாராகவேயுள்ளோம். ஆனால், நாட்டிலே கடந்த 40 வருடங்களாக இருக்கின்ற தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு புதிய முறையில் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே, உள்ளூராட்சித்தேர்தல் புதிய வட்டார முறைப்படியே நடக்கின்றது. இதில் சட்டப்பிரச்சினைகள் உள்ளமையால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, அதனைச்சீர்செய்ய வேண்டியேற்பட்டது. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.

பழைய தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகள் மக்களின் தேவைகளை சரியான முறையில் நிறைவேற்றவில்லை. அதில் அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன. இந்நிலையை மாற்றி தூய அரசியல் பயணத்துக்காக எதிர்வரும் ஏறாவூர் நகர சபைத்தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் தலைமையில் பலம் வாய்ந்த குழுவொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் களமிறக்கவுள்ளோம் என்றார். 1 2c873b78-30ac-40d6-ad7f-408f4c9e4521 8bc43fec-e36f-46c8-94e3-e3f1e8e3536a 22fa8cd3-fa6e-49c6-b05a-14c275878fbb 40ddfdf6-ce2c-44bf-ac81-0b3eaf6bf000 65e2532d-722c-418d-bfb3-fc811df18bf4 868238d9-b1c8-450e-9d62-91915fa1e905 a81ba386-bfa9-41c3-8df0-7e1111a012b9 beb7aed1-83d5-4493-9bfe-72f5c2204718 c1095db1-00ca-4291-8030-84dcdcfcadd4 c088028f-6f48-4dda-8760-76bf2a578505

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here