வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்! – ஜான்சிராணி சலீம்

0
276

download (1)வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

இவரின் அறிக்கை வருமாறு:-

காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட்ட இழப்புகள், பதற்றங்கள் ஆகியவற்றில் இருந்து அப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் உறவுகள் மீளவே இல்லை என்பதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை.
அதற்குள்ளாக வவுனியாவில் பள்ளிவாசலுக்கு சொந்தமான நான்கு கடைகள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டன. வட மாகாண முதலமைச்சரும், ஓய்வு நிலை நீதியரசருமான சீ. வி. விக்னேஸ்வரன் ஐயா மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் என்று கருத்து வெளியிட்டு இருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தேறி உள்ளன.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்களுக்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வன்செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்று நாம் வலுவாக சந்தேகிக்க வேண்டி உள்ளது. அதே போல விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்து ஒவ்வொரு முஸ்லிம்களின் இதயத்திலும் சம்மட்டியால் அடித்த வேதனையை தருகின்றது. இவரின் முதலமைச்சர் பதவி காலத்திலாவது வட மாகாண முஸ்லிம்களுக்கான நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை தகர்ந்து செல்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் கடந்த வாரம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூடி கலந்தாலோசித்து மீண்டும் சந்தித்து பேச தீர்மானித்து உள்ள நிலையில் வெளிவந்துள்ள இவரின் கருத்துகள் நம்பிக்கையீனத்தையே தந்து உள்ளன.

மேலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் கல்முனையை நான்கு சபைகளை பிரிப்பது தொடர்பாக தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற அந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான சபையை கேட்கின்ற தார்மீக உரிமை கிடையாது என்று பேசி உள்ளார் என்றாலும் அதை நாம் பெரிதாக கொள்ளாமல் அவரின் அறியாமையின் வெளிப்பாடாகவே பார்க்கின்றோம்.

எவை எப்படி இருப்பினும் வன்செயல்கள், வன்முறைகளை தூண்டுகின்ற பேச்சுகள் ஆகியவற்றை தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளர் மற்றும் மகளிர் பொறுப்பாளர் என்கிற வகையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேசிய காங்கிரஸ் நேரில் சந்தித்து முறைப்பாடு செய்து உள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் நிதானம் இழக்காது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இனவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் நோக்கங்களில் இருந்து தப்பிக்க முடியும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

-Arivu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here