அரசாங்கத்தின் இனநல்லுறவு பேச்சளவில் மட்டுமேயுள்ளது-நாமல் ராஜபக்ச எம்பி

0
235

image_123986672அரசாங்கத்தின் இனநல்லுறவு வேலைத்திட்டம் பேச்சளவில் மட்டுமேயுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மிக நீண்ட காலமாக இனவாதச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கான வரலாறுகளுண்டு. அது எமது ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் மீண்டும் கோர வடிவமெடுக்க முயற்சித்தது. எமது ஆட்சியானது, யாராலும் உடைக்க முடியாதளவு மிகப்பலமாக இருந்ததால், அதனை உடைக்க பல சதிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சிறுபான்மை மக்களை எங்களிடமிருந்து பிரித்தெடுக்க அரசியல் நோக்கம் கொண்ட இனவாதத்தீயை மூட்டி விட்டிருந்தனர்.

அன்று சிலர் விதைத்த இனவாதத்தீயானது, சிலர் மனங்களில் நஞ்சாகப்பதிந்து விட்டது. ஒரு பாரிய நாசகாரச் செயலை முன்னெடுக்க ஒருவரின் கையில் ஒரு தீக்குச்சி இருந்தாலே போதுமாகும். நஞ்சு விதைக்கப்பட்டுள்ள மக்களது இதயங்களைச் சுத்தப்படுத்தும் வரை இலங்கையில் இனவாதக்குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

உடலின் எப்பகுதியில் பிரச்சினையுள்ளதென அறிந்து வைத்தியம் செய்யும் போது, நோய் தீரும். இன்று பிரச்சினையை முடித்து விட்டோமெனக்கூறுவதெல்லாம் அறிவுடமையாகாது. இன நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதே நிரந்தரத்தீர்வாகும். இன்று கிந்தோட்டை பிரச்சினையின் பின்னால் இவ்வரசின் வேறொரு நிகழ்ச்சி நிரல் உள்ளதான சந்தேகமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வரசு இன நல்லுறவை வளர்க்க அமைச்சை உருவாக்கி மனோ கணேசன் கையில் வழங்கியுள்ளது. இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரரிகாவிடமும் ஒப்படைத்துள்ளது. இவர்கள் இதுவரை எந்தவிதமான உருப்படியான திட்டங்களையும் முன்வைக்கவில்லை. இப்படியிருந்தால் எப்படி இலங்கையில் இன நல்லுறவு ஏற்படும்.

இவ்வரசானது, இன நல்லுறவைக் கட்டியெழுப்ப நீண்ட காலத்திட்டங்களை தீட்ட வேண்டும். அதுவே இன்று இலங்கை நாட்டுக்கு மிக அவசரமானதும், அவசியமானதுமான தேவையாகவுள்ளது. இன்னும் இவ்வரசானது இன நல்லுறவைக் கட்டியெழுப்புவது போன்ற இலங்கை நாட்டின் பொது நலன்களில் கவனஞ்செலுத்தாது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எப்படி எதிர்கொள்வதென்பதிலேயே காலம் கடத்துமாக இருந்தால் மிகக்கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமெனக்குறிப்பிட்ட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here