வட கொரிய தலைவர் கிம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறார்- டிரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

Spread the love

வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைத் தீர்க்க, அமெரிக்கா வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹிச்ஆர் மெக்மாஸ்டர் கூறியுள்ளார்.

போருக்கான சாத்தியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆயுதப் போர் மட்டுமே தீர்வை தராது என பாதுகாப்பு மன்றத்தில் அவர் கூறினார்.

வட கொரியா தனது பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதனை செய்த மூன்று நாளுக்குப் பிறகு மெக்மாஸ்டர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட சமீபத்திய ஏவுகணை அதிக உயரம் பறந்தது.

உலக நாடுகளின் கண்டத்திற்கு மத்தியிலும், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டத்தை அபிவிருத்தி செய்து வருவதால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

தனது சமீபத்திய ஏவுகணை முழு அமெரிக்காவையும் தாக்கும் என வட கொரிய கூறியுள்ளதால், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் கூடுதல் பாதுகாப்பை நிலைநிறுத்தப் பாதுகாப்புத்துறைக்கு கூறப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான மெக்மாஸ்டர், கலிபோர்னியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.

”ஆயுதப்போரை தவிர, இப்பிரச்சனையைத் தீர்க்க வழிகள் உள்ளன. ஆனால், வேகமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் அருகில் வந்துகொண்டிருக்கிறார். அதிக நேரம் இல்லை” என வட கொரிய தலைவர் கிம்மை குறிப்பிட்டு பேசினார் மெக்மாஸ்டர்.

”சீனாவின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனையைத் தீர்க்க சீனாவிடம் கேட்டுள்ளோம். எரிபொருள் இல்லாமல் ஏவுகணை ஏவ முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கட்கிழமையன்று கூட்டு வான் பயிற்சியை தொடங்க உள்ள நிலையில்,இரு நாடுகளும் போரை நாடுபவர்களாக உள்ளனர் என வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

தனது ஹவாசாங்-15 என்ற சமீபத்திய ஏவுகணை 4,475 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டாருக்கு 53 நிமிடங்கள் பறந்ததாகவும், முழு அமெரிக்கா கண்டத்தையும் தாக்கும் வல்லமை இதற்கு இருப்பதாவும் வட கொரியா கூறியிருந்தது.

இந்த ஏவுகணையால் அமெரிக்காவை அடைய முடியும் என ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், கனமான போராயுதத்தை இதனால் சுமந்துவரமுடியுமா என்பது குறித்த சந்தேகங்களை அவர்கள் எழுப்புகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*