உள்ளூராட்சிமன்ற அதிகாரத்துக்கு மேலான மக்களின் எதிர்பார்ப்பும், குடும்ப நலனை முதன்மைப் படுத்தியவர்களின் நிலையும்.

Spread the love

(முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது)

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடுதழுவியரீதியில் ஒவ்வொரு ஊர்களிலும் வேட்பாளர்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகளில் அதிகமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முற்படுகின்றார்கள். அதனால் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுவதுடன் நேர்முகப்பரீட்சை மூலம் வேட்பாளர்கள் தெரிவு நடைபெறுகின்றது.
மக்கள் மனங்களில் பதிந்துள்ள கட்சியின் மூலமாக தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தங்களால் இலகுவான முறையில் வெற்றிபெற முடியும் என்பதே இதற்கு காரணமாகும்.
அதேவேளை மக்கள் செல்வாக்குகள் இல்லாத கட்சிகள் வேட்பாளர்களை தேடி அலைவதனையும், அதனால் மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை வலைவீசி திரைமறைவில் அவர்களுக்கு ஆசைவார்த்தைகள், வாக்குருருதிகள், பேரம்பேசுதல், வெகுமதிகள் மூலமாக தங்களது கட்சியில் அவர்களை இணைத்துக்கொண்டு தங்கள் கட்சியை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதனையும் காணக்கூடியதாக உள்ளது.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றவர்கள், அவர்களுக்கு இப்போது இருக்கின்ற இதே ஆர்வமும், உட்சாகமும் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்பு இல்லாமல் போவதுதான் கவலையான விடயமாகும்.
கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைவாக கடமைகளை முடியுமானவரையில் சரிவர செய்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து மக்களின் ஆதரவினை பெறுவார்கள்.

ஆனால் பலர் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் செல்வார்கள். மக்களால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆணையினை தங்களது கடமையாக நினைத்து அவர்கள் செயல்படுவதில்லை. மாறாக தங்களது குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் வழங்குவார்கள். அவ்வாறானவர்கள் மக்களினால் நிராகரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறமுடியாது.
இவ்வாறான சுயநலவாதிகளின் செயல்பாடுகளினால்தான் அவர்களது கட்சிக்கும், தலைமைக்கும் விமர்சனங்கள் ஏற்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது.
அவைகள் ஒருபுறமிருக்க உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்துக்கு அமைவாகவே தங்களது பிரதிநிதிகளினால் செயலாற்ற முடியும் என்றும், அவர்களது சக்திக்கு மீறிய வேலைகளை மக்களுக்கு செய்யமுடியாது என்ற உண்மையினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சக்திக்குமீறிய எதிர்பார்ப்புக்களை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மக்கள் எதிர்பார்கின்றபோது, அவைகள் நிறைவேறாதுவிட்டால் அவர்களை விமர்சிப்பதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் கடந்த காலங்களில் மக்கள் நலனை முதன்மையாக கொண்டு செயலாற்றியவர்களை மக்கள் ஒருபோதும் இந்த தேர்தலில் கைவிடமாட்டார்கள். அதேநேரம் மக்களைவிட தங்களது குடும்ப நலனே முதன்மையானது என்று செயல்ப்பட்டவர்களை மக்கள் மீண்டும் அங்கீகரிப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*