மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் ACMC  யானையிலும், கண்டி மாவட்டத்தில் மயில் சின்னத்திலும் தனித்து களமிறங்குகின்றது!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு –

வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritime Pattu), மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆகியவற்றிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்குகின்றது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலகங்களில் முறையே அந்தந்த மாவட்டங்களின் கீழான நகரசபை, பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், இணைப்பாளர் முஜாஹிர், ஐதேக வின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் பஸ்மின், மக்கள் காங்கிரஸின் பிரமுகர் செல்லத்தம்பு ஆகியோர் மன்னார் மாவட்ட செயலகத்திலும், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி ஐ.எஸ்.எம்.மொஹிடீன், இணைப்பாளர் பாரி ஆகியோர் வவுனியா மாவட்ட செயலகத்திலும், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், நகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர். அதேபோன்று 

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை ஆகியவற்றிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (18) செலுத்தியது.
கம்பளை நகரசபை, பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றிலும் தனித்துக் களமிறங்கும் மக்கள் காங்கிரஸ், நாளை கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் தெரிவித்தார்.

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்டத்தில் கால்பதித்து குறுகிய காலமாக இருந்த போதிலும், இந்தப் பிரதேச மக்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கணிசமான சேவைகளையும், உதவிகளையும் மேற்கொண்டிருக்கின்றார்.
பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்னின்று குரல்கொடுத்தும், உதவிகளை மேற்கொண்டும் வருகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது, இந்த மாவட்ட மக்கள் அபரிமிதமான அன்பையும், பற்றையும் வைத்திருப்பதனாலேயே எமது கட்சி தனித்துக் களமிறங்க தீர்மானித்தது.
இந்தவகையில், இறைவனின் உதவியுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் அநேகமான பிரதேச சபைகளில், கணிசமான ஆசனங்களை நாம் பெறுவோம். இதன்மூலம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பயன்படுத்தி, சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக எமது கட்சி திகழும் என்ற நம்பிக்கையுடன் உள்ளூராட்சித் தேர்தலில் நாம் பயணிக்கின்றோம்.
பெரும்பான்மைக் கட்சிகளாலும், கடந்த காலங்களில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் கட்சிகளினாலும், இந்த சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு பயனும் கிடைக்காத நிலையிலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கண்டி மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.
இதன்போது, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் றிஸ்மி ஆகியோரும் உடனிருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*