தேனீர்க் குவளை தொடக்கம் தேசியப்பட்டியல் வரை

Spread the love

தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கின்றது. திருவிழாக் காலத்தில் எங்கிருந்தோ பொருட்களைக் கொண்டுவந்து வீதியோரமாக கடைவிரித்து, “குறைந்த விலையில் ஒரிஜினல் பொருட்கள்” எனக் கூறியும் பல பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் செய்தும் அவற்றை விற்பனை செய்கின்ற அங்காடி வியாபாரிகள் போல, முஸ்லிம் தலைவர்களையும் உள்ளுர் வட்டார வேட்பாளர்களையும் இனி நமது தெருக்களில் காணக் கூடியதாக இருக்கும்.

கடந்த தேர்தல் தொடக்கம் இன்று வரை ‘மாடிவீட்டு மைனர்’ போல இருந்த நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு ‘எங்கவீட்டு பிள்ளை எம்.ஜி.யாராக’ வலம் வருவார்கள். எம்.ஜி.ஆர். வேடத்தில் நம்பியார்களும் நம்பியாரை விட மோசமான எம்.ஜி.ஆர்களும் இந்த தேர்தல் நாடகத்தில் முக்கிய பாத்திரம் வகிப்பார்கள். ஆனால், வாக்காளப் பெருமக்களாகிய பொது மக்கள் இவ்விடயத்தில் விவேகமாக செயற்பட வேண்டியிருக்கின்றது.
அரசியல்வாதியின் நன்கொடையாக வழங்கிய ஒரு சிறு தேனீர்க் குவளை தொடக்கம், தொழில்வாய்ப்பு, சேவைகள், அபிவிருத்தி, பெற்றுத்தரப்பட்ட உரிமைகள், அபிலாஷைகள், அவர்களினால் கிடைத்த ஏமாற்றம், கோபம், நம்பிக்கைத் துரோகம், காட்டிக்கொடுப்புக்கள் தொட்டு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகள் வரை ஒவ்வொரு விடயமும் இந்தத் தேர்தலில் செல்வாக்குச் செலுத்துவாக இருக்கும், அவ்வாறே இருக்கவும் வேண்டும். எதையும் மறந்துவிடக் கூடாது.
உண்மையாகச் சொன்னால், இவ்விடயங்கள் எல்லாம் எந்தளவுக்கு மக்களின் வாழ்வியலில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றது என்பதை, மக்கள் வாக்களிப்பின் மூலம் அரசியல்வாதிகளுக்கு ஒரு குட்டுப்போட்டு விளங்கப்படுத்தும் தருணமாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

திருவிழாவில் கடைவிரித்தல்

தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதற்கு உள்ளச்சம் கொண்டிருந்த அரசாங்கம், இப்போது தேர்தலை நடாத்துவதற்கான  பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டங்களில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்தவருடம் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றார்.

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக விகிதாசாரத்திற்குள் தொகுதி என குறிப்பிடப்படும் கலப்பு முறை தேர்தல் ஒன்றை நாம் இம்முறை எதிர்கொண்டிருக்கின்றோம். வேட்பாளர் நியமனம், வெற்றியாளர் தெரிவு போன்ற இன்னோரன்ன விடயங்களில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் எந்தளவுக்கு தெளிவற்றதாக இருக்கின்றதோ அதைவிட அதிகமாக மக்கள் வாக்களிப்பு முறை பற்றியும் தேர்தல் முறைமை பற்றியும் தெளிவற்றவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இதுபற்றி எவ்வித தெளிவையும் ஏற்படுத்தாமலேயே, தேர்தல் திருவிழாவில் கடைவிரித்திருக்க வந்திருக்கின்றன.

உள்ளுராட்சித் தேர்தல் என்பது ஒரு நாட்டின் ஆகச் சிறிய ஆட்சிக் கட்டமைப்பாகும். இந்த தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நடைபெறும். எனவே, உள்ளுராட்சி சபைகளின் வெற்றி அடுத்த தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான மக்களின் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தும். இதுமட்டுமன்றி, உள்ளுராட்சி சபையிலிருந்தே மாகாண சபைக்கும், அங்கிருந்து பாராளுமன்றத்திற்கும் மக்களின் பிரதிநிதிகள் செல்கின்றனர்.

எனவே, இத்தேர்தல் முக்கியமானதாகும். அந்த அடிப்படையிலேயே யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது அதிக சபைகளைக் கைப்பற்றி விட பிரதான பெரும்பான்மைக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் ஆலாய்ப் பறக்கின்றன என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. ‘உள்ளுராட்சி சபை தேர்தல்தானே யாருக்காவது வாக்குப்போட்டால் சரி’ என்று எந்தபொதுமகனும் எண்ணி, பிழையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திய வரலாற்று குற்றத்தை செய்துவிடக் கூடாது.

மிகக் குறிப்பாக, உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில வேட்பாளர்கள் குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்கள் என்றும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு பொருத்தமற்றவர்கள் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்துள்ளது. இவ்வாறானவர்களின் பட்டியலொன்றையும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே, முஸ்லிம் கட்சிகளில் போட்டியிடும் சமூக விரோத செயல்களில் செயற்படுகின்றவர்களுக்கு வாக்களிப்பதில் இருந்து மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகளை அரசியல் பிரதிநிதிகளாக்கியதால் கடந்த காலத்தில் நாம் பட்ட துன்பங்களை கவனத்திற் கொண்டு அவ்வாறனவர்களுக்கு எதிராக மக்கள் தங்கள் வாக்குகளை பிரயோகிப்பதே நல்லதாகும்.
இம்முறை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 90 சதவீதத்திற்கும் மேல் எழுத்தறிவுள்ள ஒரு நாட்டில் ஒரு தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே சரியாக நிரப்பத் தெரியாத வேட்பாளனும் கட்சியும் – எப்படி மக்கள் சேவையை சரியாகச் செய்வார்கள் என்ற ஐயப்பாட்டின் அடிப்படையில் நோக்கும் போது அவ்வாறு நிராகரிக்கப்படுவது தார்மீகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நிலைமாறுகால தேர்தல்

தேசிய அரசியலில் மட்டுமல்ல முஸ்லிம் அரசியலிலும் இது நிலைமாறுகாலம் என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. தேசிய மட்டத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் ஒரு வேறுவிதமான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்ற சூழலில், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பு நிறுவப்பட்டதன் மூலம் முஸ்லிம் அரசியல் அரங்கிலும் புதியதொரு கலாசார மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது எனலாம். கூட்டமைப்பின் ‘வெற்றிகரமான’ செயற்பாடுதான் அதை நிலைபெறச் செய்யும் என்பது வேறுகதை.
இந்தப் பின்னணியில், முஸ்லிம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் அம்பாறை மாவட்டம் கூட்டமைப்பு கோட்பாட்டின் மீதான அரசியல் அங்கீகாரத்தை பரீட்சித்துப் பார்க்கும் களமாக அமையும்;. ஆனால், முஸ்லிம் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரிக்கின்றனரா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகளை வைத்து தீர்மானிக்க முடியாது. அது நீண்டகால செயன்முறையாகும்.

முஸ்லிம்களை மையமாக வைத்து அரசியல் செய்கின்ற 4 பிரதான கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்று இரு கட்சிகளின் கூட்டமைப்பும் அதேபோன்று துஆ, நுஆ, மு.தே.கூட்டமைப்பு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போன்ற இன்னும் பல சிறுகட்சிகளும் இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை வடக்கு அரசியலும், கிழக்கு அரசியல் களமும் கொழும்பு நிலைவரமும் அதற்கு வெளியிலான அரசியல் களமும் ஆழமாக நோக்கும்போது வெவ்வேறு பண்புகளைக் கொண்டவையாகும். ஆனாலும், முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிழக்கு மாகாணமும் அதனையடுத்து வட மாகாணமுமே முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள ஏதுவான களங்கள் என்ற அடிப்படையில் கிழக்கிலான களநிலவர அறிகுறிகள் கட்சிகளின் வெற்றிக்கு அல்லது தோல்விக்கான பதச்சோறாக அமைவதுண்டு. அவ்வாறான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. ஆனாலும் வாக்களிப்பு இடம்பெறும் தருணம் வரைக்கும் களநிலைமைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

மு.கா.வின் வியூகம்

முஸ்லிம்களின் பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் வழமையை விட சற்று வேறுபட்ட தேர்தல் வியூகம் ஒன்றைக் கைக்கொண்டுள்ளது. முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்துதல் என்ற அடிப்படை நோக்கத்திற்கு அமைவாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி, மக்கள் காங்கிரஸ் கட்சியை மாதிரியே ‘யானைச் சவாரி’ செய்வதை கடந்த பல வருடங்களாக காண முடிகின்றது.

அந்த வகையில் இம்முறை உள்ளுராட்சி சபை தேர்தலில் இரண்டுக்கு மேற்பட்ட சின்னங்களில் மு.கா. தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. தனித்து போட்டியிட்டு, மு.கா.வுக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதரவை உறுதிப்படுத்தியிருக்க வேண்டிய இக்கட்சி, தேர்தல் விய10கம் என்ற பெயரில் பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் ஒரு சில இடங்களில் தனித்தும் போட்டியிடுகின்றது.

ஒரிரு சபைகளில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற சிறிய கட்சிகளில் களமிறங்கியிருக்கின்றது. கட்டுப்பணம் செலுத்த முடியாமல் போனமையால் சுயேட்சைக்குழுவிலும் ஒரு உள்ளுராட்சி சபைக்கு ஆட்களை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, எந்த முஸ்லிம் கட்சியுடனும் கூட்டமைப்பாகவோ அன்றேல் தேர்தல் கூட்டாகவோ இத்தேர்தலில் இணைந்தியங்க முன்வராத மு.கா. இம்முறை வன்னியில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு மேற்கொண்ட பகீரத பிரயத்தனங்கள் வெற்றியளிக்காமல் போயிருக்கின்றன.

இப்படியாக பல சின்னங்களோடு களமிறங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு களநிலைச் சவால்களை சந்திக்கும் வாய்ப்பிருக்கின்றது. மு.கா. என்பது முஸ்லிம்களினால் உயிரிலும் மேலாக நேசிக்கப்படும் கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தக் கட்சியை வழிநடாத்துபவர்கள் மீதான விமர்சனங்கள் அக்கட்சி அழிந்து போவதற்கு இடமளிக்க முடியாது என்ற விடயத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், மு.கா.வின் ஆதரவுத் தளம் அண்மைக்காலமாக பல்வேறு அதிர்வுகளைச் சந்தித்துள்ள போதிலும் இன்னும் தனக்கென ஒரு ஆதரவுத்தளத்தை கொண்டுள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது. இவ்வாறு ஏற்பட்ட அதிர்வுகளுக்கு, ஹசனலி – பசீர் தொடங்கி ஹனீபா மதனி தொட்டு ஜவாத் வரையான உறுப்பினர்களின் வெளியேற்றமும் முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கமும் என வெளிக் காரணங்கள் மட்டுமே காரணங்கள் அல்ல என்பதை அக்கட்சியின் போக்கை தொடர்;ச்சியாக நோக்குவோர் அறிந்து கொள்வார்கள்.
சுருங்கக் கூறின், நாம் என்ன செய்தாலும் நமக்குப் பின்னால் வருவார்கள் என்ற எகத்தாள போக்கு, தவறுகளை திருத்திக் கொள்ள முன்வராமை என்பன கடந்த பல வருடங்களாக மு.கா. மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களாகும். ஆனால் இவற்றை ஈடுசெய்யும் விதத்தில் கட்சி இதுவரை செயற்படவில்லை என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் மனங்களில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தேர்தல் வந்தால் மக்கள் இதையெல்லாம் மறந்து விடக் கூடும் என்பது உண்மைதான். ஆனாலும் இம்முறை தேர்தலில் ஏதாவது அடிப்படையில் இந்த அதிருப்தி மு.கா.வுக்கு ஒரு சவாலாக அமையலாம். அதேபோன்று, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றவர்கள் நூறுவீதம் தூய்மையானவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்த கூட்டமைப்பு என்ற கோஷம் சரியான முறையில் மக்களிடையே சந்தைப்படுமாக இருந்தால் அது கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்காத கட்சிக்களுக்கு சவாலாக அமையலாம். அத்துடன் சாய்ந்தமருது விவகாரம் போன்ற இன்னோரன்ன விடயங்களும் உள்ளுர்களில் ஆட்சியைப் பிடிப்பதில் செல்வாக்குச் செலுத்தும்.

மிக முக்கியமாக மு.கா.வின் தேசியப்பட்டியல் விவகாரம் இந்த தேர்தல் காலத்திலும் சூடுபிடிக்கும். குறிப்பாக, ஐ.தே..க.ஊடாக மு.கா.வுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வாக்குறுதியளிக்கப்பட்டவர்களுக்கோ அட்டாளைச்சேனை போன்ற ஊர்களுக்கோ 2 வருடங்களாக வழங்கவில்லை. அப்பதவியை சல்மான் இன்னும் வகித்துக் கொண்டிருக்கின்றார். அட்டாளைச்சேனை மக்கள் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்து கொண்டாலும் முறையான அழுத்தங்களை பிரயோகிக்காமையால், றவூப் ஹக்கீம் இன்னும் சமாளித்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்கிடையில், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இந்த எம்.பி. பதவியை வழங்குவதற்கு கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.தே.க.தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான நகர்வுகளை நஸீர் அகமட்டும் மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் கட்சிக்குள் இதற்கு எதிர்ப்பில்லாத சூழலில் முன்னாள் முதல்வருக்கு அப்பதவியை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் அவரிடம் இருந்து கட்சிக்கு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தலைவர் கருதுதவாகவும் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த தேசியப்பட்டியலை தேர்தலுக்கு முன்னர் அட்டாளைச்சேனை போன்ற ஏதாவது ஒரு ஊருக்கு வழங்கினால் நிலைமைகளை கொஞ்சம் தணிய வைக்க முடியும். வுhக்குகளையும் அதிகரிக்கலாம். இல்லாவிட்டால் அதுவும் கூட வேறுவடிவில் வாக்களிப்பில் தாக்கம் செலுத்தக் கூடும்.

மக்கள் காங்கிரஸ்

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாலும் அண்மையில் மேற்கொண்ட சில நகர்வுகளாலும் வாய்ப்புள்ள ஒரு தேர்தல் களத்தை சந்தித்துள்ளது. கட்சி தாவி வருகின்ற எல்லோரும் ஆயிரக்கணக்கான வாக்குகளை தம்மோடு கொண்டு வருவதில்லை என்றாலும் அடுத்தடுத்த கட்சித்தாவல்கள் மக்களை திரும்பிப் பார்க்கச் செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.
அத்துடன் கூட்டமைப்பு கோட்பாட்டினூடே மக்கள் காங்கிரஸை ஊடுருவச் செய்வதற்கான ஒரு வாய்ப்பும் றிசாட் பதியுதீனுக்கு கிடைத்திருக்கின்றது எனலாம். கூட்டமைப்பாக போட்டியிடும் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் காங்கிரஸிற்கு இது முதலாவது உள்ளுராட்சி தேர்தல் என்பதால் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுடன் கிடைப்பது இலாபம்தான். ஆயினும், அக்கட்சித் தலைவரால் பிரதேச ரீதியாக நியமிக்கபட்டுள்ள கட்சி முக்கியஸ்தர்களின் அரசியல் அனுபவம் இன்மையும், உள்ளக குத்துவெட்டுக்களும், ஒருங்கிணைப்பின்மையும் பெரும் சிக்கலாக உருவெடுக்கலாம். அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை இதற்கு ஒரு அறிகுறியாக எடுத்தாளப்படலாம்.

மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு, மு.கா.வின் தீவிர ஆதரவுத் தளமும் தேசிய காங்கிஸை தலைவர் அதாவுல்லாவின் விசுவாசிகள் தளமும் சவாலாக அமையும். இதற்கு மேலதிகமாக, மு.கா.வைப் போலவே ம.கா.வுக்கும் தேசியப்பட்டியல் எம்.பி. விவகாரமும் ஒரு சிக்கலை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

அதாவது, சம்மாந்துறை மக்கள் அதிகப்படியான வாக்குகளை வழங்கியமைக்கு கைமாறாக தமக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை கட்சித் தலைவர் இன்னும் வழங்கவில்லை. அவ்வாறு வழங்கினால் இன்னும் ஆதரவை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால், புத்தளத்தில் இருக்கின்ற அப்பதவியை இப்போது மீளஎடுப்பது நல்லதல்ல என்று றிசாட் கருதுகின்றார். தேர்தலுக்கு பின்னர் அதை வழங்குவதாக சம்மாந்துறைக்கு வாக்களித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எம்.பி.பதவியை வழங்குமாறு அழுத்தங்கள் அதிகரித்ததையடுத்து சமயோசிதமாக பேசி அமைதிப்படுத்தப்பட்டுள்ள களம், மீள சூடுபிடிக்குமானால் அது ம.கா.வுக்கு தலையிடியை கொடுக்கும் வாய்ப்புள்ளது.

தேசிய காங்கிரஸ்

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தில் பயணிக்க மாட்டேன் என்று கூறிவந்த ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இம்முறை வடக்கு கிழக்கில் 15 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுகின்றது. சில சபைகளில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் கட்சியின் குதிரைச் சின்னத்தில் தனித்தும் போட்டியிடுகின்றது.
அதாவுல்லா மீளவும் தனது தளத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தாப்பமாக இத்தேர்தல் நோக்கப்படுகின்றது. இந்நிலையில், முஸ்லிம் கூட்டமைப்பு கோட்பாட்டு அரசியலும் அதனூடாக மக்கள் காங்கிரஸ் கட்சி ஊடுருவதும் தேசிய காங்கிரஸிற்கு, அக்கரைப்பற்றுக்கு வெளியில் கொஞ்சம் சவாலாக அமையும். மு.கா.வின் வாக்காளர் தளம் அந்தளவுக்கு அதாவுல்லாவுக்கு சவாலாக இருக்குமென்று சொல்ல இயலாது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஓரிரு வட்டாரங்களின் களத்தை சூடுபிடிக்கச் செய்யும்.

நீண்டகாலமாக சற்று ஓய்வாக இருந்து சிந்தித்து மீண்டும் களமிறங்கியிருக்கின்ற அதாவுல்லாவின் அரசியல் சூட்சுமங்கள் தோற்றுப் போகும் என்று யாரும் கருத முடியாது. ஆனால், அவர் வகுத்திருக்கின்ற வியூகம் தொடர்பில் ஆங்காங்கே முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு திருப்திகரமான விளக்கத்தை முன்வைப்பதன் மூலம், அதனால் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
எந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் ஒற்றுமையே எமது பலம் என்ற அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப்பாகவோ அல்லது வேறு அடிப்படையிலோ ஒரு இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் எவ்வழியிலேனும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் உருப்படிகளை விட உருப்படியானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்
– ஏ.எல்.நிப்றாஸ் (24.12.2017)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*