சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல்: அணுகுமுறைமையில் மாற்றம் தேவை

Spread the love

எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05

சாய்ந்தமருது பல தேர்தல் களங்களை சந்தித்திருக்கின்றது. அப்போதெல்லாம் நேர்மையாகவும் சமூகநலன் கருதியும் வாக்குகளை அளித்து வந்திருப்பதும் அதன் வரலாறாகும். ஆனால், எதிர்வரும் 10.02.2018இல் நடைபெறவிருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் வழமைக்கு மாறாக சாய்ந்தமருது மக்களின் வரலாற்றுத் தேவையாக இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இலக்கை நோக்கிய பயணத்தில் பாதை தவறிச் செல்லாது பயணிக்க வேண்டிய பொறுப்பு இவ்வூர் மக்கள் மீது இருப்பது போன்று, இம்மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தங்களை மாற்றிக்கொள்ள வருகின்றவர்களும் கால சூழலுக்கு ஏற்ப தேவையான விட்டுக்கொடுப்புக்களை எத்தரப்பினர்கள் வழங்க வேண்டுமோ அத்தரப்பினர்கள் செவ்வென செய்வதற்கு தம்மை உடன்படுத்திக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்கின்ற யதார்த்தத்தையும் தட்டிக்கழித்து விடக்கூடாது.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை ஒன்று தோற்றுவிப்பது குறித்து கடந்த 1988களிலிருந்து முன்வைக்கப்பட்டு வருவதும் கொள்கை அளவில் நம்மத்தியில் இருக்கக்கூடிய முஸ்லிம் கட்சிகளும் வேறு சில சிறிய கட்சிகளும் ஏற்றுக்கொண்ட போதிலும் அவற்றினை நடைமுறைப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வருகின்றபோது கல்முனை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் நிறுவப்பட்டால் கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் அரசியல் அதிகாரத்துவம் இழக்கப்பட்டுவிடும் என்கின்ற காரணத்தை முன்வைத்து மறுத்து வருவதையும் பார்க்கின்றோம்.

இதனால்தான் சாய்ந்தமருதுக்கென உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட்டாலும் கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோகாது என்பதை செயற்பாட்டு ரீதியாக நிருபிப்பதற்கு இந்த உள்ளூராட்சி தேர்தலில் தவறின் மற்றொரு சந்தர்ப்பத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதை இதில் நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு நிலைப்பாடாகும். ஏனெனில், இத்தேர்தலை அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் மாகாண சபை மற்றும் பொதுத்தேர்தல் ஆகும். இவற்றில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தும் வகையில் வாக்களிப்பை மேற்கொண்டு நிருபிக்க முடியாத நிலை இருப்பதையும் நாம் மறந்துவிட முடியாது. மேற்சுட்டிக்காட்டிய இரண்டு தேர்தல்களும் பெரும்பாலும் கல்முனை தொகுதி என்ற அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டியது ஆகும்.

சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நிருபிக்க முனைகின்ற பக்கம் நிறைவேற்றப்படுவதற்கு ஏதுவான நகர்வுகளை செய்வதற்கு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் வழிவிட வேண்டிய நியாயத்தை அக்கட்சிகளின் தலைமைத்துவங்களும், அக்கட்சி அரசியல் பிரதிநிதிகளாக இங்கு போட்டியிடுகின்ற அபேட்சகர்கள் விரும்பியோ விரும்பாமலோ வழிவிடுவதுதான் நியாயபூர்வமான பண்பாக இருக்க முடியும்.

இவ்வாறு கோருவதென்பது கட்சி அரசியல்களின் செயற்பாட்டு ஜனநாயகத்திற்கு விரோதமான சிந்தனையாகவோ அரசியல் கட்சிகளின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு எடுக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கையாகவோ இதனைப் பார்க்கக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னர் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்னிறுத்தி அரசியல் செய்வதற்கு சாய்ந்தமருது மக்கள் முன்வரவிலை. ஆதலால், கட்சிகளுக்கெதிரான போராட்டமாகவோ அதன் அரசியல் பிரதிநிதிகளை செயலிழக்க செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு பயணமாக உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை வலுப்படுத்தும் வகையிலான தேர்தல் கள சந்திப்பை பார்க்கலாகாது. அவாறு பார்ப்பதென்பது அம்மக்களின் உணர்வை, வரலாற்று தேவையை நசுக்குவதாகவே அமைய முடியும்.

மக்களின் நலன் பேணுவதற்குத்தான் அரசியல் கட்சிகளும் தலைமைத்துவங்களும் இருக்க வேண்டும். மாறாக கட்சிகளின் தலைமைத்துவங்களை பாதுகாப்பதற்கு மக்கள் பாவிக்கப்படக்கூடாது என்கின்ற பொது அடிப்படையில், சாய்ந்தமருது மக்களின் உணர்வு என்ன என்பதை சுதந்திரமாக வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு துணையாக இருக்க வேண்டும். இதனை விடுத்து தேர்தல் சட்டம், நாட்டுச் சட்டம், யாப்பு அனுமதி, கருத்துச் சுதந்திரம், பொலிஸாரின் கடமைக்கு குந்தகமானது போன்ற சொற்பிரயோகங்களை பாவித்து இம்மக்களின் உணர்வை கொச்சைப்படுத்தக்கூடாது. இவைகளுக்கு எதிரானதாகவோ தீவிரவாதத்தன்மையாகவோ செயற்படுவதற்கு துவங்கப்பட்ட ஒரு சுயேற்சைக் குழுவாகவும் அதற்கு துணை போகின்றது பள்ளிவாசல் தலைமைத்துவம் என்கின்ற பிழையான சித்தரிப்புக்களை முன்வைப்பது முறையல்ல.

இதற்கு வசதியாக தேசிய காங்கிரஸ், சாய்ந்தமருது தேர்தல் வட்டாரங்களில் தமது கட்சிக்கான ஆதரவை திரட்டும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தாது வழிவிட்டிருக்கின்றது. அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவர் ஜெமீல் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலில் கள்மிறங்கியிறுக்கின்ற சுயேட்சை குழுவை ஆதரிப்பதாகவும் அதற்காக வேண்டி தமது கட்சி சாய்ந்தமருது வட்டாரங்களில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தாது தவிர்த்திருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சாய்ந்தமருது மக்களின் எழுச்சியையும், தேவையையும் மதிப்பதாகவும் அதற்காக தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தமது கட்சி போட்டி வேட்பாளர்களை சாய்ந்தமருது வட்டாரங்களில் களமிறக்கவில்லை என ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். ஆனால், இக்கட்சியின் விகிதாசார பட்டியலில் சாய்ந்தமருதைச் சேர்ந்த முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வர் சிராஸ் மீராஸாஹிபை நியமித்திருப்பதானது அக்கட்சியின் தலைமைத்துவம் இம்மக்களின் உணர்வை மீறிய செயற்பாட்டுக்கு வந்திருக்கின்றதா என்கின்ற ஒரு ஐயத்தையும் எழுப்புகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களின் உணர்வுடன் விளையாடுவதற்கும் அம்மக்களுக்குள் கலவர நிலையை தோற்றுவிக்கும் ஏதுக்களுக்கு இட்டுச் செல்லும் மாதிரியிலும் தமது கட்சியின் வேட்பாளர்களை போட்டி ரீதியாகவே களமிறக்கியிருக்கிறது. இது இவ்வூரின் சுமூக நிலைக்கும் ஆரோகியமான இயல்பு நிலைக்கும் ஊறு விளைவிப்பதாகவும் உண்மைக்கு உண்மையான அம்மக்களின் தேவையான உள்ளூராட்சி மன்ற நிறுவுதலை பின்னடைய செய்வதற்கும் பின்னப்பட்ட ஒரு வலையாகவே அவதானிக்க முடிகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிப் பலம் கல்முனை மாநகர சபையில் அமைய வேண்டும் என்கின்ற அவர்களின் ஆதிக்க வெறிக்கு சாய்ந்தமருது மக்களை பலி கொடுப்பதற்கு துணிந்திருக்கின்றது என்பதை அவர்களின் தேர்தல் கள முன்னெடுப்பு சந்தேகமின்றி நிருபிக்கின்றது. இவ்வாறு நாம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதற்கு வலுவான ஒரு காரணத்தை இவ்விடத்தில் முன்வைக்க முடியும்.

கல்முனை மாநகர சபைக்காக வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்களில் சாய்ந்தமருது நீங்கலாக உள்ள 16 தனி அங்கத்துவ வட்டாரங்களும் ஒரு பல் அங்கத்துவம் (இரட்டை அங்கத்துவம்) உட்பட 17 வட்டாரங்களிலிருந்த் 18 உறுப்பினர்கள் தெரிவாகுவர். இதில் எத்தகைய சந்தேகங்களுக்கும் அப்பால் 11 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகுவார்கள். ஆகவே, முஸ்லிம் உறுப்பினர்களை விடவும் தமிழ் உறுப்பினர்கள் அதிகரிப்பதற்கான எந்த வாய்ப்பையும் கொண்டில்லை. ஆனால், மு.கா.வுக்கு இருக்கின்ற நம்பிக்கையீனம் எதுவென்றால் இந்த 11 முஸ்லிம் உறுப்பினர்களையும் தமது கட்சி சார்பில் வெற்றிபெறச் செய்ய முடியுமா என்பதுதான். இதற்கு பக்கபலமாக சாய்ந்தமருது மக்கள் மு.கா.வின் பக்கம் இருப்பார்கள் என்கின்ற அடிப்படையில் தான் அவர்களது வேட்பாளர்களை நிறுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டிருப்பதன் பின்னணியாகும்.

மு.காவின் கட்சி நலன் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் காட்டுகின்ற அக்கறையில் ஒரு துளியேனும் இம்மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதற்கு அவர்கள் தயாரில்லாத நிலையை இது மிக தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. அதுமாத்திரம் அன்றி நடைபெறப்போகின்ற உள்ளூராட்சி தேர்தலை அடுத்து அமைக்கப்படுகின்ற சபைகளைப் பொறுத்தவரை குறித்ததொரு சபையில் 50மூ க்கு மேற்பட்ட ஆசனங்களை பெறாவிடத்து அதன் முதல் அமர்வில் அச்சபையில் உள்ள உறுப்பினர்கள் கலந்தாலோசித்து முதல்வர், பிரதி முதல்வர் அல்லது தவிசாளர், பிரதி தவிசாளர்களையும் தெரிவு செய்துகொள்ள முடியும் என்கின்ற சட்ட ஏற்பாடு இருப்பதென்பது மு.கா. வுக்கு தெரியாத பக்கமல்ல. ஆயின், முஸ்லிம் முதல்வரைக் கொண்டதாக கல்முனை மாநகர சபை அமையும் என்பதில் மிகத் தெளிவு பெற்றிருக்கும் நிலையில்தான் அது தமது கட்சியின் பிரதிநிதிகளின் தனித்துவ முதல்வராக ஆக்கிகொள்ள வேண்டும் என்பது தவிர்ந்த வேறு நோக்கம் இதிலிருப்பதற்கு எவ்வித வாய்ப்புமில்லை.

சாய்ந்தமருது மக்கள் தமக்கென்று உள்ளூராட்சி மன்றத்தை நிறுவுவதில் பெரும்பான்மையான மக்கள் விருப்போடு இருந்தால் அதனை நிரூபித்துக்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் இடமளிப்பது காலத்தின் கட்டாயமாகும். அவ்வாறு அம்மக்கள் உள்ளூராட்சி மன்றத்தை நிறுவுவதில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை என்றால், அவர்கள் தமது ஆதரவை இத்தேர்தலில் மு.கா. அணியினருக்கு காட்டுவதை இலகுபடுத்தி வைக்கும் வகையில் மு.கா.வினால் நிறுத்தப்பட்டிருக்கின்ற வேட்பாளர்கள் இயல்பாக வென்றுவிடக்கூடிய சாத்தியமிருப்பதை மு.கா. தலைமைத்துவமும் அக்கட்சியின் பிரதிநிதிகளாக இங்கு போட்டியிடுகின்ற அபேட்சகர்களும் உணர்ந்து அதிக விட்டுக்கொடுப்புக்களையும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான ஏட்டிக்குப் போட்டியான அரசியல் நடவடிக்கையிலிருந்து தவிர்ந்திருப்பதென்பது அவர்கள் மீதான கடமை என்ற உணர்வோடு செயற்பட வேண்டியதையும் அவர்கள் புறந்தள்ளிவிடக்கூடாது.

இந்த நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் எடுக்கின்றதோ இல்லையோ இங்கு போட்டியிடுகின்ற அபேட்சகர்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு முக்கிய பக்கமாகும். உண்மையில் மு.கா. வேட்பாளர்களுக்கு போட்டியாளர்களாக ஏனைய முஸ்லிம் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருக்காமை தங்களுக்கு வலுச்சேர்க்கக்கூடியதாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு முக்கியமானது ஒரேயொரு விடயம் மாத்திரம்தான். சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு உள்ளூராட்சி மன்றம் ஒன்று வேண்டும் என்றால் அக்கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கியிருக்கின்ற சுயேட்சை குழுவை ஆதரித்து தமது வாக்குகளை பதிவு செய்துகொள்வது அல்லது தேவை இல்லை எனில் அதனடையாளமாக மு.கா. அணியினரை ஆதரிப்பார்கள்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தேவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மாஆ பள்ளி வாசலின் அனுசரனையோடு களமிறக்கப்படிருக்கின்ற வேட்பாளர்கள் மு.கா.வினரையும் விட பொறுப்புணர்ச்சியோடும் சிந்தனை வயப்பட்டவர்களாகவும் அமைதிக்கு பங்கம் வராத வகையிலும் தமது தேர்தல் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர்கள் மீது விதியாக்கி இருப்பதை அவர்கள் ஒருபோதும் மறந்து செயற்படலாகாது. தமது இலட்சியத்தை அடைந்துகொள்வதற்கான உறுதியில் வீரமும் தீரமும் இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி அடுத்தவர்களின் உரிமைகளை உதாசீனம் செய்யும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்கின்ற பக்குவமும் மிக முக்கியமானதாகும்.

நமது கோரிக்கை மீது நமது மக்கள் ஒன்றித்து நிற்கின்றனர் என்பதில் நமக்கு முதலில் உறுதி வேண்டும். நமது மக்கள் நமது போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்தவர்களாக மாற்றுவதற்கு தேவையான நியாயங்களை, அவசியங்களை பற்றி மக்கள் மயப்படுத்துவதில் அதிக ஈடுபாட்டை கொண்டிருத்தல் வேண்டும். அதற்கு தேவையான பிரசார உத்திகளை கையாள்வதற்கு போதிய திட்டமிடல்களை முன்னிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

வன்முறைமைகளினூடாக எந்த இலட்சியங்களையும் யாரும் அடைந்து விட முடியாது என்பதுதான் எதார்த்தமாகும். மக்களின் மனங்களில் ஆழமாக நமது தேவைப்பாடு பதிகின்ற போதுதான் அந்தப் போராட்டம் உருக்குலையாது கருக்கொள்வதற்கும் இலக்கை அடைந்து கொள்வதற்கும் வழி வகுக்கும் என்பதுதான் அறிவார்ந்த முடிவாகும். உண்மையில் வன்முறை என்பது நமது இலட்சியத்திற்கு அப்பால் அனுதாபங்களை தோற்றுவித்து இலக்கை எய்தமுடியாத இடையூறை தோற்றுவிக்க வல்லதாகும்.

வன்முறையின் இன்னொரு பாதிப்பை நமது சிந்தனைக்கெடுத்தாக வேண்டும். எந்த தரப்பினர்களின் தூண்டுதல்களினால் வன்முறைகள் தோற்றுவிக்கப்படுகின்றது என்பதற்கப்பால் அதன் அழிவுகளின் பெறுபேறுகள் நமது சாய்ந்தமருதூரின் மண்ணை சேர்ந்த மக்கள்தான் சந்திக்கின்றனர் என்ற உணர்வும் தெளிவும் நம் எல்லா தரப்பினர்களுக்கும் இன்றியமையாத ஒன்றென்பதையும் நாம் மறுத்துவிடலாகாது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை கோரிக்கையாக கொண்டியங்குகின்ற சுயேட்சை குழுவிற்கு மிகத் தூய்மையோடு செயற்பட வேண்டிய கடப்பாடு அதிகம் இருக்க வேண்டும். ஏனெனில், நமது சாய்ந்தமருது மக்களில் தெளிவடையாத பகுதியினர்கள் தெளிவடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் அதற்கான நியாயங்களையும் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவூட்டல்களை பரப்புரை செய்ய வேண்டிய தேவையும் நமக்கிருக்கின்றது என்பதை உணர்ந்தாக வேண்டும்.

நாம் இந்த தேர்தலை எதிர்கொள்வதென்பது கல்முனை மாநகர சபை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வியூகத்தையோ நமது கோரிக்கையை மறுக்கின்ற கல்முனை முஸ்லிம் சமூகத்தை பகையாளர்களாக கருதி செயற்படுகின்ற போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அவர்களின் அச்சம் உண்மைக்கு புறம்பானது என்பதை உணர்த்துதல்தான் அவர்களுக்கு நாம் செய்கின்ற பணியேயன்றி வேறில்லை என்பதை நாம் திட்டவட்டமாக நிரூபிப்பவர்களாக தொழிற்பட வேண்டும்.

அதுமாத்திரமன்றி, நமது சாய்ந்தமருதூர் மக்கள் முற்று முழுதாக அல்லது வாக்களிப்பவர்களில் 51 வீதங்களுக்கு மேற்பட்ட மக்கள் நமது ஊரில் உள்ளூராட்சி மன்றம் உருவாக வேண்டும் என்பதை விரும்புகின்றவர்கள் என்பதை பகிரங்கப்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கிக்கொடுப்பவர்களாக அல்லது விதைப்பவர்களாக செயற்பட வேண்டிய முழுப்பொறுப்பும் சாய்ந்தமருது சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்ற 06 வட்டார பிரதிநிதிகளினதும் ஒரே பணியாக இருக்க வேண்டும். மாறான எண்ணப்பாடுகள் ஒருபோதும் நமது வரலாற்றுத்தேவையை சபையேற்றுவதற்கோ அல்லது அடைந்துகொள்வதற்கோ வழியாகிவிடாது என்பதிலும் மிகுந்த அக்கறையும், கவனமும் நமக்கு வேண்டும்.

ஏனெனில், இந்த தேர்தலில் நமக்கென்று ஒரு உள்ளூராட்சி மன்றம் தேவை என்பதை வாக்களித்து அடையாளப்படுத்துவதினால் மாத்திரம் சபை ஒன்று நிறுவப்பட்டுவிடாது. மாறாக கட்சி அரசியலின் தேவைப்பாடும் இன்று பீதியோடு இருக்கின்ற கல்முனை மக்கள் தெளிவடைந்து தனியாக சாய்ந்தமருதுக்கு சபை வழங்கப்பட வேண்டும் என்று அவர்களும் நமக்காக உரத்து சொல்கின்ற ஒரு சூழலியலை தோற்றுவிப்பது அவசியம் என்பதையும் நமது சுயேட்சை குழுவினர் உணர்ந்து செயற்படுவதும் இவ்விடயத்தில் ஒரு முக்கிய பக்கம் எனக் குறிப்பிடுவது மிகையான அபிப்பிராயம் அல்ல.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*