அதிருப்தி அலைகள்…

Spread the love

எம்.எம்.ஏ.ஸமட்

ஒரு சமூகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அச்சமூகத்திற்கு தலைமை வகித்து, வழிநடத்தும் தலைமைகளின் ஆளுமையிலும், ஆற்றலிலும், வினைத்திறனிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், காலத்தையும் கருதி எடுக்கும் தீர்மானங்களிலுமே தங்கியுள்ளது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக் கட்டமைப்புக்குத் தேவையான ஆண்மீகம், அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற முக்கிய கூறுகள் ஒழுங்கு முறைப்படி வளர்ச்சி அடைகின்றபோது, அச்சமூகமும் அச்சமூகத்தின் எதிர்காலமும் சுபிட்சம் அடையும். இதனையடைவதற்க அச்சமூகம் சார் அரசியல் பலம் அவசியமாகும்.

சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உறுதியாகவும்,  தனித்துமிழக்காமாலும், சமூகத்திற்கான உரிமைகளையும், தேவைகளையும் அரசியல் பலத்தோடு பெற்றுக்கொடுக்கக் கூடியதான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்சி கொண்டுள்ள அரசியல் இலக்குகளை அடைய முடியும். அவற்றினூடாக மக்களது அபிலாஷைகளும்,  நலன்களும் நிறைவேற்றப்படுவதோடு அரசியல் பயணத்தையும்; வீழ்ச்சியின்றி வெற்றியுடன் முன்கொண்டு செல்வதற்கான வழிகள் திறக்கப்படுவது மாத்திரமின்றி மக்கள் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மாறாக, சமூகத்தின் பெயரால் கட்சிகளை உருவாகி, அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பின் சுய நிகழ்ச்சி நிரல்களை வெற்றி கொள்ளும் பொருட்டு; பணம், பதவிகளுக்காக அக்கட்சியினால்  சமூகத்தின் அபிலாஷைகள் அடமானம் வைக்கப்படுமாயின், அக்கட்சியும், அச்சமூகமும், மலினப்படுவதையும், நகைப்புக்குள்ளாவதையும், அரசியல் பலம் பலவீனப்படுவதையும் அக்கட்சி மீதும் கட்சியை வழி நடத்துகின்ற தலைமையின் மீதும் அக்கட்சியை விசுவாசித்தவர்கள் அதிருப்தி கொள்வதையும் தவிர்க்க முடியாது.

இவ்வாறானதொரு நிலைக்கு கிழக்கிலும், தென்னிலங்கையிலும் முஸ்லிம்கள் செறிந்தும் செறிவின்றியும் வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தின் அதிகளவிலான ஆதரவைப் பெற்ற கட்சியாகக் கருதப்படும் முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஏனெனில், இக்கட்சியை விசுவாசித்து, இக்கட்சிக்கு தொடர்ச்சியாக தேர்தல்களில் வாக்களித்து வந்த மக்களிடையே காணப்படுகின்ற அதிருப்திமிக்க கருத்தாடல்களையும் முஸ்லிம் காங்கிரஸிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொள்கின்ற கட்சித் தொண்டர்களின் எண்ணிக்கையையும் அலசியராகின்றபோது இக்கட்சி இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடிகிறது. இருப்பினும், கட்சி தாவுகின்றவர்களில் பலர் சமூக நலனை விட சுய நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகொள்வதற்கான சந்தர்ப்பமாக கட்சித் தாவல்களை முன்னெடுக்கின்றனர் என்பதை இங்கு பதிவிடுவது பொறுத்தமாகும். இக்கட்சி தற்போது அதிருப்திக்குள்ளாகி பலமிழந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றமை யாரின் தவறு என்பது தொடர்பில் முழுமையான சுயவிசாரணைக்கு உட்படுத்தி பிழைதிருத்தம் செய்ய கட்சியும் கட்சியின் தலைமையும் முயலாமையின் பின்னணியென்ன என்ற கேள்வியும் மறு பக்கம் எழுகிறது.

முஸ்லிம் காங்கிரஸும் கடந்த காலங்களும்

இந்நாட்டில் புரையோடிப் போய் இருந்த இனப்பிரச்சினையானது, குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசியல் தலைமைகளினால் பெற முடியாத நிலை உருவானபோது அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் பலம் பலவீனமடைந்த போது, தங்களது சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்குமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் இயக்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மாற்று வழியில் பரிணாமடைந்து பல அழிவுகளையும் கண்டமை வரலாறாகும். இவ்வரலாற்றுத் தாக்கத்தினை நேரடியாக அனுபவித்தவர் என்ற ரீதியில், இலங்கையில் வாழும் மற்றுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகமும் இந் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது. முஸ்லிம் சமூகத்திற்கான உரிமைகளை பெறுவதற்கு தனித்துவமான ஒரு அசியல் பலம் அவசியம் என்று கருதிய மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார்.

1986ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது முதல் முறையான வழிகாட்டலின் பிரகாரம். முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. மக்களின் செல்வாக்கை பெற்றுக்கொண்டது. இக்கட்சி எதிர்நோக்கிய முதலாவது தேர்தலாக 1987ஆம் ஆண்டு நடைபெற்ற இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது 17 ஆசனங்களை பெற்று பலமுள்ள எதிர்கட்சியாக விளங்கியது. இக்கட்சியின் தாயகப் பூமியான கிழக்கில் இக்கட்சி மீது கொண்ட ஆதரவானது மக்களைக் கூட்டம் கூட்டமாக தாமாகவே இணையச் செய்தது. அஷ்ரப் சேர்த்த கூட்டம் என்பதை விட அஷ்ரபோடு தானாகச் சேர்ந்த கூட்டமென கட்சிப் போராளிகளைக் குறிப்பிடலாம்.

அஷ்ரப் எனும் ஆளுமையுள்ள தலைமைத்துவத்தின் சிறப்பான வழிகாட்டலால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிஸ், வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாது இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. திறமையும்,  முற்போக்கு சிந்தனையும், பல்துறை ஆற்றலும், சமூக நலனும் கொண்ட பலர் இக்கட்சியில் இணைந்தனர்.

இதனால், இக்கட்சி சந்தித்த தேர்தல்களில் பல வெற்றிப்படிகளைக் கண்டது. 1989ஆம் ஆண்டு விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ். 2,02,014 வாக்குகளைப் பெற்று தேர்தல் மாவட்ட ரீதியாக 3 ஆசனங்களையும் தேசிய பட்டியல் ரீதியாக ஒரு ஆசனத்தையும் பெற்று மொத்தமாக 4 ஆசனங்களை பெற்றுக் கொண்டது. ஒரு கட்சி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு குறுகிய காலத்திற்குள் மக்களின் செல்வாக்கப் பெறுவது என்பது சாதாரண விடயமல்ல. இதற்குக் காரணம் சிறந்த வழிகாட்டலினூடாக அக்கட்சி வழிநடத்தப்பட்டதாகும். நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகித்த போதிலும், பல சவால்களுக்கு முகம் கொடுத்த போதிலும், சமூகத்திற்கான தேசிய குரலாக அக்கட்சி செயற்பட்டது. சமூகத்தின் உரிமைகளுக்காக சுயநலன்களுக்கு அப்பால் வாக்களித்த மக்களை ஏமாற்றாது அவர்களின் ஆதரவை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்பட்டது. மக்கள் சக்தியின் ஊடாக பலம் பெற்றது.

இதன் தொடர்சியாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்லிலும் பார்க்க மொத்த வாக்கில் ஓரளவு சரிவு காணப்பட்ட போதிலும் தேர்தல் மாவட்ட ரீதியாக 6 ஆசனங்களையும் தேசியல் பட்டியல் ரீதியாக ஒரு ஆசனத்தையும் பெற்று மொத்தமாக 7 ஆசனங்களை 1994ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்டது. இந்த 7 ஆசனங்களுமே தலைவர் அஷ்ரபின் பேரம் பேசலுக்கான பலமாகவும் 17 வருட கால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தன.

ஒரு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மற்றுமொரு ஆட்சியை ஏற்படுத்தி அதனூடாக தனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், தேவைகளுக்கும் முடிந்தளவிலான தீர்வைப் பெற்றுக் கொடுத்தது மாத்திரமின்றி, ஆண்மீக ரீதியான செயற்பாடுகளுக்கும், கல்வி ரீதியான வளர்ச்சிக்கும், பொருளாதார ரீதியான விருத்திக்குமான அபிவிருத்திப் பணிகளை இன, மத வேறுபாடின்றி முஸ்லிம் காங்கிரஸின் முதுகெழுப்பாகக் கருதப்படும் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி தேசிய ரீதியாகவும் தனது ஆளுமையுள்ள செயற்பாட்டினால் அரசியல் சக்தியின் பலத்தை புடம்போட்டுக் காட்டினார்.

அத்தோடு, இனத்துவத்தினூடான அரசியலை மாத்திரம் முன்னெடுப்பது எதிர்கால நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் தேசிய இனமாக வாழும் முஸ்லிம்களை தேசிய அரசியலினூடாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டும் என்றும் கருதிய அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்து அக்கட்சியினூடாக தேசிய மட்டத்தில் பல இலக்குகளை அடைந்து கொள்ளவும் திட்டமிட்டு, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸை இணைந்து போட்டியிடச் செய்த அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியையும் தேர்தல் களத்தில் இறக்கினார்.

இருப்பினும், அத்தேர்தலை அவரால் சந்திக்க முடியவில்லை. தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவரை அகால மரணம் அழைத்துக் கொண்டது. இருந்தும், அத்தேர்தலில் 1, 97, 983 வாக்குகள் தேசிய ரீதியாக தேசிய ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்ததுடன் ஒட்டுமொத்தமாக 11ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாகக் கிடைக்கப் பெற்றன. அஷ்ரபின் அரசியல் சாணக்கியம் பல்வேறு அரசியல் வெற்றிகளை முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு சிறுபான்மை சமூகத்திற்கும் பெற்றுக்கொடுத்தது. அந்த வெற்றியின் பலன்களை அதிகம் நுகர்தவர்கள் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும் அவரின் மரணம் முஸ்லிம் காங்கிரஸை பிளவுக்குள்ளாகியதோடு மக்கள்சார் இலக்குகளை அடைந்து கொள்ளும் தலைமைகளையும் அடையாளம் காண முடியாது பெரும் தலைமைத்துவ இடைவெளியை விட்டு சென்றது.

இதனால், மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாத தலைமைகளைளும் அத்தலைமைகளின் தனித்துமிழைந்த செயற்பாடுகளையும் ஜீரணிக்க முடியாத நிலைக்கு மக்களையிட்டுச் சென்றுள்ளது. இதன் விளைவு எக்கட்சி மக்கள் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாக கடந்த காலங்களில் விளங்கியதோ அக்கட்சி மீதான அதிருப்தி அலைகளை தற்காலத்தில் மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம்களிடையே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுவதை ஏற்காமலிருக்க இயலாது.

அதிருப்தியும் கட்சிகளின்; இருப்பும்

அஷ்ரபின் மரணத்தின் பின்னர் இவ்விருகட்சிகளை வழி நடத்துவது யார் ?, யார் இக்கட்சிகளுக்கு ஆளுமையுள்ள தலைமைப் பொறுப்பை ஏற்பார்? யாருக்கு இந்தக்கட்சிகளின் தலைமைப் பெறுப்பு செல்லும் என்று தலைவர் அஷ்ரபினால் முன்கூட்டி அறிவிக்கப்படாத நிலையில் தலைமைப் பதவியை வகிப்பதற்கு ஆளுமையும் ஆற்றலும் சமூகத்தை வழிநடத்தும் பக்குவமும் இல்லாமல் இருந்தவர்கள் கூட இக்கட்சிக்கு தலைமை தாங்க முன்வந்தனர். இந்நிலையில் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்ட இரு கட்சிகளும் ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரப் என்ற இரு தலைமைகளின் கீழ் செயற்பட பிளவுபட்டது.

இவ்வாறு பிளவுகுள்ளான இரு கட்சிகளில் ஒன்று செயழிலந்த நிலையில் மற்றைய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் பிளவுக்குமேல் பிளவுகளை எதிர்கொண்டது. இதனால், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தேசிய காங்கிரஸும் அதன் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் என்ற இரு கட்சிகள் தோற்றம் பெற்றன. இக்கட்சிகள் தேசிய நீரோட்டத்தை விடவும் பிராந்திய நீரோட்டத்தில் சங்கமித்து பிராந்தியங்களின் வளர்ச்சியிலும், விருத்தியிலும் செல்வாக்குக் செலுத்தும் கட்சிகளாக செயற்பட்ட போதிலும், அகில இலங்கை மக்கள் காங்கிஸின் வளர்ச்சிப் பரிமாணம் வேகமாக இடம்பெற்றுவருவதைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்நிலையில் தேசிய காங்கிரஸின் தலைமை மீதான அதிருப்தியை விட தலைமயைச் சூழ புடைசூன்டிருந்த கட்சித் தொண்டர்கள் மீதான அதிருப்தி தேசிய காங்கிரஸ் மீத அதிருப்திக்கு காரணமாக இருந்தது என்பது சுட்டிக்காடட வேண்டியது. இதன் பாதிப்பை கடந்த பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸை எதிர்நோக்கச் செய்தது.

அத்துடன், 2015 ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் முதன்முறையாகப் போட்டியிட்டு ஏறக்குறைய 33, 000 வாக்குகளைப் பெற்றதைக் கொண்டு வேகமான வளர்ச்சிப் பாதையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னேரிச் செல்கிறது. முஸ்லிம் காங்கிரஸுக்கு மாற்றுத் தெரிவாகப் மக்கள் மனங்களில் புடம்போடப்படுகிறது என்பதையும் அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் மீதான அதிருப்தி அலைகளின் தொடக்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்ற வாக்குகளைக் கருதினாலும், கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியதனால அம்பாறை மாவட்டத்தில் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது என்பதைதையும் குறிப்பிட்டாக வேண்டும். இருப்பினும், கடந்த இரு வருட கால முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பயணம் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமலும்; வழங்கிய வாக்குறுதிகளைக்; காப்பாற்றாமலும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆரோக்கியமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாமலும் நகர்ந்தமையானது வாக்களித்த மற்றும் இக்கட்சியை விசுவாசித்து வளர்த்தெடுத்த மக்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இவ்வதிருப்தி அலையானது இக்கட்சியின் எதிர்கால இருப்பை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில எத்தகைய நிலைக்குக் கொண்டு செல்லும்; என்பதை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.

ஏனெனில், இக்கட்சியை பிரதிநிதிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சென்று அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களும், மாகாண சபைக்கும், மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கும் சென்று பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களும் அப்பதவிகளினூடாக வாக்களித்து பதவிகளைப் பெற்றுத்தந்த மக்களுக்கான சேவையினை வினைத்திறனுடன் மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதை சமகாலத்தில்; காண முடிகிறது.

வெற்றி பெறச் செய்த மக்களின் நலன்களில் அக்கறைகொள்ளாது சுயநலன்களுக்கு முன்னுரிமை வழங்கியதும், தங்களுக்கு முக்கியமானவர்கள் என்று கருதப்பட்டவர்களுக்கு அவர்களின் நடவடிக்கைகளில் முன்னுரிமை கொடுத்ததும், கிழக்கு மக்களின் அபிலாஷைகளையும், அவர்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கருத்திற்கொள்ளாது கட்சித் தலைமை மேற்கொண்ட தீர்மானங்களும், தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையும் முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால இருப்பையும் அரசியல் பயணத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.

இந்த உண்மையின் வெளிப்பாடுதான் அட்டாளைச்சேனை மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடிப் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் கொதிநிலையும் சாந்தமருதூரில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகளுமாகும் என்பதைப் புரியக் கூடியதாகவுள்ளது. இவ்வன்முறை நடவடிக்கை ஜனநாக வழிமுறைக்கும் சட்டத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள சவால் எனக் குறிப்பிடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஜனநாயக வழிமுறைகளையும் சட்டத்தையும் மீறி அரசியல் அபிரலாஷைகளை வெற்றிகொள்ள முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து செயப்பட வேண்டும் என்பதும்; கவனத்திற்குரியதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பூசல்களுக்கும், மக்கள் கொண்டுள்ள அதிருப்திகளுக்கும் கட்சித் தலைமையினதும் கட்சியினதும் திருத்தப்படாத பிழைகள் முதற்; காரணமாகவும், ஆரம்பகாலப் போராளிகளையும; அடிமட்டத் தொண்டர்களையும் புறக்கணித்து கட்சியின் ஆரம்பப் புள்ளியும் அதன் இலக்குகளும் ; கொள்கைகளும் அறியாதவர்கள்; கட்சித் தலைமையினால் கட்சியில் உயர்பதவி வழங்கப்பட்டு கட்சியின் நாயகர்களாகப போசிக்கப்படுவது இரண்டாவது காரணமாகக் கருதப்படுகிறது. இக்காரணப் பிழைகள் பிழைதிருத்தம் செய்யப்படாது அலட்சியம் செய்யப்படுமாயின் உருவாகியிருக்கும் அதிருப்தி அலைகள் மேலும் வீரியமடைந்து குறிப்பாக கிழக்கில் இக்கட்சியின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விடிவெள்ளி – 28.12.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*